பெட்டிக்கடை வைத்திருந்தவர் நேபாளத்தின் ஆட்சியை பிடிப்பாரா..?
இந்தியாவில் சாதாரண பெட்டிக்கடை வைத்தவர்; அடுத்து நூடுல்ஸ் பிசினஸ்...தொடர்ந்து பல பிசினஸ்கள் என பரவ ஆரம்பித்தார். இன்று ‘போர்ப்ஸ்’ அங்கீகரித்த நேபாளத்தின் பெருங்கோடீஸ்வரர். நூடுல்சில் ஆரம்பித்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்...வங்கித் தொழில், சிமென்ட், ஓட்டல், ரியல் எஸ்டேட், உணவுப்பொருட்கள், மின்சார உற்பத்தி, எலக்ட்ரானிக் என்று அவர் தொழில் பரந்து விரிந்தது. நேபாள மொத்த உற்பத்தியில் அவர் தொழில் கணிசமான பங்கு வகிக்கிறது. வினோத் சவுத்ரி & இந்தியாவில் நூடுல்ஸ் தயாரித்து விற்று வந்த இவர் நேபாளத்தில் மன்னர் குடும்பத்துக்கு நூடுல்ஸ் உட்பட தேவையான பொருட்களை சப்ளை செய்து வந்தார். அப்படியே நேபாள ‘தொடர்பு’ நெருங்கியது. அன்று முதல் நேபாளத்தில் கொடிக்கட்டிப்பறக்க ஆரம்பித்தார். இவர் நுழையாத பிசினசே இல்லை என்று கூறலாம். சர்வதேச பெருங் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் போர்ப்ஸ் இதழ், இந்தாண்டு இவரை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த ஏழாண்டாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசத்திற்கு நடுவேயும் தன் எந்த ஒரு பிசினசையும் சிக்கலின்றி நடத்தி வந்தார் என்றால் இவரின் தனி சாமர்த்தியம் தான் காரணம். பல கட்சிகளும் இப்போது இவர் பிரதமர் ஆக வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஆனால் இவர் போடும் கண்டிஷன், முதலில் அரசியல் சட்டத்தை எல்லாருக்கும் திருப்தி தரும் வகையில் மாற்றி அமையுங்கள். அப்போது தான் நான் பொறுப்பேற்க முடியும். நான் பதவிக்கு வந்தால், என் பிசினஸ் டிரிக் கை பயன்படுத்தி, மாவோயிஸ்ட் பிரச்னையே இல்லாமல் செய்து விடுவேன்’ என்கிறார். அடுத்த மாதம் 19 ம் தேதி, புதிய அரசியல்சாசன சபைக்கு தேர்தல் நடக்கிறது. மன்னராட்சிக்கு பின் இந்த ஏழாண்டுகளில் ஐந்து அரசுகள் வந்து விட்டன. ஆனால், எந்த பலனும் இல்லை. நேபாளத்தின் மொத்த உற்பத்தி சதவீதம் 3.5. இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவானது. அதுபோல, பணவீக்க சதவீதம் 9ஐ தாண்டி விட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்களும், மாவோயிஸ்ட் பிரச்னையால் நேபாளம் பக்கமே தலைவைத்து படுக்க தயாரில்லை. ஸ்குவாட் பகுதியில் உள்ள நேபாள பங்கு சந்தை அலுவலகம் வெறிச்சோடி பல மாதங்களாகி விட்டன. அங்கு பங்குச்சந்தை தரகர்கள் கூட வருவதே இல்லை.
இவ்வளவுக்கும் நடுவே, ஒரு பக்கம் இந்தியா & சீனா வர்த்தக போட்டி, இன்னொரு பக்கம் மாவோயிஸ்ட் பிரச்னை என்று குழப்பமான, மிரட்டலான சூழ்நிலையில் நேபாளத்தில் கொடிகட்டிப்பறந்தவர் சவுத்ரி. அவருக்கு நேபாள அரசியல் அத்துப்படியாகி விட்டது. மன்னர் குடும்பத்துக்கு நூடுல்ஸ் விற்க ஆரம்பித்ததில் இருந்தே அவர் அரசியலையும் கற்க ஆரம்பித்து விட்டார்.இந்த லட்சணத்தில் அரசு அனுமதி இல்லாமல், புதிய தொழில்நுட்பங்களை பங்குச்சந்தை அலுவலகத்தில் கொண்டு வர முடியாது. அந்த அளவுக்கு மிகவும் சாதாரணமான கம்ப்யூட்டர்கள் கூட அங்கு போதுமான அளவு இல் லை. ‘பங்குச்சந்தை நிர்வாகத்தை தனியார் மயமாக்கலாம் என்று யோசனை கூறி விட்டோம். ஆனால், இதுவரை எந்த அரசும் நிலையாக இல்லாததால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை’ என்று தனியார் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இவ்வளவுக்கும் பிரதமர் ஆகும் கனவில் உள்ள சவுத்ரி என்ன சொல்கிறார் தெரியுமா? நேபாளத்தில் பல முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.
அதில் முக்கியமானது, அரசியல் சட்டம். இதில் எல்லாருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் திருத்தினால் தான் மாவோயிஸ்ட்களும் ஏற்றுக்கொள்வர். மாவோயிஸ்ட் பிரச்னைக்கு காரணமே, மக்கள் எல்லோரின் நலன்களை கருத்தில் கொள்ளாததுதான். மக்கள் நலன்களை கருத்தில் கொள்ளும் திடமான அரசியல் சட்டம் கொண்டு வர வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால், எனது பிசினஸ் சூட்சமங்களை அடிப்படையாக வைத்து வேலை வாய்ப்பை பெருக்குவேன். அதன் மூலம் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு தீர்வு காண்பேன். எப்படி பிஸினசில் சாதித்தேனோ, அதை ஆட்சியில் அமல்படுத்தி நாட்டில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன்’’ என்கிறார்.
சவுத்ரி பிரதமராவது எப்போது?
நேபாள அரசியல் சட்டம் இன்னும் குழப்பமாகவே உள்ளது. அதில் திடமான அம்சங்களை சேர்க்க வேண்டும். அப்போது தான் எந்த ஆட்சியும் நிலையாக இருக்க முடியும். கடந்த 2006 ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டபின், 2008 முதல் தொடர்ந்து அரசியல் சட்ட சபை அமைத்து புதிய அரசியல் சட்டம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த தேர்தல் நடக்கவே இல்லை. அடுத்த மாதம் 19 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவர். அதன் பின், புதிய பிரதமர் பதவி ஏற்க முடியும். ஆக, சவுத்ரி நினைப்பது இந்தாண்டு இறுதியில் தான் தெரியும்.
2008 முதல் 6 பிரதமர்கள்
*2008 மே 28 & ஆகஸ்ட் 18: கிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள காங்கிரஸ்)
*2008 ஆகஸ்ட் 18 & 2009 மே 24: ப்ரசந்திரா (நேபாள ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
*2009 மே 25 & 2011 பிப்ரவரி 6 : மாதவ் குமார் நேபாள் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி & ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்.
*2011 பிப்ரவரி 6 & 2011 ஆகஸ்ட் 29 : ஜாலா நாத் கனால் (நேபாள கம்யூ கட்சி & ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்.
*2011 ஆகஸ்ட் 29 & 2013 மார்ச் 16: பாபு ராம் பட்டாரை (ஒன்றினைந்த கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
*2013 மார்ச் 16 & இதுவரை : கில் ராஜ் ரெகினி (எந்த கட்சியையும் சாராதவர்).
Post a Comment