சவூதி அரேபியாவில் இஹ்வான்களை வேட்டையாடும் நடவடிக்கை தீவிரம்
(tn) ஐக்கிய அரபு இராச்சியத்தை தொடர்ந்து சவூதி அரேபியாவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதாக ‘மிடில் ஈஸ்ட் மொனிட்டர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்கனவே 90க்கும் அதிகமான சகோதரத்துவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி பாதுகாப்பு தரப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் அந்நாட்டின் அல் வதான் நாளிதழ் கடந்த புதன்கிழமை வெளியிட்ட முன்பக்க செய்தியில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்கள் அந்நாட்டின் நல்லொழுக்க மேம்பாட்டு மற்றும் தீய ஒழுக்க தடுப்பு ஆணைக்குழுவின் தலைவர் அப்சல் லதிப் அல் ஷெய்க்கை கொல்ல சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் அந்த சதி முயற்சி தோல்வியடைந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அல்ஷெய்க் ஐக்கிய அரபு இராச்சியத்தைப் போன்று சவூதியில் சகோதரத்துவ அமைப்புக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் பலரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதன் ஆரம்பகட்டமாக எகிப்து இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக சவூதி மக்களிடம் கையொப்ப வேட்டையில் ஈடுபட முயற்சித்த பெரிதும் அறியப்பட்ட பிரமுகரான முஸ்லிம் அல் அலாஜி என்பவர் கடந்த ஜுலை 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று மற்றொரு பிரபல பிரமுகரான மொஹமது அல் ஆரிபிக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட செய்தி வெளிச்சத்திற்கு வந்தது. ஆரிபி எகிப்து சகோதரத்துவ அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்த்த இராணுவ த்திற்கு முன்னின்று ஆதரவளித்த நாடுகளில் சவூதியும் ஒன்றாகும்.
மறுபுறத்தில் சவூதி உளவுப் பிரிவின் தலைவர் இளவரசர் பன்தர் பின் சுல்தான், எகிப்தில் ரபா அல் அதவியா மற்றும் அல் நஹ்தா சதுக்க முர்சி ஆதரவு ஆரிப்பாட்ட முகாம்களை கலைக்கும் எகிப்து இராணுவ நடவடிக்கையின் பின்னணியில் செயற்பட்டதாகவும் ஒருசில செய்திகள் குறிப்பிடுகின்றன.
Post a Comment