கட்சிகளின் தலைமைத்துவங்கள் - பறிபோகும் கட்சித் தலைவர்கள்
இலங்கையில் இரண்டு கட்சிகள் மாத்திரமே அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளன. அந்த வகையில் ஐக்கியதேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சியமைப்பதும், சில காலங்களின் பின்னர் அவர்களை மக்கள் வெறுப்பதும், மீண்டும் ஆட்சியமைப்பதும் வரலாறு. கட்சிகளின் தலைவர்கள் நாட்டின் தலைவர்களாக மாறி ஆட்சியில் இருப்பதும், பின்னர் கீழே இறங்குவதும் வழமையான வாடிக்கையான விடயம். பொதுவாக தலைவர்களாவதும், அவர்களை கீழே இறக்குவதும் மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளன என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன. 1977ஆம் ஆண்டில் இக்கட்சி ஆட்சிபீடமேறி, எதிர்க்கட்சி ஆசனத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பாராளுமன்றத்தில் வந்தபோது அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா இந்நாட்டில் எக்காலத்திலும் எதிர்க்கட்சியாக சிறுபான்மைக் கட்சிகள் வரவே கூடாது என்பதை நினைவிற் கொண்டு அரசியல் திட்டத்தினை வரைந்து இன்றுவரை இடியப்பச் சிக்களுக்குள் மாட்டிவைத்து, 17ஆண்டுகள் ஐக்கியதேசிய கட்சியின் ஆட்சி நீடித்தது. அக்கால கட்டத்தில் மக்கள் இவர்களது ஆட்சியின்மீது வெறுப்பைக் காண்பிக்க மீண்டும் சுதந்திர கட்சியினரை மக்கள் ஆட்சிபீடமேற்றினர்.
ஆதன் பின்னராக காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு பல எத்தனங்கள் மேற்கொண்ட போதிலும் முடியாமல் தொடர் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு கட்சியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலைமையில் கட்சியின் தலைமைப்பீடத்தை மாற்றியமைக்கின்ற போதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு மீண்டும் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிபீடமேற முடியும் என்கிற நிலையைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகள் அண்மைக்காலமாக மிகவும் காரசாரமாக பதிவாகி வருகின்றன. இதன் ஒரு கட்டத்தினை தற்போது கடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிரேஷ்ட தலைவராக உருவாகின்ற ஒருநிலைமையும் காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தளவில் இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1948 இல் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசாங்கத்தை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார். கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் இக்கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த எந்தத் தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தே வந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க மார்ச் 24, 1949ஆம் ஆண்டில் பிறந்தவர். 2002 இல் நடைபெற்ற தேர்தலில் இலங்கையின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டபோது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிமீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் முக்கிய பங்காற்றியிருந்தார். இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் தற்போது கட்சியினுள் நிலவும் உட்பூசலைத்தீர்க்க கடும் முயற்சி எடுத்து வந்திருந்தாலும், அது தீவிரமாகியுள்ளதால் எப்படியும் ரணில் தலைமைப்பதவியிலிருந்து விலகியே தீரவேண்டும் என்பதில் கடும்போக்காளர்கள் சிலர் உறுதியாக உள்ளனர்.
கட்சிக்குள் மாற்றத்தை நோக்காக் கொண்டு கடந்த வாரங்களில் கட்சியின் பொறுப்பாளர்கள் தங்களுடைய பதவிகளை இராஜினாமாச் செய்வதாக செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் முன்னாள் ஜனாதிபதியின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய ஆகியோருடன் பிக்குகள் முன்னணியும் உக்கிரமமான கூட்டங்களை நடாத்தி எதிர்க்கட்சித் தலைவரை நீக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவே செய்திகள் கூறுகின்றன.
கட்சியை இயக்கச் செய்வதற்குரிய ஒரு சபையும், அதற்கான அதிகார வரம்புகள் குறித்து தீர்மானிக்கும் கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதி தலைவர்களான கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிரேதமாச ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியடைந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து அண்மையில் கூடிய செயற்குழு தலைமைத்துவ சபை ஒன்றை அமைக்க தீர்மானித்தது. அதன் தலைவராக கரு ஜெயசூரியவை நியமிக்கவும், மற்றைய உறுப்பினர்களாக ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவையும் உள்வாங்க முடிவு செய்திருந்தது. இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, கட்சியின் தலைவருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, தலைமைத்துவ சபைக்கு அதிகாரங்கள் கையளிக்கப்படும் என்று தெரியவருகிறது.
கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் ரணிலுடன் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் விளக்கமளித்தபோது இதனைக் கூறியிருந்தார். ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கட்சியின் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சஜித் பிரேமதாஸ, எந்தவொரு விடயம் தொடர்பிலும் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என மிகவும் தெளிவாக என்னால் கூற முடியும். அத்தகைய இணக்கப்பாடு எட்டப்படாமையே அடுத்த வாரம் மற்றுமொரு கலந்துரையாடலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படவுள்ளது.; ஒரு சில விடயங்கள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், ஒழுக்க ரீதியில் ஏற்புடையதாக அமையாததால் இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து என்னால் விபரிக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இணக்கம் எட்டப்படாத யோசனைகள் கட்சியின் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஐக்கிய பிக்குகள் முன்னணி சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரியவிடம் எட்டு யோசனைகளை முன்வைத்திருந்தது. அதில் ஐந்து யோசனைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஐக்கிய பிக்குகள் முன்னணி முன்வைத்த யோசனைகள் பின்வருமாறு. ஒன்று, ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஸ்ட தலைவராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தலைவராகவும் செயற்படல், இரண்டு, கட்சியை இயக்கிச் செல்ல தலைமை சபை ஒன்று அமைக்கப்படுதல் அது கட்சியை இயக்கிச் செல்லும் பூரண அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும், மூன்றாவது, அமைக்கப்படும் சபை தலைமை சபை என பெயரிடப்படுதல், நான்காவது, கட்சி தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் தலைவர் சபையிம் ஒப்படைக்கப்படுதல், ஐந்தாவது, கட்சியால் முன்னெடுக்கப்படும் அனைத்து நியமனங்கள் மறுசீரமைப்புக்கள் அனைத்து தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் கட்சியின் தலைவர், சபைக்கே இருக்க வேணடும், ஆறாவது யோசனை தலைமை சபை அமைக்கப்பட்ட பின்னர் கட்சியின் செயற்குழு உள்ளிட்ட கட்சியின் அனைத்து அமைப்புக்களையும் இயக்கும் அதிகாரம் தலைவர் சபைக்கு பூரணமாக ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஏழாவது யோசனையாக தலைமை சபையின் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஒன்பது பேர் தலைமை சபையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தலைமை சபையில் உள்ளடங்கும் ஏனையவர்களை ஐக்கிய பிக்குகள் முன்னணியே தெரிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அனைத்து யோசனைகளும் இரண்டு வாரத்துக்குள் செயற்படுத்த வேண்டும் என தனது எட்டாவது யோசனையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு முன்வைத்த யோசனைகளில் முதலாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது யோசனையை ரணில் விக்கிரம சிங்க ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த யோசனைகள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதி பெற வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய பின்னடைவிற்கும் தொடர்ச்சியான தோல்விகளுக்கும் கட்சியின் தலைமைத்துவமே காரணம் என்கிற குற்றச்சாட்டுக்கள் பலபக்கத்திலிருந்தும் வெளிவந்துள்ள நிலையில் அக்கட்சித்தலைவர், கட்சியின் செயற்பாடுகள்மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்தி குணரத்ன தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில் 'இன்று நாட்டில் எதிர்கட்சியொன்று இல்லாத ஒரு நிலையே காணப்படுகிறது. அந்தளவிற்கு ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. எந்தவொரு நாட்டிலும் இப்படியான ஒரு நிலைமை இல்லை. எதிர்கட்சியென்பது அடுத்து ஆட்சிக்கு வரவிருக்கும் கட்சி அந்த கட்சி படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் முன்னேற்றமடையவேண்டுமே தவிர பின்னடைவை சந்திப்பதென்பது மிகவும் பயங்கரமானது.
எனவே கட்சி அந்த நிலைமையை உணர்ந்து கட்சியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மாறாக தமது தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியை பயன்படுத்தக் கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் அது கட்சியின் ஆதரவாளர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். அதனையே இன்று ரணில் விக்கிரமசிங்கவும் திஸ்ஸ அத்தநாயக்கவும் செய்து வருகின்றனர். கட்சியொன்று தோல்வியடையும் பட்சத்தில் அதன் தலைவர்கள் தாமாகவே பதவி விலகி மற்றவர்களிடம் பதவியை கையளிப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்தும் இருக்கிறோம். ஆனால் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்தும் மக்கள் வேண்டாம் என்று வெறுத்தும் பலவந்தமாக கட்சித் தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியில் தான் பார்க்கிறோம். இப்படி தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் கட்சியை பயன்படுத்துகின்றமையினாலேயே கட்சி ஆதரவாளர்கள் வெறுப்படைந்துள்ளார்கள். எனவே கட்சியின் இந்த பாரிய வீழ்ச்சிக்கும் பின்னடைவிற்கும் ரணில் விக்ரமசிங்கவும் திஸ்ஸ அத்தநாயக்கவுமே பொறுப்பு கூறவேண்டும்' எனவும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே மாத்தரையில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற சம்பங்களும், மங்கள சமரவீர கைது போன்றனவும் தலைமைத்துவத்திலிருந்து ரணில் நீக்கப்பட வேண்டும் என்கிற கோஷங்களின் அடிப்படையிலேயே இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைப் பதவியும் ஆட்டங்காணத் தொடங்கிவிட்டதா?
இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் ஒரு காலகட்டத்தில் பாராளுமன்றில் மூன்றாவது நிலையிலிருந்த கட்சி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியாகும். இன்று அக்கட்சியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. காரணம் அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென கட்சியின் உள்ளேயும், வெளியேயும் வலுப்பெற்று வருகின்ற ஒருநிலைமையும் காணப்படுகின்றது. சில உயர்பீட உறுப்பினர்கள் பலர் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தனது வீட்டுச் சொத்துப் போன்று ஹக்கீம் பாவிப்பதாகவும், தனக்கு நிகராக வருவார்கள் என குறிப்பிடக் கூடியவர்களை தொடர்ந்தும் ஓரங்கட்டி வருவதும், முஸ்லிம் காங்கிரஸின் இதயமான அம்பாரை மாவட்டத்தை புறக்கணிக்கின்றார் என்கிற பல விடயங்களை முன்னிறுத்தி தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து ஹக்கீமை நீக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரகசியப் பேச்சு வார்த்தைகள் கொழும்பிலுள்ள உயர்பீட உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றதாகவும், தான் மாத்திரம் அமைச்சராக இருக்க வேண்டும் வேறு எவரும் அமைச்சராக பதவி வகிக்க முடியாது அதிலும் அம்பாரை மாவட்டத்தில் அமைச்சர் வரவே கூடாது என்ற மனநிலையில் ஹக்கீம் இருப்பது மக்களை அவமதிக்கின்ற செயல் எனவும் சில முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அமைச்சர் ரஊப் ஹக்கீமை தலைமைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஆரம்பப் படிகளை முன்னடுத்து பாரிய அளவில் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் உயர்பீட உறுப்பினர்கள் சந்திப்பில் திர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. என்னதான் நடக்கப்போகின்றது என்பதை காலம் பதில் சொல்லும். எகிப்து போன்று மக்கள் அலையை ஹக்கீமுக்கு எதிராக திருப்பினால் வெற்றிகிட்டும். அதற்கான தருணம் வட்டாரத் தேர்தல் முறை தலைமைத்துவ மாற்றத்திற்கு வழி ஏற்படுத்தலாம் எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர்களுக்கு கண்மண் தெரிவதில்லை. ஆட்சியிலிருப்பதற்காக என்னவெல்லாம் செய்து மக்களை தன் வசப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்வார்கள். அது அக்கால கட்டத்தில் காணப்பட்ட தலைமைத்துவ வசீகரங்களாகும். இப்போது அவைகள் பலிப்பதில்லை. காலத்திற்கேற்றவாறு மக்கள் மத்தியில் உண்மையைக் கூறி நடப்பதை மாத்திரம் கூறவேண்டும், அதனை செயலில் காட்டவும் வேண்டும். தலைமைப்பொறுப்புக்களை பெற்றவர்கள் தலைவர்களாக அரியாசனம் ஏறியவுடன் அனைத்தையும் மறக்கலாகாது. அவ்வாறு மறக்கின்றபோது எகிப்தில், லிபியாவில் சிரியாவில் நடப்பதைப்போலவே நடைபெறும் என்பதை நம் கண்முன்னே இறைவன் காண்பித்துள்ளான். மக்களுக்காகத்தான் அனைத்தும். சரியாக செய்யமுடியாதவிடத்து மற்றவரிடம் கொடுத்துவிட்டு வழிவிட வேண்டும். இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் நடப்பது அதுதான் என்பதை மக்கள் நன்கறிவர். இதனை நன்கறிந்து கொண்ட இன்றைய ஆட்சியாளர்களும் தலைமைக்குச் சண்டை பிடிப்பவர்களை நன்றாகவே பயன்டுத்துகின்றனர். (தந்திமகன்)
Post a Comment