Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவிய முக்கிய அதிகாரி கைது

(sfm) வானூர்தி தளத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை கடத்தும் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அங்கு பணியாற்றும் பாதுகாப்பு கட்டளை அதிகாரியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கடந்த 4 ஆம் திகதி ‘ஆடி அம்பலம்’ பகுதியில் இடம்பெற்ற 75 லட்சம் பெறுமதியான தங்க கொள்ளையுடன் தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் வர்த்தகர்கள் மோட்டார் வாகனமொன்றில் அதிகாலை நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் தங்க பிஸ்கட்டுகளை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

தாம் தங்க பிஸ்கட்டுகளை வர்த்தக நோக்கத்திற்காக கொண்டு சென்றுகொண்டிருந்த போது கொள்ளையர்களிடம் பறிகொடுத்ததாக வர்த்தகர்கள் காவல்துறையினர் முறையிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக அவர்கள் எடுத்துச் சென்றார்களா என்று சந்தேகம் நிலவியதாக விசாரணைகளை முன்னெடுக்கும் கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு – கிம்புலாபிற்றிய பிரதேசத்தைச் சேர்ந்த வானூர்தி நிலைய பாதுகாப்பு கட்டளை அதிகாரி குறித்த வர்த்தகர்கள் இருவருடன் தொடர்புகளை பேணி வந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளளது.

இதேவேளை, வழிபறி கொள்ளையை மேற்கொண்ட கிம்புலாபிற்றிய பிரதேசத்தையே சேர்ந்த ஒருவர் வர்த்தர்களிடம் பறித்துச் சென்ற தங்கக் பிஸ்கட்டுகளில் 25 லட்சம் பெறுமதியான 2 பிஸ்கட்டுகளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்யும் நோக்கில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள வானூர்தி நிலைய பாதுகாப்பு அதிகாரியே, வர்த்தகர்களிடம் இருந்து தங்க பிஸ்கட்டுகளை கொள்ளையிடுவதற்கு கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.