புதிய சிறைச்சாலைகள் சட்ட வரைவு
சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி காரணமாக கைதிகள் அனுபவிக்கும் சிரமங்களை நீக்குவது உட்பட அவர்களது நல்வாழ்வுக்கான பல்வேறு அம்சங்கள் புதிய சிறைச்சாலைகள் சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை பெரிதும் வரவேற்கத்தக்கது. இப் புதிய சட்ட மூலம் சிறைச்சாலைளுக்கு பொறுப்பான அமைச்சர் கஜதீரவிற்கு என்னால் வழங்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட சிறைச்சாலைகள் தொடர்பான புதிய சட்ட வரைவை கையேற்றபின்னர் கருத்து தெரிவிக்கும் பொழுது குறிப்பிட்டார்.
முன்னாள் நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் 2009 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை புதிய சட்ட வடிவில் திங்கள் கிழமை (21) முற்பகல் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் அதன் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாபாவினால் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சட்ட வரைஞர் அருண சாந்த த சில்வா, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர்கள் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.த சில்வா, எச்.ஜி. தர்மதாஸ, அமைச்சின் பதில் செயலாளர் லக்ஷ்மி குணசேகர ஆகியோர் உட்பட குழுவின் உறுப்பினர்கள் சிலர் பங்குபற்றினர்.
நீதியமைச்சர் ஹக்கீம் கருத்து தெரிவிக்கும் பொழுது மேலும் கூறியதாவது,
இந்த நாட்டின் சிறைச்சாலைகள் சம்பந்தமான கட்டளைச் சட்டம் ஏறத்தாழ 125 வருடங்கள் பழமையாக இருக்கின்ற காரணத்தினால், சிறைக்கைதிகளுடைய புனர்வாழ்வு, அவர்களை சிறைகளில் இருந்து விடுவித்தல், மன்னிப்பளித்தல் என்பன சம்பந்தமான மற்றும் அவர்களுக்கு சிறைச்சாலைகளுக்குள் வழங்கும் வேலைகள் சம்பந்தமான பலவிதமான பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து அவற்றை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, மாற்றியமையக்க வேண்டிய தேவைப்பாடு உருவாகியுள்ள பின்னணியில், முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாபா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் அவை பற்றி நன்கு அலசி ஆராய்ந்து இந்த இறுதி அறிக்கையை என்னிடம் கையளித்துள்ளனர்.
இக் குழுவில் சிறைச்சாலை தலைமை அதிகாரிகள், பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர், உள மருத்துவ நிபுணர் ஆகியோர் உட்பட துறைசார் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்தக் குழு இதற்கு முன்னரும் நியமிக்கப்பட்டிருந்த சில குழுக்களிக் விதந்துரைகளை கருத்தில் எடுத்து சிறைச்சாலைகள் தொடர்பான ஒரு புதிய சட்ட மூலத்தை இப்பொழுது தயாரித்து என்னிடம் சமர்ப்பித்துள்ளனர்.
எனவே இந்த நாட்டில் குற்றவியல் சட்டம் சம்பந்தமாகவும் சிறைச்சாலைகள் சம்பந்தமாகவும் தற்போது காணப்படும் நிலைமையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஏற்படுத்த முடியுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அந்த அடிப்படையில் சிறைக்கைதிகளின் புனர்வாழ்வு சம்பந்தமாகவும், கைதிகளை அவ்வப்போது பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பது சம்பந்தமாகவும், இன்னோரன்ன ஏனைய பல விடயங்களை உள்ளடக்கியதாகவும், சிறைகளுக்குள் கைதிகளுக்கு கொடுக்கப்படும் வேலைகள் சம்பந்தமாகவும், சிறைக்கைதிகளை சமூக நலன்களுக்கான காரியங்களுக்கு பயன்படுத்துவது சம்பந்தமாகவும், அவர்களுக்கு வேறு நாடுகளில் இருப்பது போன்று குறிப்பிட்ட காலம் தங்களது குடும்பத்தினரோடு சென்று இருப்பதற்கான விடுமுறை வழங்குவது சம்பந்தமாகவும் மிகவும் வித்தியாசமான விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களை அனுசரித்தும், அவற்றை உள்ளடக்கியும் ஒரு புதிய பார்வையோடு இச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான எனது சகோதர அமைச்சர் சந்திரசிரி கஜதீரவுக்கு நான் ஆற்றுப்படுத்திய பின்னர், அமைச்சரவைக்கு சமர்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனையடுத்து இந்த புதிய சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 125 வருடங்கள் பழமையான சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை அகற்றிவிட்டு, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதை மிக முக்கியமான கடமையொன்றை நாங்கள் நிறைவேற்ற எண்ணியுள்ளோம்.
இக் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாபா கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
ஐக்கிய நாடுகளின் நியமங்களை பின்பற்றி, சிறைக்கைதிகளை சீர்திருத்தி, நன்னடத்தை உள்ளவர்களாக அவர்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடனேயே இந்த விதந்துரைகளைக் கொண்ட சட்டம் எங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதியொருவர் ஒழுங்காக நடந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஒருவாரம் வீட்டிற்குச் சென்று தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட காலம் அவர் சிறை வாழ்க்கையை ஒழுங்காக கழிப்பாரானால், அவர் ஏதாவது ஒரு தொழிலில் பயிற்சி பெற்றிருந்தால் அவரை விடுவிப்பதற்கு உரிய அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
காலத்துக்கு காலம் தற்போதைய கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும், தற்கால உலகின் நடைமுறைகளை அனுசரித்து மிகப் பழைமையான அச் சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை நன்கு உணரப்பட்டதன் வெளிப்பாடு தான் எங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டவரைவாகும்.
பல அமர்வுகளுக்குப் பின்னர் இந்த இறுதி சட்ட வரைவை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் விடயத்தில் எமது குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. 1877 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பழமையான சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம், புதிய சட்டத்தின் ஊடாக அகற்றப்படவுள்ளது. எமது சட்ட வரைவை உரிய நடவடிக்கைகளுக்காக எம்மிடம் இருந்து பெற்றுக்கொண்டமைக்காக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
Post a Comment