திருமணத்தை நிறுத்துவதற்காக..!
இங்கிலாந்தில் திருமணத்தை நிறுத்துவதற்காக மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மணமகனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் கிர்பி நகரை சேர்ந்தவர் நீல் மார்டல் (36). இவருக்கும் அமி வில்லியம்ஸ் (32) என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. லண்டன் லிவர்பூல் செயின்ட் ஜார்ஜ் ஹாலில், கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அன்றைய தினம் காலை திருமண ஹாலில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. மணமகள் அமி வில்லியம்ஸ், திருமண உடை அணிந்து மணப்பெண் அலங்காரத்துடன் ஜார்ஜ் ஹாலுக்கு சென்றார்.
மணமகன் நீல் மார்டலும் திருமணத்துக்கு கிளம்பிய போது தான், ஜார்ஜ் ஹாலில் திருமணம் நடத்த முறைப்படி பதிவு செய்ய மறந்து விட்டதை உணர்ந்தார். இதை வெளியில் கூறினால், மணமகள் தன்னை பற்றி தவறாக நினைத்து விடுவாரே என எண்ணினார் நீல்.
உண்மையை சொல்லாமல் எப்படி திருமணத்தை நிறுத்துவது என திட்டம் தீட்டினார். அப்போது விபரீத ஐடியா மனதில் தோன்றியது. விறுவிறுவென அருகே உள்ள பொது தொலைபேசி நிலையத்துக்கு சென் றார். அங்கிருந்து ஜார்ஜ் ஹாலுக்கு போன் செய்தார். ‘ஹாலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து விடும்‘ என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் உள்பட அங்கிருந்த அனைவரும் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன் திருமண மண்டபம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அங்கு வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
திருமணத்தை நிறுத்த யாரோ வதந்தியை பரப்பியது தெரியவந்தது. மிரட்டல் வந்த போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, மணமகன் நீலின் கைவரிசை தெரிந்தது. இதையடுத்து போலீசார் மார்டனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை லிவர்பூல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குண்டு மிரட்டல் விடுத்த நீலுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Post a Comment