மத்திய அரசாங்கத்தின் ஆட்சி, ஆளும் கட்சியின் கைவசம் உள்ளது என்பதை மறந்து செயற்பட முடியாது
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் வாழும் அனைத்து சமூகமும் தமது உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை வடமாகாண சபை ஆற்றும் எனில் அதற்கான ஆதரவினை தாங்கள் வழங்கவுள்ளதாக வடமாகாண உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நடை பெற்று முடிந்த தேர்தலை பொருத்த வகையில் மிகவும்,நேர்மையாக நடை பெற்றுள்ளது என்பதை இன்று வடமாகாண சபையின் ஆட்சியினை கைப்பற்றியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வராக தெரிவாகியுள்ள விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுப்பதும் தமது பணியாகும் என்பதையும் அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த உரையினை எதிர்கட்சியினர் என்ற வகையில் நாம் வரவேற்கின்றோம்.கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் இன ரீதியான பிளவினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது.இன்றும் சிலர் அதே சிந்தனையில் தான் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
எம்மை பொருத்த வரையில் வடக்கில் எந்த சமூகம் தத்தமது பிரதேசங்களில் வாழ்ந்தார்களோ.அவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை,அவர்கள் அதே இடத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழ வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.எமது கட்சியின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தமது அரசியல் காலத்தில் ஆற்றியுள்ள பணிகள் சகல சமூகத்திற்கும் பொதுவானதாக,பாதிப்புக்குள்ளானவர்களின் தேவைகளை முதன்மைபடுத்தியதாக அமைந்துள்ளதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
மத்திய அரசாங்கத்தின் ஆட்சி என்பது ஆளும் கட்சியின் கைவசம் உள்ளது என்பதை மறந்து எவரும் செயற்பட முடியாது,மத்திய அரசாங்கமே மாகாண சபைகளுக்கான நிதிகளையும்,ஏனைய உதவிகளையும் வழங்க வேண்டும்.நாம் இன்று வடமாகாண சபையில் எதிர்கட்சியினராக இருந்த போதும்,ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் பிரதி நிதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வடமாகாண சபையில் எமது உறுப்பினர்களை பொருத்த வரையில் ஒரே சிந்தணையினையும்,இலக்கினையும் கொண்டவர்களாக செயற்படுகின்றோம்.இந்த வடமாகாண மக்களுக்கும்,பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்து மீள்குடியேற முடியாமல் இருக்கும் அனைத்த சமூகத்தினதும் மீள்குடியேற்றம் கௌரவமாக இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.அதனை நடை முறைப்படுத்துவதில் வடமாகாண சபை எமது ஆக்க பூர்வமான அலோசனைகளையும்,எமது அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
இன்று வடக்கில் உள்ள சில திணைக்களங்களில் புதிய அரசியல் பழிவாங்கல்கள் இடம் பெறுவதாக அறிகின்றோம்.இது குறித்து நாங்கள் விழிப்பாக இருக்கின்றோம்.இதன் மூலம் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் அரச இயந்திரத்தின் கட்டமைப்பு என்பவைகளை சீர்குலைக்க முயலம் சக்திகள் இந்த குறுகிய நோக்கத்திலிருந்து விடுபட்டு மக்களுக்கான அபிவிருத்தியினையே முதன்மைப்படுத்தி செயலாற்ற வேண்டும் என்பதை கூறிக் கொள்ளவிரும்புகின்றேன் என றிப்கான் பதியுதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment