Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறதா..?

(சஹாப்தீன்)

இலங்கை முஸ்லிம்கள் சுதந்திர இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு வரும் சிங்களப் பேரினவாதிகளின் ஆட்சியும், அவர்கள் முஸ்லிம்களை பயன்படுத்திக் கொள்ளும் விதமும் பற்றி தெளிவாக அறிந்துள்ளார்கள். அவர்களின் ஆட்சிகளின் போது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சர்கள்; என்ற பெருமையை வழங்கி முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பெரும்பான்மையினருக்கு வழங்கப்பட்டன. இன்று வரை இதனையே முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள பேரினவாதிகளின் ஆட்சியினை அறிந்து கொண்ட முஸ்லிம்களுக்கு தமிழ்ப் பேரினவாதிகளின் ஆட்சி எவ்வாறு இருக்குமென்று அறிந்து கொள்வதற்கு முழுமையான வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. 

ஆயினும், வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை கைப்பற்றி வட மாகாணத்தின் ஆட்சியை பொறுப்பெடுத்துள்ளது. இதற்கு முதல் இணைந்த வட- கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை தமிழர்கள் தரப்பினர் பெற்றிருந்தார்கள். இவர்களின் ஆட்சியும், அதிகாரமும் முஸ்லிம்களை அடக்கி ஆள நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்சி ஆயுதம் தரித்தவர்களின் ஆட்சியாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்த வலராறும் இணைந்து வட – கிழக்கு ஆட்சிக்கு இருக்கின்றது. பின்னர், இவர்களை இந்திய சமாதானப் படையினர் காப்பாற்றியமையையும் சுட்டிக் காட்ட வேண்டியதாகும்.

என்ற போதும் அந்த ஆட்சி நீடிக்கவில்லை. ஆனால், தற்போது ஆயுதங்களை ஏந்தாதவர்களினதும், ஆயுதங்களை ஏந்தி அதனை கைவிட்டவர்களினதும் கூட்டாக உள்ள தமிழ்த் தேசிய கூட்டைமமைப்பு வட மாகாண சபையின் ஆட்சியை  கைப்பற்றியுள்ளது. அதிலும், தமிழரசுக் கட்சியினரின் செல்வாக்கு அதிகமாகும். வட மாகாண சபையின் அமைச்சர்களை நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கே முதன்மை படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தினாலும், இணைந்த வட – கிழக்கு ஆட்சியினாலும் முஸ்லிம்கள் பல அனுபவங்களை கண்டுள்ளார்கள். அந்த அனுபவங்களை முஸ்லிம்கள் இன்றும் மறக்கவில்லை. அந்த கசப்புணர்வுகள் தமிழ், முஸ்லிம்களிடையே படிப்படியாக குறைவடைந்து கொண்டு வருகின்றன. தமிழர்களும், முஸ்லிம்களும் மொழியின் அடிப்படையில் ஒற்றுமைப்பட்டு தங்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்படுத்துகின்றதொரு கருவியாக வட மாகாண சபையின் ஆட்சி அமைய வேண்டும். இதனை அடைவதற்கு வட மாகாண சபையின் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அவசியமாகும்.

தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து அரசியலை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  கூறிக் கொண்டிருந்த நிலையில், தங்களின் நல்லெண்ணத்தை முஸ்லிம்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் போனஸ் ஆசனம் மூலமாக முஸ்லிம் ஒருவரை வட மாகாண சபைக்கு உறுப்பினராக நியமித்துள்ளது. இதன் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீது அக்கரை கொண்டுள்ளதென்று நம்பிக்கை வைக்க முடியாது. கடந்த காலங்களில் சிங்களப் பேரினவாதிகளும் முஸ்லிம்களை தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி, பின்னர் அவர்களை பொம்மைகளாக வைத்துக் கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளை பறித்துக் கொண்டார்கள். அதே போன்று தமிழ் பேரினவாதம் வட மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவரை உறுப்பினராக நியமித்தாலும், வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றதென்பதனை வைத்தே முஸ்லிம்களினால் தமிழர் தரப்பின் ஆட்சியை புரிந்து கொள்ள முடியும்.

இன்று வட மாகாணத்தின் ஆட்சியைப் பெற்றுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்திலிருந்து  1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று வரை சிறந்த சமிக்ஞையை காட்டவில்லை. முஸ்லிம்கள் வட மாகாணத்தில் வந்து குடியேற வேண்டும் என்றும், புலிகளின் நடவடிக்கை ஒரு இனச் சுத்திகரிப்பு என்றெல்லாம் முஸ்லிம்களை கவரும் வண்ணம் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தாலும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காணிப் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. அரச காணிகளில் வட மாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எதிர்ப்புக்களை காட்டியுள்ளார்கள், ஆர்ப்பாட்டங்களையும் செய்தார்கள். மேலும், முஸ்லிம்களின் காணியை ஒரு சிலர் பலாத்காரமாக கைப்பற்றியுள்ளார்கள். அதனை பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தடையாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

வட மாகாண முஸ்லிம்கள் தமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளினால் துரத்தப்பட்டவர்கள். இந்த அழுக்கை போக்க வேண்டியது தமிழர்களுக்கா ஜனநாயக ரீதியாக போராடிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் பொறுப்பாகும்.

ஆதலால், வட மாகாணத்தில் முஸ்லிம் ஒருவரை பிரதிநிதியாக நியமனம் செய்துவிட்டு, சிங்களப் பேரினவாதிகளைப் போன்று வட மாகாண முஸ்லிம்களின் உரிமைகளை தமிழ் பேரினவாதிகள் பறிக்கப் போகின்றார்களா அல்லது முஸ்லிம்களையும் அரவணைத்து கொண்டு ஒரு முன் மாதிரியான ஆட்சியை நடத்தப் போகின்றார்களா என்பது இப்போதைக்கு வினாவாகவே இருக்கும்.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் தற்போது அங்கு முஸ்லிம் முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களும் முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை வைத்துக் கொண்டு தமிழர்களிலும், சிங்களவர்களிலும் உள்ள சில இனவாதிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், அங்கு தமிழர்களும், சிங்களவர்களும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பரப்புரை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு முஸ்லிம் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் தனியே முஸ்லிம்களுக்காக மட்டும் எதனைச் செய்துள்ளார்கள் என்று கேட்க விரும்புகின்றேன். பாதைகளை அமைத்தல், வடிகான் அமைப்பு என சில அபிவிருத்திகளை செய்துள்ளார்கள். இதே அபிவருத்திப் பணிகள் தமிழர்களின் பிரதேசங்களிலும, சிங்களவர்களின பிரதேசங்களிலும் நடைபெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தின் ஆட்சி எவ்வாறு இருக்கின்தென்று, அச்சபையில் எதிர்க் கட்சி வாழசையில் உள்ள உறுப்பினர்களை கேட்டாலே போதுமானதாகும். இன்று கிழக்கு மாகாணத்தின் ஆட்சி குறித்து முஸ்லிம்களிடையே பல கேள்விகள் உள்ளன.

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் முஸ்லிம்களாக இருந்தாலும், அங்கு பொம்மை ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசாங்கத்தின் சுண்டு விரலின் அசைவுக்கே கிழக்கு மாகாண சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அச்சபையினால் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கும், ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. மாதாந்த கூட்டங்களில் முஸ்லிம் மக்களை கவருவதற்காக உணர்வுப் பேச்சிக்களை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மாகாண சபையின் அதிகாரங்களை; குறைப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுப்பிவைத்த திவிநெகும சட்ட மூலத்தையே ஆதரித்தவர்கள்தான் ஆட்சியாளர்களாக கிழக்கு மாகாண சபையில் இருக்கின்றார்கள். இத்தகைய பொம்மை ஆட்சியை முஸ்லிம்களின் ஆட்சி என்று அழைப்பது மொட்டைத் தலைக்கும், முடங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாகும்.

இதற்கு முதல் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக எஸ்.சந்திரக்காந்தன் இருந்தார். அவர் ஒரு தமிழராக இருந்தாலும், கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை தமிழர்களின் ஆட்சி என்று பெரும்பான்மையான தமிழர்கள் சொல்லிக் கொள்ளவில்லை. அதே போன்று இன்றைய ஆட்சி தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடுமாகும். ஆனால், சந்திரக்காந்தன் முதலமைச்சராக இருந்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சியும், அதிகாரமும் சற்று சொல்லும் படியாக இருந்தது. இன்றைய ஆட்சியும், அதிகாரமும் சொல்லும் படியாக இல்லை என்பதுதான் உண்மையாகும்.

கிழக்கு மாகாணத்தின் ஆட்சி தனியே முஸ்லிம்களினால் உருவாக்கப்படவில்லை. அத்தோடு, பேரினவாதக் கட்சியிலும், பேரினவாதக் கட்சிக்கு அடிமைப்பட்ட கட்சிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே கிழக்கு மாகாணத்தின் அதிகாரத் தரப்பினராக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்த நிலை வட மாகாண சபைக்கு இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டாக இருந்தாலும், அங்கு முழுமையாக தமிழர்களின் ஆட்சியாகவே இருக்கின்றது. அவர்கள் மத்திய அரசாங்கத்தின் பொம்மையாக செயற்பட வேண்டியதில்லை. ஆதலால், மாகாண சபைக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் நலன்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கரிசனை காட்டுதல் வேண்டும். வட மாகாண சபையின் அதிகாரம் வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் மீது எவ்வாறு பாய்ச்சப்படப் போகின்றதென்ற விதத்தில்தான் முஸ்லிம்களும் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன் வருவார்கள். 

இன்று முஸ்லிம்கள் தங்கள் சார்பான கட்சிகளுடன் வெறுப்படைந்துள்ளார்கள். இதனை அண்மையில் நடைபெற்ற மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களின் பிரச்சிகைளுக்கு குரல் கொடுத்த அஸாத்சாலி 55ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

முஸ்லிம்கள் தங்களின் குரலாக செயற்படக் கூடிய செயலுடன் கூடிய அரசியல் கட்சியைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முஸ்லிம் கட்சிதான் வேண்டுமொன்றோ அல்லது இன்றுள்ள முஸ்லிம் கட்சிதான் வேண்டுமொன்றோ அவசியமில்லை. எதுவாக இருந்தாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகளை காத்திரமாக துணிவுடன், பதவிகளுக்கு அப்பால் நின்று பேசக் கூடிய கட்சியாக இருக்க வேண்டுமென்பதேயாகும்.

ஆதலால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அண்மைக் காலமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. சர்வதேசத்திற்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. தமிழத் தேசிய கூட்டமைப்பின் இந்த செயற்பாடு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டு சென்றால்தான் தமிழர்களின் உரிமைகளை சர்வதேசத்தின் உதவியுடன் பெற்றுக் கொள்ளலாமென்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கக்  கூடாது. 

ஆனால், வட மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம் போன்றவைகளில் ஒரு தெளிவான கொள்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இற்றைவரைக்கும் வெளிப்படுத்தவில்லை. இதனால். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களின் தேவைக்காக மட்டும் முஸ்லிம்களை பயன்படுத்திக் கொள்வதற்கானதொரு போக்கை பின்பற்றிக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகமும் முஸ்லிம்களிடம் காணப்படுகின்றன. ஆதலால், வட மாகாணத்தின் ஆட்சியைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் தங்களின் தெளிவான கொள்கையை வெளிப்படுத்தல் வேண்டும். இது தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் எதிர் கால அரசியலுக்கு இன்றியமையாததாகும்.

No comments

Powered by Blogger.