Header Ads



கல்முனையின் அரசியல் வரலாற்றில் மன்சூர் அவர்களின் பதவிக் காலமே அபிவிருத்தியில் பொற்காலம்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி கல்முனைத் தொகுதியில் புரட்சிகரமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரை எனது மருதமுனை மக்கள் பாராட்டி கௌரவிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்- செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இஷட்.எம்.மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா நாளை சனிக்கிழமை மருதமுனையில் நடைபெறுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் செனட்டர் மசூர் மௌலானா மேலும் தெரிவித்திருப்பதாவது,

“உண்மையில் இந்த பெருந்தகைக்கு நமது மண்ணில் இவ்வாறான விழாவொன்று எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காலம் கடந்தாவது நண்பர் காதர் இப்ராஹிம் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதானது மருதமுனை மக்கள் நன்றி மறந்தவர்களல்ல என்பதை பறைசாற்றுகிறது.

எனது பள்ளித் தோழர்- அரசியல் நண்பர்- பெருமதிப்பிற்குரிய மன்சூர் அவர்களின் அறிவு, ஆற்றல் என்பன அரசியலில் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமைத்துவத்தை மிகச் சிறப்பாக செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்ட ஒரு தலைவர் அவர்.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக இவர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதில் நானும் எனது மருதமுனை மண்ணும் நூற்றுக்கு நூறு வீதம் பங்களிப்பு செய்த சரித்திர நிகழ்வு இன்று என் கண் முன்னே நிழலாடுகிறது.

அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச போன்றோருடன் நாடு முழுவதும் சென்று நான் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் கூட மன்சூர் அவர்களின் வெற்றிக்காக என்னை நேசித்து- எனது தலைமைத்துவத்தை ஏற்றிருந்த நமது மருதமுனை மக்களையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை போன்ற கிராமங்களில் தமிழ் மக்களையும் ஓர் அணியில் திரட்டி- ஆதரவளிக்கச் செய்து ஒரு கடின உழைப்புடன் விசேடமான பங்களிப்பை வழங்கியிருந்தேன் என்பதை வரலாறு என்றும் நினைவு கூறும்!

இவ்வாறு அமோக வெற்றியீட்டிய மன்சூர் அவர்கள் இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி கல்முனைத் தொகுதிக்கு ஆற்றிய சேவைகளும் அபிவிருத்திகளுமே இப்பகுதியில் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. கல்முனையின் அரசியல் வரலாற்றில் மன்சூர் அவர்களின் பதவிக் காலமே அபிவிருத்தியில் பொற்காலமாக இருந்திருக்கிறது என்றால் அதனை எவரும் மறுக்க மாட்டார்கள்.

இன முரண்பாடுகள் மற்றும் யுத்த கால சூழ்நிலையால் மக்கள் மத்தியில் இன ரீதியான சிந்தனை விதைக்கப்பட்டு சமூக ரீதியாக மாற்றுத் தலைமைத்துவத்தின் அவசியம் உணரப்பட்டதால் மக்கள் அதன்பால் அள்ளுண்டு சென்றதால் தான் கல்முனையில் மன்சூர் அவர்களின் தலைமைத்துவம் இழக்கப்பட்டது எனலாம்.

அன்று கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கா விட்டால் மன்சூர் அவர்கள்தான் இன்றும் கல்முனைத் தொகுதியின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்திருப்பார் என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் ஊழல், மோசடி, முறைகேடுகள் எதுவுமின்றி மக்கள் நலனை முன்னிறுத்தி அபிவிருத்திப் புரட்சியை மேற்கொண்டிருந்த மன்சூர் அவர்களை இத்தொகுதி மக்கள் நிராகரிப்பதற்கு வேறு எந்த நியாயமும் இருந்திருக்கவில்லை.

அரசியலில் நேர்மை, நம்பிக்கை, புனிதத்துவம் என்பவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதியில் இன ரீதியாகவோ பிரதேச ரீதியாகவோ எவரையும் புறந்தள்ளாமல் மனிதம் என்கின்ற உயர் பண்புடன் பணியாற்றி வந்தார். தனது சுயநல அரசியலுக்காக இனவாதத்தையோ பிரதேசவாதத்தையோ அவர் ஒருபோதும் தூண்டியதில்லை. அதனால் தான் அவரை அனைத்து இனங்களும் சகல பிரதேசங்களும் அன்றும் இன்றும் நேசித்து மகிழ்ச்சி கொள்கின்றன.

இப்பகுதியில் யுத்தம் கோலோச்சியிருந்த காலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவைக் கட்டிக் காப்பதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளார். அவர் இன ஐக்கியத்தின் ஆணி வேராகத் திகழ்ந்தார். அதனையொட்டியே அன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் மன்சூர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக, வாணிபத்துறை என்கின்ற பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்கு கபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இரண்டுக்கும் பொதுவாகவே இவருக்கு அந்த அமைச்சு நியமனம் வழங்கப்பட்டது. சிங்கள அரசியல் தலைமைகளிடம் அவருக்கு என்றிருந்த தனிப்பட்ட மதிப்பும் கௌரவமும் நம்பிக்கையுமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது.

அந்த வகையில் அவரது பிரதேசவாதமற்ற அரசியல் தலைமைத்துவம் காரணமாகவே அவரது காலத்தில் நமது மருதமுனை- கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திகளில் முன்னேற்றம் கண்டன இந்த ஊருக்கு ஓர் எம்.பி. இல்லை என்கின்ற குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அவர் செயற்பட்டார். இதன்போது மருதமுனைப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக நான் முன்னெடுத்த வேலைத் திட்டங்களுக்கு அவர் இயன்றளவு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். எமது கோரிக்கை எதனையும் அவர் நிராகரித்து- புறமொதுக்கி செயற்பட்டதில்லை.

நமது மண்ணின் கல்வி அபிவிருத்திக்கு அவர் நல்கிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாத- காலத்தால் அழியாத பெரும் சேவையாகும். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் மன்சூர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். அந்த வகையில் மருதமுனை கல்வியில் முன்னேற்றம் கண்ட ஓர் ஊர் என முழு நாட்டிலும் இன்று பெருமையுடன் பேசப்படுகிறது என்றால் அதில் மன்சூர் அவர்களுக்கும் பாரிய பங்குண்டு என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தகைய ஒரு பெருமகனுக்கு நமது மண் இன்று நன்றியுணர்வுடன் கௌரவம் அளிப்பதையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இவ்விழா மிகச் சிறப்புடன் நடைபெற்று நிறைவுறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.