Header Ads



இலங்கையில் ஊடகங்கள் சுதந்திரமாக உயிர்வாழுமா..?

அதிகாலை ஐந்து மணியளவில் யாழ் உதயன் பத்திரிகை தலைமைக் காரியாலயத்துக்குள் நுழைந்த மூன்று ஆயுததாரிகள் சுயாதீனமாக இயங்கிவரும் பத்திரிகையின் செயற்பாட்டை உடனே நிறுத்தும் நடவடிக்கையில் நேரடியாக இறங்கியிருக்கிறார்கள். கிலஸ்நிக்கோவ் ரைபிள்களால் அச்சகத்தை முற்றாக சல்லடையாக்கிவிட்டு, அச்சக இயந்திரங்களை டீசல் ஊற்றி எரித்துவிட்டு இனி ஒரு போதும் உதயன் வெளிவராத வண்ணம் அச்சகத்தை முற்றாக துவம்சம் செய்துவிட்ட களிப்பில் திரும்பிச்சென்றிருக்கிறார்கள். எனினும் அச்சகத்துக்கு பின்னால் ஒரு இடத்தில் மிஞ்சியிருந்த பாரம்பரிய அச்சு இயந்திரங்களின் துணைகொண்டு உதயன் பத்திரிகை இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் பற்றிய தகவலையும் தாங்கி மறுநாள் காலை வெளிவந்திருக்கிறது. 

அப்பத்திரிகையின் பிரதான ஆசிரியர் பிரேம்நாத் தேவநாயகம் அப்பதிப்பில் எவ்வாறு கூறுகிறார் 'இது கருத்துச்சுதந்திரத்திற்கான போராட்டம்...எனவே பத்திரிகை எவ்வாறெனினும் வெளிவந்தேயாக வேண்டும். நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு தலைசாய்க்க மாட்டோம் என்ற செய்தி;யை தாக்குதலின் சுத்திரதாரிகளுக்கு அறிவிக்கிறோம்.'

இந்த ஆண்டில் ஊடகங்களுக்கு எதிரான அத்துமீறலின் பட்டியலில் இந்நிகழ்வு மிகவும் தெளிவாக தடத்தைப்பதித்திருந்தாலும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் முகம்கொடுத்துவருவது இலங்கையில் சர்வசாதாரணமான நிகழ்வாகி விட்டது. எல்லைகளைக்கடந்த ஊடகவியலாளர்கள் அமைப்பின் 'வருடாந்த ஊடகச்சுதந்திர சுட்டி' ஊடகச்சுதந்திர தரப்படுத்தலில் உலகின் 179 நாடுகளில் இலங்கையை 162வது இடத்தில் தரப்படுத்தியுள்ளது. பேர்மா, ரஸ்யா, ஈராக் போன்ற நாடுகள் கூட ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு முன்னிலையில் நிற்கிறதென்றால் அதன் பயங்கரத்தை நாம் புரிந்தாக வேண்டும். 

காலத்துக்கு காலம் மாறும் அரசியல் சதுரங்கத்தின் நடுவில் அகப்பட்டு பலமுறை தாக்குதல்களை சந்தித்த பத்திரிகை உதயன். முக்கிய அரசியல் பிரச்சனைகளில் உதயனின் நிலைப்பாடு தொடர்பாக எமக்;கு கருத்து பேதங்கள் இருந்தாலும், அது யாழ்வளைகுடாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக காலங்காலமாக இயங்கிவரும் பத்திரிகை என்பதை நாம் மறுக்கமுடியாது. இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்புகூட உதயனின் பிராந்திய அலுவலகம் ஒன்று முகமூடி அணிந்த குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அதன் முகாமையாளரும், விநியோக பணியாளர்களும் நையப்புடைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி மாதம் கூட ஒரு விநியோக பணியாள் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறாக 2011 ஆண்டிலிருந்து இன்றுவரை சுமார் 10 முக்கிய அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுகுறித்து அதன் ஆசிரியர் திரு. தேவநாயகம் 'எங்களது ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல, ஏனைய அனைத்து பணியாளர்களும் அனுதினமும் அபாயங்களை அனுபவித்து வருகிறார்கள். கடந்த வாரம் கூட எங்களது இளம் பெண்வரவேற்பாளர் 'நீ எப்போது வேலைக்கு வருகிறாய் எப்போது திரும்பி வீட்டுக்குச்செல்கிறாய் என்பதையெல்லாம் நாங்கள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறோம்' என்று கூறி மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் ஒருவரால் பயமுறுத்தப்பட்டுள்ளார். இன்று எங்களது நிலையத்தில் 40 வயதைத்தாண்டிய ஒரு பணியாளர்களும் வேலைசெய்வதில்லை. காரணம் பயம். ஏனெனில் அவர்கள் திருமணமான பிறகு ஒரு பாதுகாப்பான தொழிலையே நாடுகிறார்கள். அவர்களது குடும்பத்தினரும் இந்தத் தொழிலில் நிலைத்திருக்க அவர்களை விடுவதில்லை. ஏனெனில் அது அவர்களது உயிருக்கு ஆபத்தானது என அஞ்சுகிறார்கள். நாங்கள் அனைத்து அத்துமீறல்களைப்பற்றியும் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை. ஏனெனில் இதற்கு பின்னால் அரசு இருக்கிறது.' என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

இவ்வாறு நாட்டில் இடம்பெறுகின்ற ஊடகங்களுக்கு எதிரான அத்துமீறல்களை மேலோட்டமாக அவதானித்துப் பார்த்தால் கூட அதன் பின்னால் அரசும் அதன் தலைமையும் செயற்படுவதை தௌ;ளத்தெளிவாக அவதானிக்கலாம். முழுமையான அரசினமும், இராணுவத்தினதும் கட்டுப்பாட்டிலுள்ள யாழ் வளைகுடாவில் ஒரு ஊசி கிழே விழுவதாயினும் அவர்களின் அனுமதியுடன்தான் விழ வேண்டும் என்ற நிலையிருக்கிறது. எனவே உதயனுக்கு எதிரான இந்த தாக்குதல் சம்பவங்களை அரசே முன்னின்று செய்கிறது என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கிறது. அரசாங்கம் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலை அரங்கேற்றுவதற்கு தடையாக எந்த ஊடகம் இருந்தாலும் அதனை விலைபேசி வாங்க நினைக்கிறது. அல்லது அசுர பலங்கொண்டு நசுக்க நினைக்கிறது.

ஊடகங்களுக்கு எதிரான போக்கு இன்று அரசால் பல்வேறு கேவலமான யுக்திகளை கையாண்டு அமுல்படுத்தப்படுகிறது. ஊடக நிறுவனங்களை வர்த்த ரீதியான நெருக்கடிகளுக்குள் தள்ளி, அவர்களுக்கு வழங்கப்படுகின்ற விளம்பரங்களை மறைமுகமாக தடைசெய்து அவர்களின் வருமானத்திற்கு ஆப்பு வைக்கும் கைங்கரியத்தை அரசு செய்கிறது. ஒரு தொலைபேசி அழைப்பில் மரண அச்சுறுத்தல் விடுத்து பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை இயங்கவிடாமல் தடுக்கின்ற நிகழ்வுகளும் இடம்பெற்று இருக்கின்றன. இன்று அதையும் விட சாதுர்யமாக புதுவிதமான தணிக்கை உபாயத்தை அரசு கையாளுகிறது. அதாவது அரசு நேரடியாக தணிக்கைகளில் ஈடுபடத்தேவையில்லை. மாறாக ஊடகவியலாளர்களே அரசுக்கு சாதகமாக அல்லது அரசுக்கு பாதகம் இல்லாமல் எழுத, கருத்துத் தெரிவிக்க பழக்கப்படுகிறார்கள். இது எவ்வாறு சாத்தியப்படுகிறது? யுத்த வெற்றிக்கு பிறகு அரசு ஒரு பாடத்தை ஆழமாகவே கற்றுக்கொண்டுள்ளது. அதாவது நீங்கள் ஒருவரை நேரடியாகக் கொல்லத்தேவையில்லை. ஆனால் அச்ச சுழலை தொடர்ந்து பேணுவதன் ஊடாக அவர் உங்களை எதிர்ப்பதற்கு துணியாத நிலையை ஏற்படுத்தினால் போதும். அரசுக்கு எதிராக யாரும் வாய்திறக்க மாட்டார்கள் என்பதே அதுவாகும். 

இந்த யுக்தி ஊடகவியலாளர்களுக்கும் பொருந்தும். அவர்கள் தமது எழுத்துக்களை தாமே பல முறை வாசித்து சுய தணிக்கை செய்து விட்டுத்தான் பிரசுரமே செய்வார்கள். அரசின் கழுகுக்கண்கள் தொடர்ந்தேர்ச்சையாக ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் நோக்கி வளம்வரும்போது பாரிய அழுத்தத்தை ஊடகங்கள் முகங்கொடுக்க வேண்டிவருகிறது. எது எல்லைக்கோடு, எது வரை செல்லலாம், எதனைத் தாண்டக்கூடாது என்று அச்ச மனோபாவத்துடனேயே ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள். இந்தகைய ஒரு ஊடகத்துறைதான் நாட்டில் உருவாகிவருகிறது என்றால் ஊடகம் அநீதிக்கெதிரான பலமிக்க ஆயுதம் என்ற கோட்பாடு இலங்கைக்கு பொருந்தாததாகிவிடும். 

இந்நிலையில் ஊடகங்களுக்கு பாதுகாப்பில்லாத, கருத்துச்சுதந்திரம் குழிதோண்டிப்புதைக்கப்பட்ட இலங்கையில் அடுத்த மாதம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைக்கூட்டுவதற்கு இங்கிலாந்து பிரதமர் உட்பட ஏனைய 50 நாடுகளின் தலைவர்களும்  ஒன்றுகூட இருப்பது ராஜபக்ஷ அரசின் வெளிப்படையான அடக்குமுறைக்கு அங்கீகாரம் அளிப்பதாகவே அமையும். 

No comments

Powered by Blogger.