கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் முதல் தடவையாக உயிர்காக்கும் படைப் பிரிவு (படங்கள்)
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் முதல் தடவையாக உயிர்காக்கும் படைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் நேற்று 22.10.2013 இடம் பெற்றது.
கல்முனையையும் நாவிதன் வெளிப் பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி வாவி விவசாயிகளுக்கும் நன்னீர் மீனவர்களுக்கும் வரம் நிறைந்த வாவியாகக் காணப்படுகிறது. அதே நேரம் சிலவேலைகளில் அதே வாவி உயிர் பறிக்கும் எமனாகவும் மாறுகின்றது.
குறித்த பிரதேசத்தில் காணப்படும் 15000ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்கள் இந்த கிட்டங்கி வாவியையே நம்பி செய்கை பண்ணப்படுகின்றது. அதே நேரம் நன்னீர் மீனவர்களின் ஜீவனோபாய இடமாகவும் இந்த வாவிஉள்ளது. அது மட்டுமன்றி இந்த பகுதியில் வாழும் மக்கள் பலர் குளிப்பதற்கு பயன் படுத்துவதும் இந்த கிட்டங்கி வாவிதான்.
வருடம் தோறும் வெள்ளப் பெருக்கினாலும் முதலைக் கடியினாலும் சராசரி 07 பேர் இந்த கிட்டங்கி வாவிக்குப் பலியாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையிலேயே 15பேர் கொண்ட உயிர் காக்கும் படைப் பிரிவு இப்பரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்வு நேற்று நடை பெற்றதுடன். சேனைக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் உதவியுடன் முதலைப் பிரதேசம் குளிக்கத் தடை என்ற விளம்பரப் பலகையும் பொறிக்கப்பட்டது.
கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.பி.வாஹிட் தலைமையில் கிட்டங்கி பிள்ளையார் ஆலையத்தில் நடை பெற்ற நிகழ்வில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் , அம்பாறை பொலிஸ் நிலையத்தின் உயிர் காப்பு படைப் பொறுப்பதிகாரி ஏ.ரி.அசங்க உட்பட ஊர்மக்களும் கலந்து கொண்டனர்.
இப்படைப் பிரிவுக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு சீருடை, சாண்றிதழ் அடையாள அட்டையும் வழங்கவுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தெரிவித்தார்.
Post a Comment