Header Ads



இதை நெஞ்சம் மறக்குமா...?


 (முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

கந்தக்குழிய
அகதி முகாமில் - நாங்கள்
கந்தலுடை அணிந்ததை 
நெஞ்சம் மறக்குமா ?

உண்ண உணவின்றி 
உடுக்க உடையின்றி
படுக்கப் பாயின்றி 
தங்க நிழலின்றி
நாம் பட்ட வதைதனை 
நெஞ்சம் மறக்குமா?

பூப்போன்ற பச்சிளம் 
பாலகர்களின்; - பாதங்களைப்
பதம்பார்த்த இரக்கமற்ற
அம்மண்ணின் இம்சையை
நெஞ்சம் மறக்குமா?

காரிகையரும் கன்னியரும் 
குழிப்பதற்கும், குடிநீர்
பெறுவதற்கும் பட்ட
கஸ்டங்களைக் கூறி 
நெஞ்சம் மறக்குமா?
வயோதிபர்கள் -
வினாக்குறிகளாக மாறி
வீதியில் உலவித்
திரிந்ந கதைகளை
நெஞ்சம் மறக்குமா?

இரங்கி ஈரான் கொடுத்த
இரப்பர் டெண்டின் 
சூட்டையும் இதயத்தில்
ஏற்பட்ட இரணங்களையும்
நெஞ்சம் மறக்குமா?

நடைப் பிணங்களாக 
மாறிய – எம் வாலிபர் கதைகளை
இன்று நினைக்கும் போதும்
இதயம் கனக்கிறது
நெஞ்சம் மறக்குமா?

முகாமுக்குள் முடங்கிய
எம்மேல் அரசியல்க்
குதிரையோட்டியோரையும்
அதிகாரம் காட்டியோரையும் 
எம் நெஞ்சம் மறக்குமா?

செல்லுமிடமெல்லாம் 
செவியில் அகதியெனும்
அடைமொழி கிடைத்ததை
எம் உள்ளங்கள் இவ்வவனியில்
எப்படி மறக்கும் ?

ரேசன் கடைகளிலும் 
பாடசாலைகளிலும்
எம்மவர் சந்திந்த – சோதனைகளை 
ரோசமுள்ள எம் சமூகத்தின் 
நெஞ்சம் என்றும் மறக்குமா?

ஏழை பணக்காரன் என்ற 
எவ்வித பேதமுமின்றி
அந்த முகாமில் சமத்துவத்தைக்
காட்டத்தானோ - இறைவன் 
இங்கே அனுப்பினான்.
இதை நெஞ்சம் மறக்குமா?

No comments

Powered by Blogger.