காழ்ப்புணர்ச்சியினால் கட்சியின் வெற்றியை குறைத்து மதிப்பிட முயற்சி - ரவூப் ஹக்கீம்
நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் எண்மரில், நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகவே வெற்றியடைந்துள்ளனர் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஆகையால் கட்சியின் வெற்றியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகமொன்றை கொழும்பு, கொம்பனி தெரு, ஸ்டுவர்ட் வீதியில் சனிக்கிழமை மாலையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார். மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பெரும் இடத்தை வகிக்கின்றது. எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தவாறே எமது கட்சி தனது அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அண்மையில் நடந்த மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக சிலர் ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.
காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்கள் எமது கட்சியின் வெற்றியை குறைத்து மதிப்பிட முயற்சிக்கின்றனர். அதில் உண்மையில்லை. இந்த மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்கள் எட்டுப் பேர்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஏனைய இருவர் தேசியப்பட்டியல் மூலமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் எண்மரில் சரி அரைவாசியினரான நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களைப் பொறுத்தவரை 2002ஆம் ஆண்டு முக்கியமான வருடம். அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கு நாங்கள் காரணமாக இருந்தோம். அப்போதைய கொழும்பு மாநகர சபை தேர்தலில் எமது கட்சியின் சார்பில் ஆறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போது இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர் தற்போதைய மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷத் நிஸாம்தீன் முதன்முதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூலம் அரசியலில் பிரவேசித்தார்.
இப்பொழுது எமது மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீனும் மாநகர சபை உறுப்பினர் அனஸும் பிரச்சினைக்குரிய கொம்பனித்தெரு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் கூட ஈடுபட்டு வருகின்றனர். கொம்பனித்தெரு பிரதேசத்தில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்த முயற்சிக்கப்படுகின்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபை என்ற போர்வையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உயர் நீதிமன்ற தீர்ப்பைக்கூட மீறி சில விடயங்கள் நடைபெறுகின்றன. பொறுப்பு வாய்ந்த நீதியமைச்சர் பதவியை வகிக்கும் நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூற முடியாது என்றார். வேகந்த ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி முஸ்னி அமீர்,மெளலவி அப்துல் ஜப்பார், விசேட மருத்துவ நிபுணர் றியாஸ், மாநகர சபை உறுப்பினர்களான அனஸ், நைசர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Post a Comment