முஸ்லிம் இளைஞர்களுக்கு சயனைட் குப்பியை வழங்குவதற்கு முயற்சி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
(tm) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து விரைவில் கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றி வடக்கு கிழக்கை இணைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணய உரிமையை பெறும் ஆபத்தும் உள்ளது. எனவே இது தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் தமிழ் இளைஞர்களுக்கு மீண்டும் சயனைட் குப்பியை கொடுப்பதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பது போன்று கிழக்கில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் சயனைட் குப்பியை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கின்றது. ஐ.நா.விடம் தனிநாடு கோரி முன்வைப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மகஜரே கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாகும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் பட்டர்பூசும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சீனாவும் ரஷ்யாவும் இலங்கை தொடர்பில் அதிருப்தியடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான சூழல் அல்ல என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு பேரவையில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
முத்தரப்பு சவால்கள்
முத்தரப்பு சவால்களை இலங்கை இன்று எதிர்கொண்டுவருகின்றது. குறிப்பாக பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் மனித உரிமைப் பிரச்சினை மற்றும் ஆட்சி மாற்ற முயற்சி ஆகிய மூன்று கோணங்களில் சவால்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்திய தேர்தல்
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இலங்கை விவகாரம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் நிலைமை காணப்படுகின்றது.
அதாவது சீனாவும் ரஷ்யாவும் இலங்கை தொடர்பில் அதிருப்தியடையும் வகையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முயற்சித்தபோதும் சீனாவும் ரஷ்யாவும் வெளியிட்ட எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா தாக்குதல் நடவடிக்கையை கைவிட்டது.
சீனாவின் உதவி தேவை
இந்நிலையில் இலங்கையை பொறுத்தமட்டிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கையை பாதுகாக்கவுள்ள நாடுகளாக சீனாவும் ரஷ்யாவுமே காணப்படுகின்றன. விசேடமாக நாங்கள் சீனாவையே நம்பிக்கொண்டிருக்கின்றோம். இதன் பின்னணியில் விரைவில் இடம்பெறவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கை விஜயத்தை பார்க்கவேண்டும்.
சம்பூர் இலங்கைக்கு பாதிப்பு
இலங்கை விஜயத்தின்போது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக்கோரியும் சம்பூர் அனல் மின்நிலைய செயற்பாடுகளை துரிதப்படுத்தக்கோரியும் வலியுறுத்தப்படவுள்ளது. சம்பூர் அனல் மின்நிலையம் அமைப்பதானது இலங்கைக்கு மிகவும் பாதகமாகவே அமையக்கூடிய விடயமாகும்.
இலங்கையின் சர்வதேச பூகோள அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது என்பதனால் சர்வதேசம் சில முயற்சிகளை முன்னெடுக்கின்றன. அதில் ஒன்றாகவே இந்த சம்பூர் விடயத்தை பார்க்கவேண்டும். இதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பாரிய அக்கறை இருப்பதாக தெரிகின்றது.
இந்தியாவுக்கு பட்டர் பூசினால் சீனா அதிருப்தியடையும்
இந்நிலையில் திருகோணமலையில் இந்தியா இவ்வாறு நிலைகொள்வதானது சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். அதாவது சீனாவிடம் நாம் உதவிகளை பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இந்தியாவுக்கு பட்டர்பூசும் இந்த செயற்பாட்டினால் சீனாவுக்கு எம்மீது அதிருப்தி ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தியாவின் இந்த செயற்பாடுகள் சீனாவை கோபமடையச் செய்யும். இது எமக்கு சர்வதேச விவகாரங்களில் பாதகமாக அமையலாம்.
லிபியா சிறந்த உதாரணம்
லிபிய ஜனாதிபதி சீனாவுடனும் ரஷ்யாவுடனும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுவந்தார். ஆனால் திடீரென பிரான்ஸுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கை சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் பிடிக்கவில்லை. இறுதியில் லிபியாவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது சீனாவும் ரஷ்யாவும் மெளனமாக இருந்துவிட்டன. எனவே இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். மேலும் தற்போதிருந்து எதிர்வரும் ஏப்ரல் வரையான காலப்பகுதியானது நாம் கவனமாக அவதானிக்க வேண்டிய காலப்பகுதியாக உள்ளது.
கிழக்குத் தீர்மானம் எச்சரிக்கை
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படும் நிலைமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை இது தொடர்பான சந்தேகத்தை எமக்கு வலுப்படுத்துகின்றது.
அந்த வகையில் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து விரைவில் கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றி வடக்கு கிழக்கை இணைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனூடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுய நிர்ணய உரிமையை பெறும் அனர்த்தம் உள்ளது. இதனை நாம் புரிந்துகொள்ளவேணடும். எனவே இது தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும்.
விரைவில் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் திருமணம்
கூட்டமைப்பின் செயற்பாடுகளையே முஸ்லிம் காங்கிரஸும் முன்னெடுத்துவருகின்றமை புரிகின்றது. வடக்கில் தமிழ் இளைஞர்களுக்கு மீண்டும் சயனைட் குப்பியை கொடுப்பதற்கு கூட்டமைப்பு முயற்சித்துவருகின்றது. அதே போன்று கிழக்கில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் சயனைட் குப்பியை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கின்றது. அந்த வகையில் விரைவில் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் திருமணம் இடம்பெறலாம்.
ஐ.நா. தலையிடலாம்
எமது அரசியலமைப்பின் பிரகாரம் சுய நிர்ணய உரிமையை கூட்டமைப்பினால் பெற முடியாது. அப்படியானால் நாட்டில் மோதல் ஏற்படும். எனினும் ஐக்கிய நாடுகள் சபை ஊடாக தலையிடலாம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் ஐ.நா. தலையிட்டு தனிநாட்டை பெற முயற்சி எடுக்கப்படும் அபாயம் உள்ளது. இது ஒரு வழியாகும்.
கொசோவோ உதாரணம்
இல்லாவிடின் கொசோவோவில் இடம்பெற்றது போன்று உதாரணங்கள் உள்ளன. கொசோவோவில் 800 பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு சேர்பியா மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைக் காரணமாக வைத்து ஐ.நா. தலையிட்டது. அத்துடன் தனிநாடும் பெறப்பட்டது. அதேபோன்று கொசோவோ போன்ற முயற்சி ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கலாம். அந்த வகையில் ஐ.நா.விடம் தனிநாடு கோரி முன்வைப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மகஜரே கூட்ட மைப்பின் தேர்தல் விஞ்ஞா பனமாகும் .
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை
இதேவேளை யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் உரிய முறையில் தீர்த்து வைக்காததே வடக்குத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியடையக் காரணமாகும். அண்மையில் வடக்கிலிருந்து தம்புள்ளைக்கு பீட்ரூட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது பீட்ரூட் ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அநீதியான விடயமாகும்.
அதாவது வடக்கு மக்களின் பிரச்சினைகள் கடந்த யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நியாயமான முறையில் தீர்க்கப்படவில்லை. எனவே எமது பக்கத்திலும் தவறுகள் உள்ளன. எனவே இவற்றைப் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
Post a Comment