Header Ads



சி.வி. விக்னேஸ்வரன் குறித்த சில குறிப்புக்கள்

(Pp) வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக, இன்று காலை 9 மணியளவில் பதவியேற்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். 

கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் - 

*கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன். 

*இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள். 

*இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார். 

*இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன். 

*ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார். 


*11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர்கல்வி பெற்றார் விக்னேஸ்வரன். 

*லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். 

*கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார். 

*1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 

*1979 மே 07ம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். 

*1987ல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 

*வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல்நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 

*1995ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். 

*உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும். 

*2004ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்ரெம்பர், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 

*யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு, 132,255 விருப்பு கிடைத்தன. இது சிறிலங்காவில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர்பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும்.

1 comment:

  1. இவருடைய தகுதிக்கும் சிறப்புக்கும் ஈடாக அரசியலில் இதுவரையில் எவருமே இல்லை என்பதே புலப்படுகிறது. அரசியல் ஒரு சாக்கடை. எவரும் அதில் நுழையுமுன் சுத்தமாக இருப்பார்கள். அதில் வீழ்து விட்டால் விழுந்தவரையும் சாக்கடை அசுத்தப்படுத்தி விடும். பதவிக்கும் அதீத பண ஆசைக்கும் தான் அரசியலுக்கு மக்களுக்கு சேவை செய்ய வந்ததையும் மறந்து விடுவார்கள். ஆனால், சிலர் அரச பொது மக்கள் சொத்தை சுரண்டலாம் என்ற நோக்கிலேயே அரசியலுக்கு வருகிறார்கள், இவர்களை திருத்த முடியாது. எப்படியோ, இப்படியான குற்றச்சாட்டில் திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் ஒருபோது விழ மாட்டார் எனறே நம்புகிறோம், ஏனெனில், பண ஆசையோ, பதவியாசையோ இவரிடம் இனியும் இருக்காது. பணத்தினளவு இவரிடம் போதியளவு இருக்கும், பதவியாசையும் தான் செய்த நீதியரசர் பதவியைக்கொண்டு பூர்தியாகியிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.