Header Ads



பெண்மணி: அவள் கண்மணி

 (எம்.ஏ.ஜி.எம் முஹஸ்ஸின்)

இறைவன் படைத்த அற்புதமான படைப்புகளில் ஒன்றுதான் மனித படைப்பு. அதிலும் பெண்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நற்பன்புகளும், நன்நடத்தைகளும் இருப்பது சிப்பியோடு முத்து ஒட்டி இருப்பதுபோல சேர்ந்தே காணப்படுகிறது.

இருப்பினும் பெரும்பாலான பெண்கள் அவற்றை வெளிக்கொண்டு வராமல் தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கின்றனர். இதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை இந்த வகையில் தான் வாழ்கின்ற சுற்றுச்சூழல் இஸ்லாத்தைப் பற்றிய பூரண விளக்கமின்மை, சமுதாயத்தின் மத்தியில் ஏற்படும் ஒருவிதமான பயம் கலந்த வெட்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றுதான் கண் அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு மனிதனின் உடம்பில் எவ்வளவு முக்கியமான பகுதியோ அதுபோலத்தான் ஒரு குடும்பத்தில் பெண்ணின் நிலையும் உள்ளது.

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும் அவற்றில் மிகச்சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்). செல்வத்துள் செல்வம் ஒழுக்க மாண்புடையவளே என முழங்குகிறது இந்த நபிமொழி.

பெண்களைப் பொறுத்தவரை தங்களை அறியாமலே ஒரு சில தவறுகளை செய்கிறார்கள். அது தவறு என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஆயினும் சில நேரங்களில் நல்ல ஹதீஸ், பயான்கள் கேட்கும் போதுதான் யோசிப்பது ஓ நாம் தவறுதான் செய்கின்றோம் என்று அப்படியாவது தன்னைத் திருத்திக்கொண்டாலும் பரவாயில்லை அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அப்படியும் ஒரு சிலர் செய்வதில்லை மாறாக அது ஒரிரு நாட்கள்தான் மனதில் நிற்கும்வரை எந்தத்தவறும் செய்வதில்லை, படிப்படியாக மறந்துபோனால் பழைய குருடி கதவைத்திறடி என்று மாறிவிடுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம்? கூடுதலான விழிப்புணர்வு இல்லை தானும் தனது வேலையும் என்று இருக்காமல் எமது மார்க்க அறிவைக் கூட்டிக்கொள்ள முயல வேண்டும். வானம் முட்டாமல் போய்க்கொண்டிருப்பதைப்போல படிப்பதற்கு எல்லையே இல்லை. எனவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறுபகுதி நேரத்தை ஒதுக்கி நல்ல விஷயங்களைத்தேடி படிக்க முயல்வதுடன் அதை நடைமுறையிலும் கொண்டுவர முன்வரவேண்டும். இல்லையேல் இந்த உலகில் வாழ்வதில் அர்த்தமே இல்லை.

நாம் செய்யும் தவறில் மிக முக்கியமானது ஒருவர் இல்லாத நேரத்தில் அவரது குறைகளை பேசுவதும், அவர்களைக் கேவலப்படுத்துவதும் பழக்கமாகி விட்டது. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வன்மையாக கண்டிக்கிறான்.

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்அன் 49: 11)

மேலும் ஒரு கூட்டம் இருக்கிறது திருந்தி வருபவர்களைக்கூட அவர்களது பாதையில் ஒழுங்காக செயல்பட விடுவதில்லை. அதையும் இதையும் பேசுவது. குறிப்பாக ஒரு பெண் தன்னுடைய பர்தா விஷயத்தில் தன்னை சரிசெய்து கொண்டால் கூட அதற்கும் ஏலனமாக பேசுவது முதலில் இவ எப்படி இருந்தா இப்ப பெரிதாக பர்தா எல்லாம் போட்டுக்கிட்டு வந்திருக்கா இவளைப்பத்தி எங்களுக்கு தெரியாதா? என்று இந்த மாதிரி எல்லாம் எடுத்தெறிந்து பேசுவது.

இப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ளவேண்டும், இதுபற்றி அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.. (அல்குர்ஆன் 13: 11) எனவே நாம் கட்டுப்பாடின்றி பேச்சை விட்டுவிடக்கூடாது. எதை பேசினாலும் சிந்தித்து பேசவேண்டும். நரகத்திற்கு கொண்டு செல்லும் சொற்களை தன் நாவால் மொழிந்து விடக்கூடாது.
தன் வெட்கத்தலத்தையும், நாவையும் பாதுகாக்துக் கொள்வதாக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்வேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை அடிக்கடி நாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

கூடுதலான பெண்கள் தங்களை அறியாமலேயே நறுமனம் பூசிக்கொண்டு வெளியே சுற்றித்திரிவது, இதன் விபரீதம் அவர்களுக்கு தெரிவதில்லை ஒரு பெண் நறுமனம் பூசிக்கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டும் என்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மது)
மேலும் எந்தப்பெண் நறுமனம் பூசிக்கொண்டு பிறர் அந்த வாடையை நுகர வேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் செல்கிறாளோ அவள் கடமையான குளிப்பைப்போன்று குளிக்காதவரை அவளுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. (அஹ்மது)

எனவே தாங்கள் ஒவ்வொருவரும் இது விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாமல் பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்களைத் தேர்வு செய்யும் போது அது மணம் உள்ளடங்கியதாகவும் நிறம் எடுப்பாகவும் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

இன்று பலர் ஐவேளை தொழுகையில் கூட கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் இன்றைய பொழுதை எப்படி கடத்தினீர்கள் என்று கேட்டால் காலையில் எழுந்து பிள்ளைகளை ஸ்கூல் அனுப்புவதிலேயே போதுமென்று ஆகிபோச்சு அப்படியே பிள்ளைகள் பத்தி பதறி வருவார்களே என்று அடுத்த வேலை சமையலில் ஆரம்பித்து ஒருவாரு லுஹரைத் தொழுதாச்சு அத்தோடு சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்கி எழுந்துப்பார்த்தால் மஃக்ரிப் நேரம் வந்து கொண்டிருக்கிறதே என்று சொல்லிவிட்டு அப்படியே அஸர் தொழுது முடிய மஃக்ரிப் பாங்கும் சொல்ல அதையும் சேர்த்து தொழுதாச்சு இப்படியே தங்கள் தொழுகையில் ஒரு உப்புசப்பு இல்லாதமாதிரி செயல்படுகிறார்கள்.

அத்துடன் பெரிதான காதுப்பூ, மோதிரம், காப்பு இவைகளை அணிந்து கொண்டே ஒழு செய்வது இப்படி செய்யும்போது அந்த இடங்களில் தண்ணீர் ஒழுங்காக படுவதில்லை இதனால் ஒழு சரியாக நிறைவேறாது. இதை யாரும் கவனிப்பதில்லை. எனவே இது விஷயத்தில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவே இப்படியான சிறிய சிறிய தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதுபோல தெரியாத விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள எவ்வளவோ வாய்ப்பு வசதிகள் இருந்தும் கூட அதைக்கேட்பதற்கு வெட்கப்படுகிறார்கள். இதுவும் பெரும் தவறுதான் இப்படிக் கேட்டால் ஏதும் நினைப்பார்களா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பது ஆனால் ஸஹாபாப்பெண்கள் எப்படியான கேள்விகளெல்லாம் நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்கள் என்பது நாமறிந்த விஷயமே எனவே இது விஷயத்தில் வெட்கப்படாமல் தயங்காமல் எங்களது மார்க்க விஷத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளவேண்டும்.

காலமும், கடலலையும் எவருக்காகவும் காத்திருக்காது. நாம்தான் வெற்றிப்பாதையை நோக்கி எங்களின் அனைத்து செயல்களையும் திருத்திக் கொள்ளவேண்டும். மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே எங்களை இறைவன் மன்னிக்ககூடியவன் என்ற உறுதியான நம்பிக்கையுடனும், முழுமையான ஈமானுடனும் வாழ்ந்தால் ஒவ்வொரு பெண்ணும் அவ்வீட்டின் கண்மணி மட்டுமின்றி சுவர்க்கத்தின் கண்மணியாகவும் பூத்துக் குலுங்கலாம் 
இன்ஷா அல்லாஹ்.

No comments

Powered by Blogger.