Header Ads



சிக்சர், பவுண்டரிகள் அடிச்சா கிரிக்கெட்டுக்கு நல்லது இல்லை

இந்தியாஆஸ்திரேலியா அணிகள் நாக்பூரில் நேற்று 6வது ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸி. 6 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. ஜார்ஜ் பெய்லி 114 பந்தில், 6 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 156 ரன்னும், வாட்சன் 94 பந்துகளில், 3 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன்னும் விளாசினர். இந்திய தரப்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 2, புவனேஷ்வர்குமார், முகமது ஷாமி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா பேட் செய்தது. ஷிகார் தவான், ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 29.3 ஓவரில் 178 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 89 பந்தில், 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் வந்த கோஹ்லி, ஆஸி. பந்து வீச்சாளர்களை ஓடஓட விரட்டினார். ஓவருக்கு ஓவர் பவுண்டரிகள் பறந்த வண்ணம் இருந்தது. ஷிகார் தவான் 102 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 100 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரெய்னா 16 ரன் எடுத்த நிலையில் நடுவரின் தவறான முடிவால் விக்கெட்டை பறிகொடுத்தார். யுவராஜ்சிங் 3 பந்துகளை சந்தித்து டக்அவுட்டானார். ஒரே ஓவரில் ஜான்சன் 2 விக்கெட் வீழ்த்தியதால் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. 

ஆனால் கோஹ்லி அசரவில்லை. 61 பந்துகளில், 1 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். மறுமுனையில் டோனி நிதானமாக ஆடி ரன்சேர்த்தார். முடிவில் இந்திய அணி 49.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோஹ்லி 115( பந்து 66, சிக்சர் 1, பவுண்டரி 18), டோனி 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் 22 என சமநிலை அடைந்துள்ளது. 2 ஆட்டங்கள் மழையால் ரத்துசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி மற்றும் 7வது ஒருநாள் போட்டி வரும் 2ம்தேதி பெங்களூரில் நடக்கிறது. 

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், எல்லா பவுலர்களின் பந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டு விட்டது. எல்லா சேசிங்கும் இதுபோன்று அமைந்தால் அது கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. 

7 மணி நேரம் பவுண்டரி, சிக்சர்களை மட்டுமே பார்க்க முடிந்தது. தவானும், ரோகித்தும் 30 ஓவர்கள் வரை களத்தில் நின்று நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஷிகார் தவான் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அதேவேளையில் கோஹ்லியின் ஆட்டம் மீண்டும் பிரமாதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பதிலடி கொடுத்து ஸ்கோரை நல்ல நிலையிலேயே வைத்திருந்தார் என்றார். 

ஆஸி. கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், இவ்வளவு பெரிய ஸ்கோரை குவித்தும் தோல்வியை தழுவியது துரதிர்ஷ்டவசமானது. கோஹ்லி ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இதுபோன்று ஆடினால் எந்த இலக்கும் சாத்தியப்படும். ஆட்டத்தின் துவக்கத்திலேயே விக்கெட்களை வீழ்த்தினால் தான் வெற்றிக்கு வழிகாண முடியும். அடுத்த ஆட்டத்தில் இதில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார்.

விரட்டும் விராட்

*    விராட் கோஹ்லி 122 இன்னிங்சில் 17 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் குறைந்த ஆட்டங்களில் 17 சதங்களை விளாசியவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  

*    கோஹ்லி இந்த ஆண்டிலும் 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2011, 2012ல் அவர் 1000 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார். இந்திய வீரர்களில் கங்குலி(19972000), சச்சின்(199698), டோனி(200708)ம் ஆண்டுகளில் 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். 

*    கோஹ்லி 61 பந்துகளில் நேற்று சதம் விளாசினார். 15 நாட்களுக்கு முன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் அவர் 52 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். 

*    சேசிங்கில் கோஹ்லி 11 சதங்கள் அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் 17 சதம் விளாசியுள்ளார். கோஹ்லி சதம் அடித்த 11 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சச்சின் சதங்களில் 14 வெற்றி கிடைத்தது. கோஹ்லி அடித்த சதங்களில் ஐந்து, 300 ரன்களுக்கு மேல் உள்ள இலக்குகளில் அடிக்கப்பட்டது. 

*    கோஹ்லி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களில் 68, 61, 100, 68, 115 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் ஒரு வீரர் 50 மற்றும் அதற்கு மேல் ரன்குவிப்பது இதுவே முதன்முறை. 

*    ஆஸி.க்கு எதிராக சச்சினுக்கு பிறகு 1000 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். சச்சின் 20 ஆட்டத்தில் இந்த ரன்னை எடுத்தார். டோனி 29 ஆட்டங்களில் எடுத்துள்ளார். 

*    சேசிங்கில் டோனி 34 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதன் மூலம் அவர் ஜான்டிரோட்சின் சாதனையை(33 ஆட்டம்) முறியடித்துள்ளார். 

*    இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி துவக்க ஜோடியாக தவான்ரோகித் சர்மா மாறியுள்ளனர். இந்த ஜோடி 18 இன்னிங்சில் 1068 ரன் குவித்துள்ளது. 5 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர்.

*    தவான் நேற்று 4வது சதம் அடித்தார். அவர் 24 ஆட்டங்களில் 1000 ரன் கடந்துள்ளார். இதற்கு முன்னர் கோஹ்லியும் இந்த ஆட்ட எண்ணிக்கையில் ஆயிரம் ரன் எடுத்திருந்தார். 

No comments

Powered by Blogger.