இவ்வருட ஹஜ் கடமை முடிவடைந்தது
ஹஜ் கடமையை நிறைவேற்றிய 188 நாடுகளின் சுமார் 1.4 மில்லியன் முஸ்லிம் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். இம்முறை ஹஜ் கடமை எந்த பாரிய விபத்துகளும் இன்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் 5 தூண்களில் ஒன்றான ஹஜ் கடமை நேற்று வெள்ளிக்கிழமையுடன் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது. சைத்தானுக்கு கல்லெறியும் சடங்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து யாத்திரிகர்கள் வெளியேற அனுமதிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை மினாவில் இருக்கும் பாரிய கொங்க்ரீட் கட்டுமானங்களை நோக்கி சைத்தானுக்கு கல்லெறியும் சடங்கு முடிந்ததும் யாத்திரிகர்கள் தமது இறுதி தவாப் அல்லது கஃபாவை சுற்றி வலம் வந்ததன் பின்னர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளில் ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள் ஈடுபட்டனர்.
ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள் மக்கா ஹோட்டல்களில் இருந்து தனது பயணப் பொதிகளை வாகனங்களில் ஏற்றி வெளியேறியவண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 100 கிலோ மீற்றர்கள் பயணித்து ஜித்தாஹ் சர்வதேச விமான நிலையத்தினூடே நாடு திரும்புவதற்கான விமானங்களை பதிவுசெய்து வருகின்றனர்.
ஹஜ் காலத்தில் பாதுகாப்பு பணிக்காக சவூதி அரசு 100,000 க்கு அதிகமான துருப்புகளை நிலைநிறுத்தியது. இந்நிலையில் இம்முறை ஹஜ் கடமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சவூதி அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக சவூதியில் ஆட்கொல்லி மார்ஸ் வைரஸ் பாதிப்பினால் 51 உள்நாட்டினர் பலியான சூழலிலேயே இம்முறை ஹஜ் கடமை முன்னெடுக்கப்பட்டது. எனினும் இம்முறை ஹஜ்ஜில் பாரிய சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை இரண்டு பில்லியனுக்கு குறைவாகவே இருந்தது. இதுவே கடந்த ஆண்டில் மொத்தம் 3.2 மில்லியன் யாத்திரிகர்கள் பங்கேற்றனர். யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைவும் இம்முறை ஹஜ் கடமை வெற்றிபெற காரணமாக இருந்ததாக சவூதி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
ஹஜ் கடமையின் போது புனித நகரில் பொருத்தப்பட்டிருக்கும் 5000 க்கும் அதிகமான கெமராக்கள் ஊடாக யாத்திரிகர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதில் மக்கா பெரிய பள்ளிவாசலில் மாத்திரம் 1,200 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அதேபோன்று சட்டவிரோதமான முறையில் ஹஜ் கடமையில் பங்கேற்ற யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் 65 வீதத்தால் குறைந்திருப்பதாக அல் எக்திசாதியா பத்திரிகை மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, சவூதி அரசின் விதிகளை மீறி இம்முறை 484,000 யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் பங்கேற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுவே கடந்த ஆண்டில் 1.4 மில்லியன் பேர் இவ்வாறு ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர். மக்காவை சுற்றி அமைக்கப்பட்டி ருக்கும் 6 சோதனைச் சாவடிகளையும் தவிர்த்து பல்வேறு இரகசிய பாதைக ளூடாக புனித நகரங்களை வந்தடைந்த ஹஜ் யாத்திரிகர்களையே சட்டவி ரோதமன யாத்திரிகர்களாக கணிக்கப் படுகிறது. Tn
Post a Comment