உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை
(எம்.எம்.ஏ.ஸமட்)
உணவுப்பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உணவுப் பொருட்களின் பரிசோதர்களுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ள.
உணவுப்பொருட்களின் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு, 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உணவுப்பாதுகாப்புச் சட்ட இலக்கம் 26யை உரிய முறையில் அமுல்படுத்தி உணவுப்பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சு உணவுப்பொருட் பரிசோதர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.
அண்மைக்காலமாக, நாட்டின் பல பாகங்களிலும் உணவுப் பொருட்கள் நஞ்சடைதல் தொடர்பாக அதிகளவிலான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. உணவு நஞ்சடைவதால் ஏற்பட்ட உபாதைகளினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு பொருட்கள் நஞ்சடைவதற்கு நுகர்வோரினதும், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் அறியாமை மற்றும் அனுபவக் குறைவு போன்றவையே முதன்மைக் காரணங்களாகவுள்ளன.
இவற்றைக் கருத்திற்கொணடு, உணவுப் பரிசோதர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன்; தமது பரிசோதனைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
அத்துடன் உணவுப் பொருட்களின் பாதுப்பபை உறுதிப்படுத்துவது தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இம்மாதம் 16ஆம் திகதி உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதி உணவுப் பாதுகாப்பு வாரமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாரத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பொது மக்கள் விழிப்பூட்டப்படுவதுடன், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள் என்பன பரிசோதனைக்குட்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் உணவு நஞ்சடைவதனால் ஒவ்வொரு வருடமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற வேளை, வருடம்தோரும் 300 மில்லியன் சீனர்களும் 100 மில்லியன் அமெரிக்கர்களும் உணவு நஞ்சடைவதனால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment