Header Ads



சாய்ந்தமருது ஐஸ் தொழிற்சாலையின் உற்பத்தி நிறுத்தம் - மீனவர்கள் பெரும் பாதிப்பு

 (ஏ.எல்.ஜுனைதீன்)

  கல்முனைப் பிரதேச மீனவர்களின் நன்மை கருதி சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை இம் மாதம் ( அக்டோபர் ) முதலாம் திகதியிலிருந்து உற்பத்தியை நிறுத்தியிருப்பதுடன் தொழிற்சாலையும் மூடப்பட்டிருப்பது குறித்து இப்பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  கல்முனையிலுள்ள “முனை” எனும் இடத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை சுனாமியினால் முற்றாக சேதமடைந்ததை அடுத்து இப் பிரதேச மீனவர்களின்  நன்மை கருதி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபினால் சாய்ந்தமருதில் கடலிலிருந்து 65 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச நிலத்தில் (முன்னர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அமைந்திருந்த இடம்) மீண்டும் 2007 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

  இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இந்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையில் நாளாந்தம் 330 க்கும் மேற்பட்ட ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இத் தொழிற்சாலையை கல்முனைத் தொகுதி மீனவர் கூட்டுறவுச் சங்கம் குத்தகை அடிப்படையில் இப் பிரதேச மீனவர்களின் நன்மை கருதி செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  மீனவர்களின் நன்மை கருதி செயல்பட்டு வந்த சாய்ந்தமருது கடற்கரையில் அமைந்துள்ள ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையே தற்பொழுது எந்த உற்பத்தியும் இல்லாமல் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இப் பிரதேச மீனவர்கள் ஐஸ் கட்டிகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

  இந்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை குத்தகை அடிப்படையில் இயக்கிக் கொண்டிருக்கும் கல்முனைத் தொகுதி மீனவர் கூட்டுறவுச் சங்க நிருவாகிகளிடம் இது சம்மந்தமாக வினவியபோது அவர்கள் தெரிவித்ததாவது,

  கடற்கரையிலிருந்து 65 மீற்றருக்கு அப்பாலுள்ள அரச நிலத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்றோழில் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இந்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை இப் பிரதேச மீனவர்களின் நன்மை கருதி நாங்கள் இயக்கி வந்தோம்.

  இத் தொழிற்சாலையைச் சூழவுள்ள குடியிருப்பாளர்கள் இத் தொழிற்சாலை இவ்விடத்தில் இயங்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பலரிடம் முறைப்பாடுகள் செய்திருக்கிறார்கள்.கல்முனை மேயர்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சுற்றாடல் பகுதி மற்றும் பொலிஸார் என்போரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் நிமிர்த்தம் கல்முனை மேயர் சிராஜ் மீராசாஹிப் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் என்போர் தொழிற்சாலைக்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டனர்.

  பிரதேச செயலாளர் இந்த இடத்திலிருந்து இத் தொழிற்சாலையை அப்புறப்படுத்தி மக்கள் குடியிருப்பு குறைந்த ஒரு இடத்தில் அமைப்பதற்கு  இடம் தருவதாக உறுதியளித்துள்ளார். அப்படியாயின் இத்தொழிற்சாலையை இடமாற்றுவது யார்? இதற்கான செலவை யார் பொறுப்பெடுப்பது? என்ற பிரச்சினை உள்ளது.

  இறுதியாக பொலிஸார் எங்களை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையே உற்பத்தியை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அந்த நேரத்திற்குள் ஐஸ் உற்பத்தி செய்ய முடியாது. முழு நாளும் உற்பத்தி செய்தால்தான் பூரணமாக ஐஸ் கட்டிகளைச் உற்பத்தி செய்ய முடியும். எங்களால் நட்டமடைய முடியாது. இதனால் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடியுள்ளோம் என்றனர்.

  இத் தொழிற்சாலையை சூழவுள்ள குடியிருப்பாளர்களிடம் வினவியபோது அவர்கள் தெரிவித்ததாவது,

  இத் தொழிற்சாலை இயங்கும்போது தொடர்ந்து பாரிய சப்தம் வந்து கொண்டே இருக்கிறது. ஐஸ் கட்டிகளை உடைக்கும் போது இன்னும் சப்தம் அதிகமாகின்றது. எங்களால் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. எமது குழந்தைகளால் படிக்க முடிவதில்லை.  இதனால் எங்கள் சூழல் பாதிப்படைகின்றது. இவ்விடத்தில் இத் தொழிற்சாலை இயங்க முடியாது என்று கூறுகின்றனர்.

  இப் பிரதேச மீனவர்களோ எங்களுக்கு ஐஸ் தொழிற்சாலை இப் பிரதேசத்தில் வசதியான இடத்தில் இயங்க வேண்டும். நாளாந்தம் ஐஸ் கட்டிகள் கிடைக்க வேண்டும். நாங்கள் நாளாந்தம் பிடிக்கும் மீன்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். பாதுகாப்பாக அவைகள் கொழும்புக்கு அனுப்பப்படல் வேண்டும் என்கின்றனர்.

  மக்களின் சுற்றாடல் பாதுகாக்கப்படல் வேண்டியது அவசியமாகும் அதேவேளை மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களும் பழுதடையாமல் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஐஸ் கட்டிகளும் வேண்டும்.

  மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள இப் பிரதேசஅரசியல்வாதிகள்தான் சாய்ந்தமருது ஐஸ் தொழிற்சாலையின் பிரச்சினைக்கு சரியான தீர்வை உடனடியாகக் காணல் வேண்டும்.


No comments

Powered by Blogger.