மத்திய, வடமேல் மாகாண சபைகளில் முஸ்லிம்களுக்கு எந்த பதவியும் இல்லை
எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருதாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் தெரிவு செய்யப்பட்ட பின் அவர்கள் அக்கட்சியின் அரசியலமைப்பு மற்றும் ஒழுக்கக் கோவைக்கிணங்கவே செயற்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடமேல், மத்திய மாகா ணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் உரையாற்றும் போதே அமைசசர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பல அரசியல் கட்சிகள் இணைந்த கட்சியாகும். இக்கட்சி உறுப்பினர்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதியின் தலைமையில் செயற்பட்டு இரு மாகாணங்களிலும் தேர்தலில் வெற்றி பெற்று மாகாண சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அக்கட்சியின் அரசியலமைப்பு ஒழுக்கக் கோவைக்கு இணங்க செயற்படுவது அவசியமாகும்.
அதேபோன்று மாகாண சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலச்சினையில் போட்டியிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கக் கட்சியுடன் இணைந்தே செயற்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். முன்னணியின் தலைவர்களின் கருத்துக்களுக்கிணங்க சகலரும் சம அங்கத்தவர்கள் எனக்கருதி செயற்படுவதும் முக்கியமாகும்.
மாகாண சபை அமர்வுக்கு முன்னர் கீழ் குறிப்பிடப்படும் பெயர்களைக் கொண்டவர்களை சபையின் பதவிகளுக்கு நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கிணங்க வடமேல் மாகாண சபைத் தலைவர், உபதலைவர், சபை முதல்வர் அரசாங்கக் கட்சி கொரடா போன்ற பதவிகளுக்கு அபேரத்ன முதியன் சேலாகே தசாநாயக்க, றம்பண்டா விமலகே தேவதாச வர்ணகுலசூரிய திசேரா, ஜொஹான் சென்ஸ்டர்ட் பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய மாகாண சபையின் தலைவர், உபதலைவர், சபை முதல்வர், அரச தரப்பு கொரடா போன்ற பதவிகளுக்கு அபேகோன் முதியன்சலாகே மஹிந்த அபேகோன், ரத்நாயக்க, ரத்நாயக்க முதியன்சலாகே பண்டார ரத்நாயக்க, துரைசாமி மதியுகராஜா, திசாநாயக்க முதியன்சலாகே அநுராத லங்கா பிரதீப் ஜனரத்ன ஆகிய உறுப்பினர்களை நியமிக்குமாறும் நான் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment