கல்முனையில் திருட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் கைது (படங்கள்)
கல்முனை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள்களை களவெடுத்து வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் வைத்து கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து கடந்த 16ஆந் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று வரை கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் 17 மோட்டார் சைக்கிள்களும், ஒரு முச்சக்கர வண்டியும் களவு போயுள்ளது. தொடர்ந்து கல்முனை பிரதேசத்தில் இவ்வாறான களவு இடம் பெற்றதனால் பிரதேசத்தில் ஒருவகை அச்ச சூழல் நிலவி வந்தது.
இந்த களவுகள் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வீ.இந்திரன் மற்றும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை பொலிஸ் தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதனின் தலைமையிலான பொலிஸ் குழுவினராலேயே நீண்டகாலமாக கல்முனை பிரதேசத்தில் இடம் பெற்று வந்த மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவத்துடனான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் படி 03 சிவப்பு நிற ஸ்பிலண்டர் ரக மோட்டார் சைக்கிள்களும் , வெள்ளை நிற ஒரு அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிளும், ஒரு கறுப்பு நிற பெஸன் பிளஸ் மோட்டார் சைக்கிளும் , ஒரு கறுப்பு நிற டிஸ்கவரி மோட்டார் சைக்கிளும், ஒரு முச்சக்கர வண்டியொன்றும் கல்முனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 06 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் இரண்டு மோட்டார் சைக்கிளின் விபரங்களையும் சந்தேக நபர் தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த சந்தேக நபரான இளைஞன் அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்திலுள்ள மாணவன் என தெரிய வந்துள்ளது. இவரை கைது செய்த பொலிசார் கல்முனை நீதவான் நீதி மண்றத்தில் ஆஜர் படுத்தி எதிர்வரும் 31.10.2013 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதி மன்றத்தின் உத்தரவினை பெற்றுள்ளனர். அதன் பிரகாரம் சந்தேக நபர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கல்முனை பொலிஸ் நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் தலைமையிலான குழுவினர் பாரவையிட்டுள்ளனர்.
Post a Comment