Header Ads



இடைத்தரகராகும் மதகுரு..!

(வடபுலத்தான்)

Rayappu Joseph' போகிறபோக்கைப் பார்த்தால் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசேப் முழுமையான ஒரு அரசியல்வாதியாகி விடுவார் போலிக்கு' என்றார் நண்பர் ஒருவர்.

'அவர் எப்பவோ அரசியல்வாதியாகி விட்டாரே, அது உங்களுக்குத் தெரியாதா?' என்றார் இன்னொருவர்.

மன்னார் ஆயர் மட்டுமல்ல, வடக்கில இருக்கிற அநேகமான கிறிஸ்தவ மதகுருமார் முழுநேர அல்லது பகுதிநேர அரசியல்வாதிகளாகத்தான் கனகாலகமாகத் தொழில் பாக்கினம். வெளிநாட்டு ராஜதந்திரிகள், தூதுவர்களே அவர்களைத்தானே தேடி வருகிறார்கள்' என்று விளக்கமளித்தார் அருகில் நின்ற மூன்றாவது ஆள்.

வடபகுதியில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ மதகுருமாரைப் பற்றிய பரவலான பொது மக்களின் அபிப்பிராயம் இப்படித்தான் உள்ளது. இதை யாரும் மறுக்கவும் முடியாது.

இதில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராஜப்பு ஜோசப்புதான் முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்த்தேசியத்தின் பாதுகாவலராக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதன்மையான ஆலோசகராக, அந்தக் கட்சிக்குள் நடக்கின்ற போட்டிகள், குத்துவெட்டுகளில் சமாதானத் தூதராக, இடைத்தரகராக, தேர்தல் வியூகத்தை வகுக்கும் முக்கிய பிரதானியாக, பிரச்சாரகராக என அவர் வகிக்கின்ற பாத்திரங்கள் அதிகம்.

இதனால், அவர் ஏனைய அரசியல்தரப்புகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக மோதியுமிருந்தார். குறிப்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் மன்னார் ஆயருக்குமிடையில் நடந்த மோதல்கள் உலகறிந்தவை.

இந்த மோதல்களில் இரண்டு தரப்புக்குமிடையில் இருக்கின்ற பரஸ்பரம் லாபநட்டக் கணக்குகளே முக்கிய காரணங்களாகின.

இது பற்றி கடுமையான விமர்சனங்களும் உண்மைகளும் பலவிதமான உட்கதைகளும் உண்டு. காலம் ஒரு நாள் அவற்றை திறந்து காட்டும்.

இலங்கையில் வேறு மதத்தவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்களே. அப்படியென்றால், இங்குள்ள கிறிஸ்தவ மதகுருக்கள் அரசியலில் ஈடுபடுவதை ஏன் தவறாகப் பார்க்கிறீர்கள்? என்று நீங்கள் கேட்கக் கூடும்.

வெளிப்படையாகப் பார்த்தால்  உங்கள் கேள்வி நியாயமானதே. ஆனால், மதகுருக்கள் மக்களை வழிப்படுத்தவேண்டியவர்கள். அதற்காகவே சமூகம் அவர்களுக்கு முன்னிலையான மதிப்பை வழங்கிக் கௌரவிக்கிறது.

அப்படி முன்னிலை மதிப்பைப் பெறுவோருக்கு அதிகமான பொறுப்புகளுண்டு.

பொதுவாக மதகுருமாரை எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதிப்பதுண்டு. உதாரணமாக, கிறிஸ்தவ மதகுருமாருக்கும் அருட்சகோரிகளுக்கும் சைவ சமயத்தவர்களும் பெருமதிப்பளிப்பதுண்டு.

அதைப்போல பௌத்தத் துறவிகளை பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் மதித்தனர்.

அவ்வாறே இஸ்லாமிய மௌலவிகளையும் பிற சமூகத்தினர் உயர்வாக மதித்தனர்.

ஆனால், இலங்கையின் இனவாத அரசியல் மக்களை மட்டுமல்ல, மதங்களையும் பிரித்து, தனித்தனிக் கூறுகளாக்கி விட்டன.

இனவாத அரசியலைத் தங்களின் நலனுக்காக கையில் தூக்கிய அரசியல்வாதிகள் மதகுருக்களையும் பயன்படுத்தத் தொடங்கினர்.

இதனால், அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த மதத்தலைவர்களும் மதகுருமாரும் தத்தம் சமூக நிலைப்பட்ட அரசியலுக்குள் சிக்கி அரசியலில் மூழ்கத் தொடங்கி விட்டனர்.

மதகுருக்கள் அரசியலில் ஈடுபடத்தொடங்க, அவர்கள் மீதான மதிப்பும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது.

பேரினவாத ஒடுக்குமுறை மேலோங்கியபோது அதனைச் சார்ந்து சில பௌத்த துறவிகள் நின்ற காரணத்தினால்,  ஒட்டுமொத்தமாகவே பௌத்த துறவிகளின் மீதான மதிப்பு பிற சமூகங்களிடம் மங்கியது.

இப்பொழுது, அதை ஒத்த தன்மை தமிழ்த்தேசிய அரசியலுடன் நிற்கும் மதகுருமாரையும் சூழத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்திலும் தமிழ்த்தேசியக் கருத்தியலிலும் நீடித்த குறைபாடாக இருக்கும் ஜனநாயகமின்மை, பிற்போக்குக்குக் குணாம்சம் போன்றவற்றைக் களையாமல், பேணிப் பாதுகாக்கும் மதத்தலைவர்களின் மீதான கேள்விகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

இதற்கு நல்ல உதாரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளே தொடர்ந்து கொண்டிருக்கும் உள்முரண்பாடுகளையும் அதற்குள்ளிருக்கும் ஜனநாயமின்மையையும் தீர்க்காமல் அதற்குள்ளிருக்கும் அமைப்புளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகும்.

அப்படி உள் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணாமல் பொத்திப் பொத்தி வைத்திருக்கவே மேலும் மேலும் முரண்பாடுகளும் உட்பகையும் பெருகிக் கொண்டிருக்கிறது.

இதனால்தான் வடமாகாணசபை வேட்பாளர் தெரிவு தொடக்கம் பதவியேற்பு நிகழ்வு, அமைச்சுப் பகிர்வு போன்றவற்றில் எல்லாம் இழுபறிகளும் முரண்பாடான அறிக்கைகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைமைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படி உள் முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலையில் குறிப்பிட்ட ஆண்டகையே தலையிட்டு சமரசம் - தரகு - செய்து வைக்கிறார்.

தற்போதும் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்யவிருந்த மாகாணசபை உறுப்பினர்களை அந்தத் தீர்மானத்திலிருந்து விலக்கியிருக்கிறார். எனினும் ஆண்டகையின் கட்டளையிலிருந்து ஒரு ஆடு (சிவாஜிலிங்கம்) விலகிவிட்டது.

என்னதான் ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி, கிழிஞ்சல்களைக் கையால் மறைத்தாலும் தொடர்ந்து ஏற்படும் பொத்தல்களை அவரால் மறைக்கவே முடியாது.

இறுதியில் மதத்தலைவர் என்ற அடையாளமும் இல்லை. அரசியற் தலைவர் என்ற அடையாளமும் இல்லை. இடைத்தரகர் என்ற கதைதான் மிஞ்சும்.

வரலாறு எப்போதும் உண்மையையும் உண்மைக்காகத் தியாகம் செய்வதையுமே தன்னுடைய பதிவேட்டில் வைத்திருக்கிறது.

No comments

Powered by Blogger.