தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டும் தப்பியவர், கோமா நிலைக்கு சென்றார்..!
ஈரான் நாட்டைச் சேர்ந்த அலிரெசா எம் என்ற 37 வயது போதை மருந்து கடத்தல் காரன் அவனுடைய தவறுக்கு தண்டனையாக சென்ற வாரம் தூக்கிலிடப்பட்டான். ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போன்ஜோர்டில் உள்ள சிறை ஒன்றில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 12 நிமிடங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்ட பின்னர் அவனைப் பரிசோதித்த மருத்துவர் அவன் இறந்துவிட்டதை உறுதி செய்தார். அதன்பின்னர் அவனது உடல் அங்கிருந்த பிணவறைக்குள் வைக்கப்பட்டது.
மறுநாள் அவனது பிணத்தை பெற்றுக்கொள்ளச் சென்ற அவனது குடும்பம் அவன் உயிருடன் இருந்ததை அறிந்தது. பின்னர் ஆயுத பாதுகாப்புடன் அவன் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அதன்பின்னர் அவனது உடல்நிலை முன்னேற்றம் குறித்து தெரியவில்லை என்றபோதிலும் அவன் கோமா நிலையை அடைந்துவிட்டதாக திங்கட்கிழமையன்று ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒருமுறை தப்பித்த குற்றவாளியை மீண்டும் தூக்கில் போடுவது குறித்து தற்போது ஈரானில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா போர்மொகமதி ஒருமுறை தூக்கிலிருந்து உயிர் தப்பிய மனிதனை மறுமுறை தூக்கில் போடுவது தேவையில்லை என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் இந்த சம்பவம் ஈரானைக் குறித்த எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அவர் கருதுகின்றார். அந்நாட்டின் வழக்கறிஞர்களும் அவ்வாறே எண்ணுகின்றனர். ஆயினும் இது குறித்த முடிவினை நீதித்துறையே எடுக்க இயலும். இது அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வராது என்பதால் நீதிபதிகளின் முடிவே இறுதியானதாகக் கருதப்படும்.
உலக அளவில் ஈரானில் மரண தண்டனை விகிதங்கள் அதிகமாக உள்ளது. சென்ற வாரம் இந்தக் குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்றுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மரண தண்டனைகளைத் தடை செய்யுமாறும் இந்த சபை ஈரான் நாட்டைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment