Header Ads



வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது

வடக்கில் ஆட்சியை நிறுவியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி.விக்னேஸ்வரனும் அப்பிராந்திய முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

"நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டி- அந்த மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதானது  தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் வெற்றியும் எழுச்சியும் மற்றொரு சிறுபான்மைச் சமூகத்திற்கு கை கொடுத்து உதவும் என்கின்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இம்மகிழ்ச்ச்சிக்கு அடி கோலுகிறது.

இந்நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெற்று சாத்வீக போராட்டமாக உருவெடுத்து யுத்தமாக வெடிப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது. அதேவேளை அந்த யுத்தம் மூன்று தசாப்த காலம் நீடித்த போதிலும் மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தின் வக்கிர நிலைப்பாட்டினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

யுத்த காலத்திலும் இறுதிப் போரின் போதும் தமிழர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் பொருளாதார அழிவுகள் உலகின் கவனத்தை ஈர்த்த பேரழிவாகும். இதன் பிறகு தமிழ் சமூகம் எழுந்து நிற்குமா என்கின்ற கேள்விக்கு மத்தியிலேயே தமது வாக்குப் பலத்தினால் வடக்கின் ஆட்சியை நிறுவியுள்ளது.

ஆயுத பலத்தினால் சுயாட்சியை ஏற்படுத்த முடியாமல் போன போதிலும் வாக்குப் பலத்தினால் இன்று சுயாட்சிக்கான அத்திபாரம் இடப்பட்டுள்ளது. தமிழர்களின் ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் இந்த நிலைக்கு அவர்களை உயர்த்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. எந்த யுத்தத்தினால் தமிழர்கள் பேரழிவை சந்தித்தார்களோ அதே யுத்தத்தினாலேயே அப்பகுதி முஸ்லிம்களும் உயிர், உடைமை, பொருளாதார அழிவுகளுடன் தமது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  

யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் முழுமை பெறாமல் ஆமை வேகத்திலேயே நகர்ந்து செல்கிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அரசாங்கத்தினால் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகளுக்கு கூட்டமைப்பிலுள்ள சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ இல்லையோ இனிவரும் காலங்களில் இவ்வாறான கருத்துகள் வெளிப்படுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இதுவரை காலமும் வடக்கில் எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் கூட்டமைப்பு இப்போது அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கமாக மாறியுள்ளது.

இந்நிலையில் தமிழ் கூட்டமைப்புக்கே முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டிய அதிகாரபூர்வமான பொறுப்பு வந்திருக்கிறது. அதனால் இது விடயத்தில் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமையை கூட்டமைப்பு நிறைவேற்ற வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்கள் மத்தியில் அலையாக எழுந்துள்ளது.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வை தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். ஆனால் அதற்கு பரிகாரம் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் இப்போது தமிழ் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கிறது. அதனை அவர்கள் சீராக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. அது ஒருபோதும் வீணடிக்கப்படக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

பி.எம்.ஜி.ஜி. எனும் முஸ்லிம் அரசியல் கூட்டணியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கையில் வடக்கு முஸ்லிமகளின் மீள்குடியேற்றத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளமை இதனை இன்னும் வலுப்படுத்துகிறது.

குறித்த உடன்படிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பிலும் தமிழ் கூட்டமைப்பு தனது பொறுப்பை கோடிட்டுக் காட்டியுள்ளது.

அதேவேளை தமது கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெறத் தவறிய பி.எம்.ஜி.ஜி. வேட்பாளருக்கு போனஸ் ஆசனத்தை வழங்கியிருப்பதன் மூலம் தனது நல்லெண்ணத்தை கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருப்பதுடன் முஸ்லிம்களிடம் பாரிய நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது. 

1960களில் தந்தை செல்வா அவர்கள், மசூர் மௌலானாவை செனட்டராக நியமித்து காட்டிய வழியில் இன்று சம்பந்தன் அவர்கள் செயற்பட்டுள்ளார். அன்று தமிழரசுக் கட்சி மூலம்  முஸ்லிம்களையும்  அரவணைத்துக் கொண்டே தந்தை செல்வா அவர்கள் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார். அத்தகைய ஒரு நிலை மீள உருவெடுப்பதானது சிறுபான்மைச் சமூகத்தினருக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.      

இதனை விட முதலமைச்சராக பதவியேற்றுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முஸ்லிம்கள் மீது அன்பும் பற்றும் மிக்க ஒரு பேரறிஞர் என்பது நாம் கண்ட உண்மை. கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற செனட்டர் மசூர் மௌலானா பற்றிய நூல் வெளியீட்டில் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட கருத்துகள் இதனை பறைசாற்றுகிறது.

"முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதோடு மட்டும் தமிழ் தலைமைகள் நின்று விட முடியாது. அவர்களை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்து சமத்துவமாக நடத்த வேண்டியது தமிழ் தலைமைகளுக்கு உள்ள தார்மீகக் கடமையாகும்.

செனட்டர் மசூர் மௌலானா போன்ற முஸ்லிம் தலைவர்களை தம்மோடு கூட்டுச் சேர்த்து தமிழ் பேசும் சமூகத்தினருக்கான அரசியலை தந்தை செல்வா அவர்கள் முன்னெடுத்தது போன்று தற்போது தமிழ்- முஸ்லிம் கூட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு இன்றைய தமிழ் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழ் கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். 

முஸ்லிம்களை தொடர்ந்தும் கறிவேப்பிலையாக பாவிக்கும் எண்ணத்தை தமிழ் தலைமைகள் கைவிட்டு- அவர்களையும்     ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து- சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை வகுத்துச் செயல்பட முன்வர வேண்டும்' என்று விக்னேஸ்வரன் அவர்கள் அவ்வைபவத்தில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் முன்னிலையில் மனம் திறந்து கூறியிருந்தார். அவரது அந்த பிரசித்தமான் உரை தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.

இன்று அத்தகையை ஒரு கனவான் வடக்கின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பதானது முஸ்லிம்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆகையினால் வடக்கில் ஆட்சியை நிறுவியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விக்னேஸ்வரனுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு முஸ்லிம்களின் அதீத நம்பிக்கை வீண் போகாத வகையில்      வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை பாரபட்சமின்றி நிறைவேற்றுவதற்கு   பற்றுறுதியுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்று முயீஸ் வஹாப்தீன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.