பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கௌரவிக்கும் வாகனப் பேரணி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
கொமன்வெல்த் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கௌரவிக்கும் முகமாக எம்.டீ.வி மற்றும் எம்.பீ.சி ஊடக நிறுவனங்களினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் , ஊடக அமைச்சு என்பவற்றுடன் இணைந்து பருத்தித்துறை முனை முதல் தெய்வேந்திர முனை ஊடாக கொழும்பு நகருக்கான வாகன பேரணி நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாகன பேரணியின் 06ம் நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மட்டக்களப்பு கேட் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நுழைவாயிலில் நடைபெற்றது.
இதன் போது பொட்ஸ்வானா நாட்டு தேசியக் கொடியை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஏற்ற மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி மாணவிகள் 20 பேர் பொட்ஸ்வானா நாட்டின் தேசிய கீதத்தை இசைத்தனர் அத்தோடு 54நாடுகளின் தேசியக்கொடியைத் தாங்கியுள்ள வாகனத்தின் பலகையில் அதிதிகள் தங்களது கையோப்பத்தை இட்டனர். அதே கல்லூரி வாத்தியகுழுவினர் 54 நாடுகளின் தேசியக்கொடியைத் தாங்கி வந்த வாகன பேரணியையும் அதிதிகளையும் வரவேற்று அழைத்து சென்றனர்.
அது மட்டுமன்றி பொட்ஸ்வானா நாட்டைப் பற்றி தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறு குறிப்பொன்றும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது குறித்த வாகனப் பேரணி மட்டக்களப்பு நகரில் இருந்து மோட்டார் போக்குவரத்து பொலிசாரின் உதவியுடன் மட்டு-கல்லடி ,காத்தான்குடி, ஆரையம்பதி மட்டு-கல்முனை பிரதான வீதி ஊடாக அம்பாறை நகரை நோக்கி புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment