Header Ads



கல்முனை மேயர் சிராஸ், தன்னுடைய பதவியை கனவான் அடிப்படையில் துறந்து கொடுக்கும்போது..

(ஹனீக் அஹமட்)

அரசியலில் கனவான்களாக நடந்து கொள்பவர்களுக்கென்று - மக்கள் மத்தியில் ஒரு மகத்தான இடம் உள்ளது. கனவான்களை காலம் மறக்கடிப்பதில்லை. கனவான்கள் - காலத்தால் வாழ்பவர்கள். கல்முனை மாநகரசபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களும் தனது பதவி தொடர்பான ஒப்பந்தத்தைக் காப்பாற்றுவதன் மூலம் - அரசியல் வரலாற்றில் தானும் ஒரு கனவான் என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளதாக ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். 

கல்முனை மாநகரசபை மேயர் பதவி விவகாரம் தொடர்பில், மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஹனீபா மதனியிடம் தமது சந்தேகங்களைக் கேட்டபோதே, ஹனீபா மதனி மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன் போது அவர் மேலும் கூறியதாவது;

'ஸ்ரீ.மு.காங்கிரசின் தீர்மானங்களையும், தலைமையின் உத்தரவுகளையும் ஏற்று நடக்கும் ஒருவரே – அந்தக் கட்சியின் விசுவாசியாக இருக்க முடியும். மு.காங்கிரசின் ஆரவாளர்கள் - தமது கட்சிக்குத் துரோகமிழைப்பவர்களை ஒருபோதும் நேசித்ததில்லை. அந்தவகையில், கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி தொடர்பில் தற்போதைய முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பணித்துள்ளாரோ, அவ்வாறு நடந்து கொள்வதனூடாக, கட்சி மற்றும் தலைமை மீதான தனது உயர் விசுவாசத்தினை சிராஸ் அவர்களால் வெளிப்படுத்த முடியும் என மு.கா. ஆதரவாளர்கள் நம்புகின்றனர். 

'அரசியலில் சிராஸுக்கு அனுபவமில்லை, மு.காங்கிரசுக்கு சிராஸ் புதியவர். எனவே, கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட சிராஸுக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது' என்று கட்சிக்குள் எழுந்த குரல்களையும் மீறி - சிராஸுக்கு அரசியல் அடையாளமொன்றினை வழங்கியவர் தலைவர் ரஊப் ஹக்கீம். சிராஸ் மீது மு.கா. தலைவர் கொண்டுள்ள அன்பும், நம்பிக்கையும்தான் அதற்கான காரணங்களாகும். அவ்வாறாதொரு தலைவருக்கு – கல்முனை மேயர் பதவி விவகாரம் தொடர்பில் சிராஸ் - மாறு செய்ய மாட்டார் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அரசியலினூடாக பிரதேச வாதங்களை வளர்த்து குழப்படிகளை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கும் பேரினவாதிகளின் சூழ்ச்சி மற்றும் அரசியல் தரகர்களின் சதி போன்றவற்றில் இருந்து கல்முனை மாநகரையும், முஸ்லிம் சமூகத்தையும், தன்னை மேயராக அலங்கரித்து அழகு பார்த்த மு.காங்கிரசையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை – காலம், தற்போது சிராஸ் மீராசாஹிப் அவர்களின் கையில் கொடுத்திருக்கிறது. அதை, அவர் செவ்வனே நிறைவேற்றுவார் என்பது நமது எதிர்பார்ப்பாகும்.

கனவான் ஒப்பந்தந்தின் அடிப்படையிலும், கட்சித் தலைவரின் உத்தரவுக்கிணங்கவும் - தான் வகித்துக் கொண்டிருந்த பதவியைத் துறந்ததன் மூலம், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஐ. நைஸர் - இன்று கட்சிக்குள்ளும், வெளியிலும் சிறந்ததொரு நபராகப் பார்க்கப்படுகிறார். மட்டுமன்றி, நைஸர் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வரிப்பத்தான்சேனை மக்களும் தமது பெருங்குணத்தைப் பறைசாற்றியுள்ளார்கள். உண்மையில், நைஸருக்கும், வரிப்பத்தான்சேனை மக்களுக்கும் இது இழப்பல்ல என்பதை காலம் நிரூபிக்கும். கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு – நைஸர் செய்த மேற்படி தியாகமானது, எதிர்கால அரசியலில் இன்ஷா அழ்ழா அவரை மிக இலகுவாக வெல்ல வைக்கும். 

இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளரின் இந்த முன்னுதாரணத்தினை கல்முனை மாநகரசபையின் தலைவரும், அவரைத் தெரிவு செய்து அனுப்பிய சாய்ந்தமருதூர் மக்களும் பின்பற்றுவதன் மூலம், தங்களின் பெருங்குணத்தினையும், தியாக மனதினையும் வெளிப்படுத்த முடியும். 

சிராஸ் - தன்னுடைய பதவியை கனவான் அடிப்படையில் துறந்து கொடுக்கும்போது, கல்முனைப் பிரதேச மக்கள் - சிராஸுக்குக் கடமைப்பட்டவர்களாக மாறுவார்கள். அவ்வாறானதொரு நிலை, சிராஸுடைய எதிர்கால அரசியல் வெற்றிகளுக்கு மேலும் உரம் சேர்க்கும்.

கல்முனை மாநகரமானது - தென்கிழக்குப் பிராந்தியத்தின் முகவெற்றிலையாகும். சாய்ந்தமருதும் மருதமுனையும் கல்முனை மாநகரின் இரண்டு கண்களாகும். எனவே, கல்முனை மேயர் பதவி விவகாரம் தொடர்பில் எவரும் பிரதேச வாதங்கள் பேசி – தமது கண்களைக் குத்திக் கொள்ளக் கூடாது என்றுதான் இப் பிராந்தியத்திலுள்ள மக்கள் விரும்புகின்றனர்' என்றார். 

1 comment:

  1. பிரதேசவாதம் முஸ்லிம் காங்கிரசின் முதுகெழும்பாகும். அஷ்ரபின் முதல் வாதம் முஸ்லிம்களின் தலைமை கிழக்கிலிருந்து வரவேண்டும். இதுதான் பிரதேசவாதத்தின் ஆரம்பமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.