Header Ads



முஸ்லிம் தலைமைகளும், புறக்கணிக்கப்படும் இஸ்லாமும்

(அபூ அஸ்ஸாம்)

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத் தலைவர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்கள், அண்மையில் ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது, கெஸினோ சூதாட்ட (ஒழுக்க சீர்கேடு) மையத்திற்கு ஆதரவாக எமது முஸ்லிம் பெயர் தாங்கி அமைச்சர்கள் சிலர் வாக்களித்திருக்கிறார்கள் என்று.

இவ்வாறொன்று நடந்திருப்பது பற்றி தற்போதுதான் பலர் அறிந்திருக்கலாம். அதில் நானும் ஒருவன். செய்தியைப் படித்துவிட்டு வெளியில் சென்ற போது சில நண்பர்களின் அரசியல் உரையாடல் போய்க்கொண்டிருந்தது.

வட கிழக்கு இணைப்பு பற்றி தீவிரமாக பேசப்படுகிறது என ஒருவர் கூற, எது எப்படி இருந்தாலும், ஆகக்கூறைந்தது பாராளமன்றத்திலாவது வாக்கெடுப்பு நடாத்தியே அது சம்பந்தமாக முடிவெடுப்பார்கள் என இன்னுமொருவர் பதில் சொன்னார். கஸினோவிற்கே வாக்களி;த்திருக்கிறார்கள் எனும் போது வட கிழக்கு எம்பெட்டு என்று நானும் பதிலுக்குக் கூற வேண்டியிருந்தது. இஸ்லாத்தையே மதிக்காதவர்கள் முஸ்லிம்களையா மதிக்கப் போகிறார்கள் என இன்னுமொருவர் விபரமாகவே கூறிவிட்டார்.

ஆமாம், முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. இஸ்லாத்தையும் மதிக்கிறார்களில்லை, முஸ்லிம்களையும் மதிப்பதில்லை. சந்தர்பத்திற்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிப் பேசுவது மட்டுமின்றி இஸ்லாத்தில் பற்றுடையவர்களாக தன்னையும் பரைசாற்றுவிடுவர். ஆனால் வெளிப்படையில் இஸ்லாத்திற்கு துரோகம் புரியக்கூடியவர்களாகவே உள்ளனர். அவைகளில் சிலதை மட்டும் பார்க்கலாம்.

நம்பிக்கை துரோகம்:

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான், நம்பினால் மாறு செய்வான். நபியவர்களின் இந்த போதனையின் ஒன்றாவது இல்லாத அரசியல்வாதி இருந்தால் அது முஸ்லிம்களுக்கு அழகுதான். தேர்தல் காலத்தில் எப்படியெல்லாம் பேசமுடியுமோ அவ்வாரெல்லாம் பேசி வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு பின்பு கதிரை கிடைத்ததும் மாறு செய்யும் அரசியல்வாதிகள் எத்தனை பேர்?

இது மக்களுக்கு மட்டும் கொடுக்கும் வாக்குறுதிகள் அல்ல.

தான் குடி கொண்டிருக்கும் கட்சியிலும் தனக்கு எப்படியாவது கதிரை கிடைத்துவிட வேண்டும் என்று தலைவரையும், அக்கட்சி உறுப்பினர்களையும் நம்பவைத்து பின்பு கதிரை கிடைத்ததும் கொடுத்த வாக்குறுதியை  மொத்தமாக மீறிவிடுகின்றனர்.

தன்னுடைய கதிரைக்குப் பாதுகாப்பு மக்கள் என்றால், மக்கள் சொல்வதைத்தான் செய்வேன் என்பார்கள் ஒரு சிலர்.

கட்சிதான் பாதுகாப்பென்றால், கட்சிக்குக் கட்டுப்பட்டே நடப்பேன் என மக்களுக்கே வேசம் போடும் இன்னும் சிலர். இவர்களின் பேச்சுக்கு தலையாட்டும் பொம்மைகள் இன்னும் பலர்.

ஏழைகளுக்கு போய்ச் சேர வேண்டும் என எது கொடுபட்டாலும் பணமாக இருக்கட்டும், தொழிலாக இருக்கட்டும், வீட்டுத்திட்டங்களாக இருக்கட்டும். நம்பி இருக்கும் ஏழைகளுக்கு போய்ச் சேருகிறதா? அவைகள் முதலில் தனது ஆதாரவாளர்கள் என்று சொல்லி தனக்குப் பின்னால் அலையும் சிலர்தானே சுருட்டிக்கொள்கிறார்கள்.

எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்வோம் என படாதபாடுபட்டு பரீட்சை எழுதி நேர்முகத்திற்கு சென்றுவிட்டால் அங்கு பணமின்றியோ அல்லது தரகர் இன்றியோ தொழில் பெறமுடியாத நிலை.
இன்று எல்லாவிதத்திலும் மக்கள், நம்பிக்கை இழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள்.

(விசுவாசிகளே! ஊங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்துவிடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்.

அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களின் நிலை என்ன?

ஆக, மொத்தத்தில் பொய்யில்லாத, நம்பிக்கை துரோகமில்லாத, வாக்குக்கு மாறுசெய்யாத ஒரு அரசியல்வாதி இருந்தால் நிச்சயமாக நாடு இன்றில்லாவிடினும் நாளை உருப்படும்.

இஸ்லாமிய பண்பில்லாதவர்கள்:

இஸ்லாம் நல்ல பண்புள்ளவர்களாக வாழ வேண்டும் எனப் பணிக்கிறது. அரசியல் வாதிகளிடம் இருக்கும் பண்போ சற்று வித்தியாசமானது.

தன்னோடு பின்னால் திரிபர்வளைக் கண்டால் ஒரு மாதிரியாகவும், ஆதரவாளர்களாக இருந்தும் தெரியாதவர்களாக இருந்தால் அவர்களை ஒரு மாதரியாகவும் பார்க்கும் தன்மை மட்டுமின்றி, வேறு கட்சிக் காரர் ஒருவர் ஓர் உதவியை தனக்கில்லாது சமூகத்திற்காக நாடிச் சென்றாலும் ஒரு பயங்கரவாதியைக் கண்டது போல், அவர் மக்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புள்ளவராக இருந்தபோதிலும் இவ்வரசியல்வாதிகள் அவர்களை துட்சமாக மதித்து தன்னுடைய அகங்காரத்தைக் காட்டும் பண்பில்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மக்கள் யாராக இருந்தாலும் அவர்களோடும் நல்ல முறையில் உரையாடவே இஸ்லாம் பணிக்கிறது. ஆனால் நமது அரசியல் வாதிகளில் சிலரோ தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றனர். இதுதான் மனோகணேசன்அவர்களுக்கும் நடந்தது.

தெரியாத்தனமாக எதையாவது வாய்தவறி பேசிவிட்டால்கூட மன்னிப்புக் கேட்பது நல்ல பண்பு, முஸ்லிம்களுக்கு கலங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சிலர் மன்னிப்புக் கேட்க, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று திமிர்பிடித்தவராக இருக்கும் அரசியல்வாதியாகிவிட்டார்.

அளவு கடந்து போற்றுதல்:

இணைவைப்பைப் பொறுத்தவரை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்குமொன்று. இது ஒரு மனிதனது செயலில் சொல்லில் ஏற்படலாம். இதை தவிர்ந்து நடக்கும் அரசியல்வாதிகள் எத்தனை பேர்?? 

சந்தர்பபம் கிடைத்தால் பூத்தட்டுத் தூக்கி, மாலையிடுவது முதல், தலை சாய்க்கும் வரை அளவு கடந்த புகழாரம் அரங்கேறுகிறது. நான் ஒரு முஸ்லிம், எனது பண்பு இப்படித்தான் இருக்க வேண்டும், நான் எப்படி இருந்தாலும் கொண்ட மார்க்கத்திற்கு துரோகம் விளைவிக்கமாட்டேன் என உறுதிமொழிகொண்டவர்கள் எத்தனை பேர்?

சிலைகளுக்கு மாலையிடுவது, மாற்றுமதத்தினரைக் கண்டால் அவர்களுக்கு தலை வணங்கி கைகூப்பிப் போடுவதை நிறுத்துங்கள், அது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல என எத்தனை தடைவைகள் எழுதப்பட்டிருக்கிறது. இவைகள் எல்லாம் செவிடன் காதில் சங்கூதியது போல் ஆகிக்கிடக்கிறது.

ஆக, கஸினோ என்ன, தங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்றால், தங்களுடைய கதிரையைப்  பாதுகாக்க எதைச் செய்தேனும், மொத்தமாக இஸ்லாத்தைத் தூக்கிவீசிவிட்டு வந்தேண்டா சாமி என குப்பற காலில் விழும் தலைமைகள் தான் அதிகம். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களாகவது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக் தொண்டு செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அல்லாஹ்வே போதுமானவன். யா அல்லாஹ்! முஸ்லிம்களையும், அவர்களின் தலைவர்களையும் இஸ்லாமியப் பற்றுடையவர்களாக, முழு முஸ்லிம்களாக வாழவைப்பாயாக!

2 comments:

  1. தம்பிக்கி எந்த ஊறு? கொஞ்சம் நிதானமாகவும் யோசிக்க வேண்டும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் 10வீதந்தான் அவர்களைவைத்து அரசியல் செய்வதைவிட 70 வீதமாக இருக்கும் சிங்கள பௌத்த மக்களை வைத்து அரசியல் செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சொந்த சுயலாபமே குறியெனில் இஸ்லாத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஈமானை துப்பிவிட்டு பௌத்தனாகி அரசியல் செய்தால் எவ்வளவோ சம்பாதிக்க முடியும் அதனை செய்யாமல் ஏன் இன்னும் முஸ்லிம்களாக இருக்கின்றனர்? மன்னாருக்கு வருகைதந்த மாகாண அமைச்சரை வரவேட்கும் ஊர்வலத்தில் இதே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதின் கூட்டமைப்பை சேர்ந்த உலமா ஒருவர் சிலைக்கி மாலை இடுகிறார் ஊடகங்களில் தேடிப்பாருங்கள் படங்கள் கிடைக்கும்? வங்கிகள் நிதி நிறுவனங்கள் மதுபானம் ஏற்றுமதி இறக்குமதியாகும் கப்பல் துறை என ஹராமான விடயங்கள் நடக்கும் எத்தனை துறைகளில் நமது முஸ்லிம்கள் பணியாற்றுகின்றனர்? அவர்களை பற்றி கவளை கொள்ளாத நாம் எப்படி சூதாட்டத்தை மட்டும் பெரிதாக எடுத்துகொள்கிறோம் ? பாவதிட்கு துணைபோக கூடாது எனில் இந்த நாட்டின் பட்ஜட்ட்டை கூட எந்த முஸ்லிமும் ஆதரிக்க முடியாது அல்லவா?நாம் இருக்கின்ற அரசியல் வளங்களை கூட எள்ளி நகையாடி ஏளப்படுத்தி எம்மையே நாம் அழிக்கும் அரசியல் கலாசாரத்தை கைவிட்டு நட்புறவாடி முஸ்லிம் அரசியல்வாதிகளை பண்படுத்தி காரியங்களை கட்சிதமாக சாதிக்காமல் ஊடகங்களில் விமர்சனம் செய்வதினால் ஆகப்போவது என்ன?

    ReplyDelete
  2. என்ஜினியர் அப்துர் ரஹ்மான் எல்லாரையும் விட மஹா அரசியல்வாதி ...... அவர்கள் காபிர்களோடு செய்த கூட்டுறவுகள் எல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவையா? தேசிய சூராவில் நடுநிலை என்று சொல்லி அங்கம் வகித்து வடக்கில் அரசியல் களத்தில் கூட்டு சேர்ந்தது எல்லாருக்கும் தெரியும் மற்றவரை குறை கூறும் தான் யார் என்பதை கொஞ்சம் அலசி பார்க்க சொல்லுங்கள் எல்லாம் ஒரே குட்டை மட்டைகள் தான்.... அல்லாஹ் தான் அல்லாஹ் மட்டும் தான் எம்சமூகத்தை காப்பாற்ற முடியும். இன்ஷாஅல்லாஹ் அவன் அதனை சரியாக உரிய நேரத்தில் செய்வான் நாம் எம் முயற்சிகளை தொடர்வோம்....

    ReplyDelete

Powered by Blogger.