நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - கடும் காற்றும் வீசலாம்
(Nf) நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான 144.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி குருநாகலில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய விக்டோரியாவில் 51 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், போவதென்னவில் 30 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், ரந்தெம்பேவை அண்மித்த பகுதிகளில் 37 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதனைத் தவிர நுவரெலியா மாவட்டத்தில் 42 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை புத்தளத்திலிருந்து காலி ஊடான மட்டக்களப்பு வரையுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற் பிரதேசம் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment