வட மாகாண சபையின் அமைச்சர்கள் விபரம்
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது
கடந்த மாதம் 21ம் நாள் நடந்த மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக இழுபறி நிலை நீடித்து வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களான கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவான த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
ரெலோ சார்பில் போட்டியிட்டு, மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டு, யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன், விவசாய, கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுது.
Post a Comment