அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கு உகந்த நாடொன்றை உருவாக்கியுள்ளோம் - மஹிந்த
அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கு உகந்த நாடொன்றை உருவாக்கியுள்ளதாகவும் இனி இந்த நாட்டில் கூடார யுகமொன்றுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் அரசாங்கம் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கையில் இத்தகைய அபிவிருத்திகளைத் தடை செய்வதற்கு சில சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி; எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
கிராமங்கள், நகரங்கள் என்ற ஏற்றத் தாழ்வின்றி அபிவிருத்தியும் எழில் மிகுந்த சூழலும் சமமாக உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி வேறு நாடுகளில் மக்கள் குகைகளில் வாழ்ந்த யுகத்தின் போதும் அக்காலத்திலேயே கிராமங்கள், நகரங்களை அமைத்து வாழ்ந்த பெருமைக்குரிய வரலாறு எமக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் :
நாம் மக்களுக்கு வீடுகளையும் நாட்டு மக்களில் 90 வீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மின்சாரத்தையும் நீரையும் வழங்கி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் போது, சிலர் எமக்குக் கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு முன்பாக ஊர்வலம் செல்கின்றனர். ஐ. நாவுக்கும், மனித உரிமை அமைப்புக்கும் ‘பெட்டிசன்’களை அனுப்புகின்றனர். இவற்றை வைத்து நாம் எமது செயற்பாடுகளை நிறுத்தப் போவதில்லை.
சகலருக்கும் வீடு என்ற இலக்கை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. நாட்டின் சகல பகுதிகளிலும் இலட்சக் கணக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பாதிப்புற்ற வடக்கிலும் மீளக் குடியமர்த்தவர்களுக்காக மூன்று இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாக தற்போது கொழும்பு நகரமும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. கிராமங்களின் செளந்தர்யத்தை நாம் தற்போது நகரங்களுக்கும் கொண்டுவந்துள்ளோம். நகரின் வசதிகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் அதேவேளை கிராமங்களின் செளந்தர்யத்தை நகரங்களுக்கும் கொண்டு வருகிறோம். இதனை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதற்குப் பல சான்றுகள் உள்ளன.
விஹார மகாதேவி பூங்காத் திட்டம், டொரிங்டன் சுதந்திர சதுக்கப் பிரதேசம், பாராளுமன்றத்தை அண்டிய பிரதேசங்களுக்குச் சென்றால் கிராமங்களின் செளந்தர்யம் நகரங்களுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதை காணமுடியும். அதனால்தான் நாம் சோமாவதிக்குச் சென்றாலும் மட்டக்களப்பு வாகரைக்குச் சென்றாலும் மாத்தறைக்குச் சென்றாலும் நாட்டில் எங்கு சென்றாலும் மாற்றங்களைக் காண முடிகின்றது.
நாடு சுதந்திரம் பெற்ற காலங்களில் கல்லோயா, அல்லது மஹாவலி என ஒரு திட்டம் மட்டுமே ஒரு காலகட்டத்தில் நடைமுறைப்படுத் தப்பட்டது. இப்போது முழு நாட்டிலும் நிர்மாணப் பணிகள் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகின்றன. எங்கு சென்று பார்த்தாலும் வேலைத்திட்டங்களையே பார்க்க முடிகின்ற காலம் இது.
இந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் நிர்மாணப் பணிகள் இந்தளவு அதிகரித்துக் காணப்படுகின்றன. இதுவரை காலம் 100 ற்கு 07 வீதமாக இருந்த நிர்மாண நடவடிக்கைகள் இக்காலத்தில் 100 ற்கு 21 வீதமாக அதிகரித்துள்ளது.
எமது செயற்பாடுகளுக்கு எதிராக எத்தகைய எதிர்ப்புகள் எழுகின்ற போதும் எமது முன்னேற்றம் தடைப்படுவதில்லை. இங்கு வந்து நிலைமையை நேரில் கண்டு செல்பவர்கள் மீண்டும் நாடு திரும்பியதும் இங்குள்ள உட்கட்டமைப்பு செயற்பாடுகளைப் பாராட்டுகின்றனர்.
நாம் மேற்கொள்ளுகின்ற அனைத்து செயற்பாடுகளையும் பார்த்துவிட்டு சிலர் சர்வாதிகாரம் என்றும் கூறுகின்றனர். எது சர்வாதிகாரம் என்று எனக்குப் புலப்படவில்லை. யார் என்ன கூறினாலும் நாட்டுக்கு சேவை செய்வதற்கு நானும் எனது அமைச்சரவையும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்பதைக் கூறமுடியும். அரச சேவையில் நம்பிக்கையற்ற யுகம் ஒன்றிருந்தது. அரச ஊழியர்களை 6 இலட்சமாகக் குறைத்த யுகம் அது. நாம் அரச ஊழியர்களை 14 இலட்சமாக அதிகரித்துள்ளோம்.
நாம் மாற்றத்தை அல்லது வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளோம். நாம் அரச ஊழியர்களில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது செயற்பாடுகளுக்கு அவர்களது ஒத்துழைப்பு மிக முக்கியமானது. முப்பது வருட பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட்கப்பட்டுள்ளது. மக்கள் பயமின்றி வாழ்கின்றனர். சந்தேகம் இல்லை. மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாலை 6 மணியுடன் வீட்டுக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு பயந்து, பயந்து வாழ்ந்த யுகம் மாற்றப்பட்டுள்ளது. இப்போது சுதந்திரமாக எதையும் மேற்கொள்ள சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெருமைப்படக்கூடிய தருணம். இந்த வெற்றியை நாம் பாதுகாக்க வேண்டும். இதை முன்னோக்கி எடுத்துச் செல்வது அவசியம்.
பெற்றுக்கொண்ட வெற்றியை எவரும் அபகரிக்க இடமளிக்க முடியாது. மீண்டும் கூடாரங்களில் மடுவங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் யுகம் ஏற்பட இடமளிக்கக் கூடாது. எமக்கான சுதந்திரமாக வாழும் உரிமையை இழக்கக் கூடாது என நான் இந்த உலக குடியிருப்பு தினத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார். tn
where?
ReplyDelete