Header Ads



அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் முர்ஸிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

(Tn) எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முதல் நாள் கல்வித் தவணை ஆரம்பமான நேற்று முன்தினம் சனிக்கிழமை இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் இராணுவ எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதோடு பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரை பலி கொண்ட இராணுவ நடவடிக்கையின் அடையாளமான ‘ரபா’ பதாகைகளையும் ஏந்தி நின்றனர். இதில் மாணவிகள் தனியாக ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இராணுவ எதிர்ப்பு கோஷங்களுடன் பல்கலைக்கழகமெங்கும் பேரணியாக இடம்பெற்றது.

முதல்நாள் கல்வி நடவடிக்கையில் சுமார் 50 வீதமான மாணவர்களே பங்கேற்றிருந்ததாக பல்கலைக்கழக நிர்வாகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதிக்கத்தைக் கொண்ட பல்கலைக்கழகங்களின் ஒன்றியம் வெளியிட்ட தகவலில், ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 100க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 120க்கும்மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் கல்வித் தவணை இரண்டு வாரங்கள் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது. முடிவடையாமல் இருந்த பராமரிப்பு வேலைகள் காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டது.

ஆனால், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாணவர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.