நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா?
(nf) உடல் பருமன் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விழிப்புணர்வளிக்கிறார்.
தற்போது அனைவராலும் அடிக்கடி புலம்பப்படும் வார்த்தை நான் உடம்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக பெண்கள் தாங்கள் ஸ்லிம் ஆக விரும்புகிறார்கள். தீர்வு எங்க கிடைக்குமென்று தேடி அலைகிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் சமையல் செய்ய மசாலா பொருட்களை அரைப்பதற்கும் மாவு அரைப்பதற்கும் அம்மி, குழவி, உரல் போன்ற கருவிகளை உபயோகித்தனர். ஆனால் தற்போது காய்கறி நறுக்குவதற்குக்கூட இயந்திரம் வந்துவிட்டது. உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. முடிவு உடல் பருமன்.
நம்முடைய உயரத்திற்கும் உடல் எடைக்கும் நேர்மறையான சம்பந்தம் இருக்கிறது. அதாவது நம்முடைய உயரத்திற்கு ஏற்றவாறு நமது உடல் எடையும் இருக்க வேண்டும். நம்முடைய உடல் எடையை அதிகரித்து நாமே நமக்கு கேடு விளைவித்துக்கொள்கிறோம். இதனால் சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டீஸ், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கேன்சர் போன்ற நோய்கள் வருகின்றன. உணவுக்கட்டுப்பாடு, உடல் உழைப்பு, தன்சுத்தம் போன்றவற்றை கடைபிடித்தல் நல்லது.
அதாவது கலோரி மிகுந்த உணவை எடுத்துக்கொண்டோமானல் அதற்கு ஏற்றவாறு உடல் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். அதாவது நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் கலோரியை அன்றே எரித்தாக வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் எனர்ஜியை காட்டிலும் நாம் வெளியிடும் எனர்ஜியானது குறைவாக இருந்தால் எடை அதிகரிக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் எனர்ஜியை விட நாம் வெளியிடும் எனர்ஜி அதிகமாக இருந்தால் எடை குறையும். தினமும் சராசரியாக 500 முதல் 1000 கலோரியை நாம் எரித்தாக வேண்டும்.
உடற்பயிற்சி என்பது தற்போது நவீனமயமாகிவிட்டது. அதாவது காற்றே புகாத அறையில் கருவிகளை உபயோகித்து வியர்வை சிந்தாமல் உடற்பயிற்சி செய்கிறார்கள். இது போன்ற உடற்பயிற்சி செய்வது பலனற்றது. நாம் உடற்பயிற்சி செய்யும்போது இயற்சை காற்றை சுவாசித்து, சூரிய ஒளி நம் மீது படவேண்டும். அப்பொழுது தான் வியர்வை வரும். சூரிய ஒளி நம்மீது படுவதால் வைட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கும். தினமும் நடைபயிற்சி அவசியம்.
சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக நார்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவு, அதிக மசாலா கலந்த மற்றும் பழைய எண்ணெய்யில் பொரித்த உணவை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது உடல் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்றவற்றை பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
unusual
ReplyDelete