ஜப்பான் முதலீட்டார்கள் அமைச்சர் பசிலுடன் பேச்சுவார்த்தை!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
இலங்கையில் திறமை மிக்க ஊழியர்கள் உள்ளதாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் உதவித் தலைவர் சொய்ச்சி யொஷிமுரா தெரிவித்தார்.
இலங்கையில் ஜப்பானின் முதலீடுகள் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் - அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் முதலீகளை மேற்கொள்வது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் சிறப்பு உறுப்பினர்கள் 40 பேர் இலங்கை வந்துள்ளனர். இவர்கள் நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
கட்டுநாயக்க மற்றும் கொக்கல ஆகிய பிரதேசங்களில் ஏற்றுமதிக்கான உற்பத்தித் தொழில் பேட்டைகளை தமது குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவற்றின் கட்டமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தமது குழுவினர் பூரண திருப்திகொண்டிருப்பதாகவும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் உதவித் தலைவர் சொய்ச்சி யொஷிமுரா அமைச்சரிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்கு விடுத்த கோரிக்கையின் பிரதிபலனாகவே ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் முக்கிய 40 உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment