கருக்கலைப்பு செய்வது இஸ்லாத்தில் கூடுமா..?
[பாலஸ்தீன அறிஞர் அப்துல் கதீம் ஸல்லூம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அரபியில் எழுதிய – Islamic Verdict on: Cloning - Human organ transplantation – Abortion-Test tube Babies - Life support systems – Life and death - حكم الشرع في : *الاستنساخ * نقل الأعضاء * الإجهاض * أطفال الأنابيب * أجهزة الإنعاش الطبية * الحياة والموت என்ற நூலில் கொடுக்கப்பட்ட விளக்கங்களைக் கொண்டு இக்கட்டுரை தொகுக்கப்பட்டது]
அபார்ஷன் எனப்படும் கருக்கலைப்பு மேற்கத்திய சமூகத்தின் பெரும்பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்திய சமூகம் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மை (secularism) என்ற அகீதாவின் அடிப்படையில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதனால் மேற்கத்திய சமூகம் தனிநபர் சுதந்திரத்தை புனிதப்படுத்துவதோடு திருமண வரம்பிற்கு அப்பாற்பட்ட கள்ள உறவுகளும்,விபச்சாரமும் பெருகி கருக்கலைப்பும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.
இத்தகைய மேற்கத்திய சமூகங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 45% குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பான குழந்தைகள் என்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சில நாடுகளில் இது 70% வரை உள்ளது.
விபச்சாரத்தின் மூலம் பிறக்கின்ற இத்தகைய குழந்தைகளை கவனிக்கக்கூடிய பொறுப்பு தாயின் மீது விழுவதால் கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதியை மேற்கத்திய நாடுகள் வழங்குகின்றன.
அமெரிக்காவின் தலைமையிலான குஃப்ர் தேசங்கள் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியமான குடும்ப அமைப்பை சிதைப்பதற்காக முஸ்லிம் நாடுகளிலும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கவேண்டுமென்று துடிக்கிறார்கள்.
இதன்மூலம் முஸ்லிம்களின் குடும்ப கட்டமைப்பை தகர்த்தெறிந்து, முஸ்லிம்களை இஸ்லாத்தைவிட்டும் வெகுதூரமாக்க வேண்டுமென்று எத்தனிக்கிறார்கள்.
முஸ்லிம் உலகிலுள்ள சமூகங்களைப் பொறுத்தவரை விபச்சாரம்,கள்ளத்தொடர்பு போன்றவை மேற்கத்திய நாடுகளைப்போன்று பரவலாக இல்லாத காரணத்தால் கருக்கலைப்புகள் மருத்துவ அடிப்படையில் தாயினுடைய உயிரைக் காப்பதற்காகவே செய்யப்படுகின்றன.
கருக்கலைப்பின் யதார்த்தமும் ஷரியத் விதிமுறையும்
மொழியியல் ரீதியான பொருளின்படி கருக்கலைப்பு என்பது கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவது ஆகும். இஸ்லாமிய ஃபிக்ஹ் அறிஞர்கள் பிரசவ காலம் பூர்த்தியாவதற்கு முன்பு கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதே கருக்கலைப்பு என்பதாக வரையறுக்கின்றனர்.
பிரத்தியோகமான மருந்து சாப்பிடுதல், சுமை தூக்குதல்,மருத்துவரை அணுகி கருக்கலைப்பு செய்யக் கோருதல்,போன்ற முறைகளில் கருவைக் கலைக்கலாம். சிலவேளைகளில் தானாகவோ அல்லது பலவந்த தாக்குதல் மூலமாகவோ கரு கலைந்துவிடுவதுமுண்டு.
கருக்கலைப்பு என்பது கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ நடக்கலாம்.முஸ்லிம் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு கருவைக் கலைப்பது ஹராமாகும்.
ஏனெனில் இது மனித உயிருக்கு எதிரான தாக்குதலாகும். இதற்கு இரத்த ஈட்டுதொகையாக - غرة குர்ரா (ஆண் அல்லது பெண் அடிமை) கொடுக்கவேண்டும். இது பிறந்துவிட்ட முழு மனிதனுக்கு பகரமாக கொடுக்கப்படவேண்டிய திய்யாவில் (الدية) பத்தில் ஒரு பங்காகும்.
அல்லாஹ்سبحانه وتعالى கூறுகிறான்:
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றி கொலைசெய்து விடாதீர்கள்.. (அல் இஸ்ரா : 33)
'பனூ லிஹ்யான்' குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்ப்பளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி), புகாரி,முஸ்லிம்)
இதனடிப்பையில் கருவுக்கு ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு அதைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சட்ட அறிஞர்கள் ஒருமித்து கூறியுள்ளனர்.
கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் கருக்கலைப்பு செய்வது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.கருத்தரித்த பின்புள்ள படிநிலைகளைப் பொறுத்து சிலர் அதை அனுமதிக்கவும், சிலர் அதை தடை செய்யவும் செய்கின்றனர். நாம் கூறுவது யாதெனில், கருத்தரித்து 40 அல்லது 42 நாட்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்வது ஹராமாகும். கரு முதிர்கருவாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்போது கை,கால், கண், நகம் போன்றவை வளர ஆரம்பிக்கின்றன.எனவே முன்பு கூறிய ஹதீஸ் அடிப்படையில் அதற்கு திய்யா(الدية) என்னும் இரத்த ஈட்டுத்தொகை வழங்குவதும் கட்டாயமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாக இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;-
நுத்ஃபாவின் மீது நாற்பத்து இரண்டு இரவுகள் கடந்துவிட்ட நிலையில் அல்லாஹ்سبحانه وتعالى வானவர் ஒருவரை அனுப்புகிறான். பிறகு (மூன்றாவது நாற்பது கழிந்தபின்) அதற்கு உருவமளித்து,அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.பிறகு (நாற்பத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், "இறைவா! இது ஆணா, பெண்ணா?" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், "இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார்.பிறகு அவர், "இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதி பதிவு செய்துவிட்டு பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். (தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை. (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில் நாற்பத்திரண்டு இரவுகள் என்பதற்கு பதிலாக أَرْبَعِينَ لَيْلَةً நாற்பது இரவுகள் என்று வந்துள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது – "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று. ( அத்தக்வீர் : 8,9)
ஆகவே கருவைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், கருவின் மீதான தாக்குதலான கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கும் தாயோ, தந்தையோ, கணவரோ, மருத்துவரோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாவர். எனவே இந்த குற்றத்தை இழைத்தவர்கள் இரத்த ஈட்டுத்தொகை என்னும் திய்யா செலுத்தவேண்டியது கட்டாயமாகும்.
கருத்தரித்து நாற்பது நாட்களுக்கு முன்னர் செய்யப்படும் கருக்கலைப்பை பொறுத்தவரை அது அனுமதிக்கப்பட்டதாகும். கருவின் மீதான தாக்குதலாக இது கருதப்படமாட்டாது என்பதால் செய்தால் இதற்கு தண்டனை கிடையாது. இது சம்பந்தமாக வரும் ஹதீஸ் இங்கே பொருந்தாது. நுத்ஃபாவை அது முதிர்கருவாக மாறுவதற்கு முன்பு கலைப்பது என்பது, குழந்தை பிறப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளும் அஸ்ல் செய்வது போன்றதாகும். அஸ்ல்(عزل) என்பது கருத்தருப்பை விரும்பாமல் இருந்தால் பெண்ணுறுப்பில் விந்து செலுத்தப்படுவதற்கு முன்னதாகவே ஆணுறுப்பை வெளியில் எடுத்து உயிரணுக்களை கருப்பையில் செல்லாமல் தடுப்பதாகும். இவ்வாறு செய்யும்போது பெண்ணுடைய சினை முட்டையும் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகிறது. அஸ்ல் செய்வதன் மூலமாக ஆணுடைய உயிரணுக்கள் பெண்ணுடைய சினை முட்டையை அடையாமல் கருத்தரிப்பு தடுக்கப்படுகிறது.அஸ்ல் செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.தன்னுடைய அடிமைப்பெண் கருத்தரிக்க விரும்பாததை முறையிட்ட நபருக்கு அஸ்ல்(عزل) செய்து கொள்ளுமாறு அனுமதி அளித்தார்கள்.
"விரும்பினால் அஸ்ல் செய்து கொள்ளுங்கள்.'' (முஸ்லிம்)
மேலும் சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே அஸ்ல் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றி அறிந்தபோதும் அதை தடை செய்யவில்லை.
''அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் 'அஸ்ல்' செய்வோராய் இருந்தோம்.'' (ஜாபிர் (ரலி), புஹாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராயிருந்தோம். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனினும் அதை தடை செய்யவில்லை (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, புஹாரி, முஸ்லிம்)
கருக்கலைப்பு செய்ய எப்போது அனுமதி உண்டு?
கரு தாயின் கருவறையிலிருந்தால் தாய் – சேய் இருவருக்கும் ஆபத்தளிக்கும் என்பதாக தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர் மூலம் அறிய வந்தால், கரு உருவான ஆரம்ப கட்டங்களில்; கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படும் முன்னரோ அல்லது ரூஹ் கொடுக்கப்பட்ட பிறகோ கருக்கலைப்பை மேற்கொள்ள அனுமதியுண்டு.இத்தகைய சூழ்நிலையில் மருத்துவ சிகிட்சை என்ற அடிப்படையில் கருவைக்கலைத்து தாயின் உயிரைக் காப்பாற்ற அனுமதிக்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மருத்துவ சிகிட்சை மேற்கொள்ள அனுமதித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் இது சிகிட்சையாகவே கருதப்படும்.
who are living in village or in poverty they never mind about this abortion but who has money, who educated and who are livening in City, they have only two kids or three, most of the Kandy area Muslim like this so, what about their situation in Islam.
ReplyDeletemy personnel opinion they are genius more than Allah because they are planning the life, Allah did mistake, who are planning for two kids they are against for Islam, because they are killing lot of kids it may a doctor or an engineer etc...
so please give deep brief about the life planning with two kids in Islam