Header Ads



ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால்..!

சமூக வலைதளங்கள் உள்பட நவீன மீடியாக்களால் இன்றைய மாணவர்களுக்கு பல்வேறு பயன்கள் இருந்தாலும், அவர்கள் தவறான வழிகளில் செல்வதற்கும் அவையே வாய்ப்புகளாக அமைந்துள்ளன. இந்த சூழ்நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்று தருவதுடன் நில்லாமல், அவர்களை நல்வழிப்படுத்தி அழைத்து செல்வது ஆசிரியர்களின் மிகப் பெரிய கடமையாகும். அதற்கு முதல் கட்டமாக, ஆசிரியர்கள் தங்களின் நன்னடத்தைகள் மூலம் முன்மாதிரியாக விளங்க வேண்டும். 

ஆனால், சமீப காலமாக பள்ளி ஆசிரியர்கள் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிறார்கள். குற்ற வழக்குகளில் சிலர் சிக்குவது ஒரு புறம். இன்னொரு புறம், பெரும்பாலான ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையிலேயே ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த சம்பவம்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஜமுனாராணி, லதா என இரு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். லதாவிடம் பயிலும் 8ம் வகுப்பு மாணவனிடம் நோட்டு வாங்கி வருமாறு ஜமுனாராணி கூறியிருக்கிறார். அப்போது அந்த மாணவனிடம் லதாவை பற்றி ஏதோ விமர்சித்துள்ளார். அந்த மாணவன் அதை ஆசிரியை லதாவிடம் அப்படியே கூறி விட்டான். இதைத் தொடர்ந்து, இரு ஆசிரியைகளும் பள்ளியிலேயே சண்டை போட்டுக் கொண்டனர். ஒரு ஆசிரியை இன்னொரு ஆசிரியையை கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதன்பின், மற்ற ஆசிரியர்கள் குறுக்கிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், மறுநாளும் அந்த இரு ஆசிரியைகளும் மோதிக் கொண்டனர். அதன்பின், மோதல் பெரிதாகி இருவரும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்காக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால் மாணவர்களை எப்படி ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியும்? ஆசிரியர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை மாணவர்கள் முன்னிலையில் காட்டக் கூடாது. அதை விடுத்து, மாணவர்களிடமே சக ஆசிரியர்களை பற்றி விமர்சனம் செய்தால், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதுள்ள மரியாதை போய் விடும். அது மாணவர்களின் ஒழுக்கத்தையும் கெடுக்கும். எனவே, மற்ற பணிகளில் உள்ளவர்களை விட நமக்கு பொறுப்பும், கடமையும் அதிகம் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.