மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை - கேமரா காட்டி கொடுத்தது
இந்தியா - மகாராஷ்டிர மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு மாணவனை வகுப்பறையில் வைத்தே காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக இது அம்பலமாகியுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளை செய்ய சொல்வது, கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்புவது, வீட்டு வேலைகளை செய்ய வைப்பது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. தற்போது அதற்கெல்லாம் உச்சமாக ஒரு ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் வைத்தே மாணவன் ஒருவனை தனது காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்பு அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 7ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாட நேரத்தின் போது மாணவன் ஒருவனை தனது காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய சொல்லியுள்ளார். இது அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் பொதுமக்களுக்கு தெரிய வரவே அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -
Post a Comment