பிரிட்டனில் இலங்கை முஸ்லிம்களுக்காக ஹஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
(Ikram Ilyas)
ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK ) குடிபெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களுக்காக முதன் முறையாக ஹஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (29/09/2013) அன்று இஷாஷ் தொழுகையை தொடர்ந்து மஸ்ஜிதுன் நூரில் (Sri lankan Muslim Cultural Centre - Harrow) மிகச் சிறப்பாக நடை பெற்றது. இவ்வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கைச் சகோதர சகோதரிகளுக்கு சில வழிகாட்டல்களை வழங்குவதும் ஹஜ் கடமையானோருக்கு அதனைத் துரிதப் படுத்துவதற்கு ஊக்குவிப்பதுவுமே நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
கல்ஹின்னை நலன்புரிச் சங்கத்தின் (GWA-UK) ஏற்பாட்டில் அதன் தலைவர் சகோதரர் R M Akbar அவர்களின் வழிகாட்டலில் கிரா அத்துடன் ஆரம்பமான அந்நிகழ்ச்சியானது மிகக் குறுகிய கால ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த போதும் அதில் கணிசமான இலங்கை சகோதர,சகோதரிகள் பங்கேற்றது சிறப்பம்சமாகும். பல உலமாக்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட அந் நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்திய Ash Sheikh, Al Hafil M Z M Shafeek அவர்கள் இவ்வருடம் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தயாராகி வந்திருந்தோருக்கு அதி முக்கியத்துவம் மிக்க விடயங்கள் சிலவற்றை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார். அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் நாடி மிகத் தூய எண்ணத்துடனும் 100% ஹலாலான வழியில் சம்பாதித்த பணத்துடனும் புனித கஹ்பாவை நோக்கிப் புறப்படுமாறு ஆர்வமூட்டியதுடன் புனித ஹஜ் பயணத்தின் போது ஒரு ஹாஜியானவர் எவ்வாறு தனது நாவை பேணிக்கொள்ளுமாறு இஸ்லாம் வழியுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை குர் ஆன் சுன்னாஹ் மூலம் கோடிட்டுக் காட்டி எச்சரிக்கை செய்த அவர் ஹஜ் கடமையானோர் அதனைத் துரிதப் படுத்துவதன் அவசியத்தையும் காரணமின்றி அக்கடமையினை பிற்போடுவதின் அல்லது உதாசீனம் செய்வதின் விபரீதத்தையும் மிகத் துல்லியமாக விபரித்துக் காட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இவ்வருடம் புனிதப் பயணம் மேற்கொள்ள தயாராகி வந்திருந்தோர் அவையில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டதுடன் அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக அவர்களுடன் சகலரும் முஸாபஹாச் செய்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முடிவில் GWA-UK யினால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த இராப் போசனமும் பரிமாறப் பட்டதுடன் சுமார் 10.15 மணியளவில் கூட்டம்
நிறைவுக்கு வந்தது.
குறிப்பு : நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரில் இதுவரைக்கும் ஹஜ் கடமையை நிறைவு செய்யாத பலர் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களில் தமது ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியில் இறங்கவுள்ளோம் எனும் சிறந்த நிய்யத்துக்களுடன் கலைது சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது. அல்ஹம்து லிள்லாஹ். புனித கஹ்பாவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சில வருடங்களாக பாரிய அளவிலான புனர் நிர்மாணப் பணிகளும் கட்டுமானப் பணிகளும் நடை பெற்று வருவதால் கடந்த சில வருடங்களின் முன்பிருந்தே தொடர்ச்சியாக கோட்டா அடிப்படையில் குறைந்தளவிலான யாத்திரிகளுக்கே சவுதி அரசாங்கம் ஹஜ்ஜுக்கான அனுமதியை வழங்கி வருவதை நாம் அறிவோம். ஆகவே இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2014 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் செய்வதற்கான நிய்யத் உள்ளவர்கள் முற்கூட்டியே தமது பயணத்திற்கான பதிவுகளையும் ஒழுங்குகளையும் செய்து கொள்ளுமாறு GWA-UK அன்பாய் வேண்டிக் கொள்கிறது.
Post a Comment