Header Ads



முடிவுக்கு வந்தது அமெரிக்க சிக்கல் - இருள் மேகங்கள் விலகி ஒளி பிறந்து என்கிறார் ஒபாமா

கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபையை தொடர்ந்து பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் நிலவி வந்த பொருளாதார சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

நிதி சிக்கலுக்கு முடிவு :

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான அரசு அலுவலகங்கள் அக்டோபர் 01ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நெருக்கடி நிலையை சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்த பின்னரும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் சுமார் 11 மணிநேரத்திற்கு பின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா, சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்ட வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து குடியரசு கட்சிகள் தங்களின் பிடிவாத போக்கை தளர்த்திக் கொண்டதால் பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒபாமா மகிழ்ச்சி :

நிதி சிக்கலுக்கு முடிவு கட்டுவதற்கான மசோதாவிற்கு இரு சபைகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு அதிபர் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவை சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் விலகி ஒளி பிறந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்க தொழில்களுக்கும், மக்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நெருக்கடி நிலையயை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்களை உடனடியாக திறப்பதற்கான மசோதாவிலும் அவர் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

அரசு நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளதால் விடுமுறையில் சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் முடங்கி இருந்த அரசு பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது. 

No comments

Powered by Blogger.