புத்தளம் வாக்குச் சீட்டு விவகாரம் - மோசடி இல்லையென்கிறது நீதிமன்றம்
(Adt) புத்தளம் சென். அன்ரூஸ் கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களை புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று 09-10-2013 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புத்தளம் மாவட்ட நீதிபதி ரங்க திஸாநாயக்க இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரி கட்டடத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் சில செப்டெம்பர் 24ம் திகதி மாலை கைப்பற்றப்பட்டன.
எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் புத்தளம் மாவட்ட செயலக களஞ்சியசாலையில் வைக்கப்பட வேண்டும்.
ஆனால் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக குறித்த வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்ட இடத்திலேயே கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குச்சீட்டுக்களை மீட்ட பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வாக்கு மோசடி இடம்பெற்றதற்கு ஆதாரம் இல்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, வாக்குச்சீட்டுக்களை புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment