Header Ads



°கௌரவம்° கேட்கும் அரசியல்வாதிகள்..!

(யு.எம்.இஸ்ஹாக்)

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களை விழிப்பது தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரிகளுக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையே சர்ச்சைகள் நிலவுகின்றன. தங்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகின்ற அலுவலக கடிதங்களில் கௌரவ உறுப்பினர் என்று எழுதப்பட வேண்டும் எனவும் , கூட்டங்களில் விழிக்கின்ற போது அந்த கௌரவ உறுப்பினர் என்ற பதம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்  உறுப்பினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக கடந்த காலங்களில் பல உள்ளுராட்சி மன்றங்களில் சர்ச்சை ஏற்பட்டு சபை அமர்வுகளில் விவாதங்களும் நடை பெற்ற நிலையில் முடிவெதுவும் இல்லாமல் இழுபறியுடன் காணப்படுகின்றன. இந்த விடயத்தில் மாகாண சபை உள்ளுராட்சி ஆணையாளர்களும் ஒரு வகை நழுவல் போக்கினை கடைப் பிடிப்பதாக உள்ளுராட்சி மன்ற தலைவர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்க நிருவாக மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சு 30ஏப்ரல்1992 திகதிய 18/92 இலக்க உள்ளுராட்சி அதிகார சபையின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை விழித்தல் எனும் தலைப்புடன் அரசாங்க நிருவாக மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எம். ஜூனைட் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் அரசாங்கம் மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை களுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளை முறையே 'மாநகர சபை உறுப்பினர், நகர சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர்' எனவும் விழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் கௌரவ உறுப்பினர் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு அரச நிருவாக சுற்றறிக்கை இருக்கின்ற போது சர்ச்சை ஏற்படுவது என்பது அதிகாரிகளின் பலவீனமான நிருவாகமே காரணமாகும் என பொது நிருவாக சேவை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.