மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி..!
ஐ பி எம் கணினி நிறுவனம் மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது.
இயற்கையில் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதில் இருந்து ஆராய்ந்து, இதனை தாம் தயாரித்து வருவதாகக் கூறும் அந்த நிறுவனம், இந்தக் கணினியும் மனித மூளையைப் போல இரத்தம் போன்ற ஒருவகை திரவத்தால், சக்தியைபெறுவதுடன், அதே திரவத்தால், தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும் என்று கூறுகிறது.
மிகப்பெரிய கணினிச் சக்தியை, மனித மூளை, மிகவும் குறுகிய இடத்துக்குள் தேக்கி வைத்துக்கொள்வதுடன், அதற்காக வெறுமனே 20 வாட்டுக்கள் சக்தியை மாத்திரமே பயன்படுத்தவும் செய்கிறது. இந்த அளவுக்கு செயற்திறன் மிக்க ஒரு கணினியை உருவாக்குவதுதான் தமது திட்டம் என்று ஐ பி எம் கூறுகிறது.
இதில் குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒன்று, ஒருவகை மின்னணு இரத்தத்தை, கணினியின் ஊடாகச் ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணினிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும்.
சூரிச்சில் உள்ள இந்த நிறுவனத்தின் சோதனைக் கூடத்தில், இந்த வகையில் செயற்படக் கூடிய ஒரு அடிப்படை கணினி அலகைச் செயற்படுத்தி, செய்முறை விளக்கம் வழங்கிய ஐ பி எம் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் ஆகியோர், இப்போது உள்ள கணினிகளில் ஒரு வீதம் மாத்திரமே தகவல்களை துலக்குவதற்கு பயன்படுவதாகவும், ஆகவே இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் மிகவும் சிறப்பான கணினியை தம்மால் உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
அதாவது 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போதைக்கு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அரைவாசி அளவுக்கு பெரியதாக இருக்ககூடிய கணினியை ஒர் மேசையில் வைக்கும் அளவுக்கு சிறியதாக உருவாக்கிவிட முடியுமாம்.
அதாவது ஒரு சூப்பர் கம்யூட்டரை ஒரு சக்கைரைக்கட்டி அளவுக்குள் அடக்குவதுதான் தமது நோக்கம் என்கிறார்கள் அவர்கள். அதற்கு தற்போதைய மின்னணுவியலில் ஒரு பெரிய மாற்றம் வரவேண்டுமாம். அதாவது எமது மூளையை நிறையப் பயன்படுத்தி, மூளையைப் போல கணினி செயற்படுவதற்கான ஒரு முறையைக் கண்டுபிடிக்க வேண்டுமாம்.
இன்று இருக்கின்ற எந்த கணினியை எடுத்துக்கொண்டாலும், அவற்றை விட எமது மூளை 10,000 தடவைகள் அதிகமான உணர்திறன்மிக்கவையாம்.
மிகவும் அதீத செயற்திறன் மிக்க வழியில், சக்தியையும், வெப்பத்தையும் கடத்தக்கூடிய இரத்த நாளங்களையும், நாடிகளையும் கொண்ட ஒரு நுண்ணிய சுற்றோட்டத்தொகுதி இருந்தால் மாத்திரன்தான் அது சாத்தியமாகும்.
இன்றைய நிலையில் ஐ பி எம் நிறுவனத்தின் அதி தீவிரமான சக்தி மிக்க கணினியாக இருப்பது வட்சன் எனும் கணினியாகும். அமெரிக்காவில் தொலைக்காட்சி பொது அறிவுப் போட்டியில் இரு மனித மூளைசாலிகளை அது தோற்கடித்துவிட்டது. மனித மூளையை கணினி வென்றுவிட்ட ஒரு சரித்திர முக்கியத்துவம் மிக்க வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
ஆனால் இந்தப் போட்டி நியாயமற்றது என்று இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஏனென்றால் மனித மூளை அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க பயன்படுத்திய சக்தி வெறுமனே 20 வாட்டுகள் மாத்திரமே, ஆனால், அந்த வட்சன் கணினியோ அதற்கு 85,000 வாட்டுகள் சக்தியை பயன்படுத்தியுள்ளது.
ஆகவே கணினியின் அளவு மாத்திரமல்ல, சக்திச் செயற்திறனும் கூட அடுத்த தலைமுறைக் கணினிகளில் மிகவும் முக்கிய விடயமாக இருக்கப்போகிறது.
இதற்கு இந்த புதிய மூளையை, மின்னணு இரத்தத்த அடிப்படையகாக் கொண்ட கணினிகள் பதில் கூறும் என்கிறார்கள் ஐ பி எம் நிறுவனத்தின் விஞ்ஞானிகள். bbc
Post a Comment