உலக ஆசிரியர் தினம்..!
(இன்று உலக ஆசிரியர் தினம் ஒக்டோபர் 06ஆந் திகதியாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
(அட்டாளைச்சேனை : எஸ்.எல். மன்சூர்)
சர்வதேச ஆசிரியர் தினம் வருடந்தோறும் ஒக்டோபர் 6இல் இலங்கையில் கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்கள் தங்களுடைய பாடசாலைகளில் அங்கு கல்விபயிலும் மாணவர்களால் பூத்தூவி, மாலையிட்டு, பரிசுவழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். ஆசிரியர்களது சேவைகளைப் பாராட்டி பத்திரங்கள் வழங்குகின்றனர். இத்தனைக்கும் மாணவர்கள் தங்களுடைய சொந்தச் செலவிலே இதனைச் செய்கின்றனர். பாடசாலையில் மாணவத்தலைவர்கள் இவ்விழாவை செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தின்பேரில் மேற்கொள்கின்றனர். அதேவேளை ஆசிரியர்களை கௌரவிக்கும் மாணவர்களது சிறுவர் தினத்தன்று எத்தனை ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கி, மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர்? கடந்த ஒக்டோபர் முதலாந்திகதி எமது வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் வகுப்பறையை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தேன். தரம் 3 வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியை தன்னுடைய வாண்மைத்துவத்தை மிகவும் சிறப்பாகவே செய்து கொண்டிருந்தார். பாடமுடிவில் தன்னுடைய கைப்பையிலிருந்து அந்தப் பிஞ்சுள்ளங்களுக்கு சொக்லேட் மற்றும் இனிப்புப் பண்டங்களை பகிர்ந்து கொண்டார். இவற்றை யார் கொண்டுவந்தார்கள் என்றுகேட்டபோது தானே கொண்டு வந்ததாக ஆசிரியர் கூறினார். இன்று சிறுவர்களின் தினமல்லவா? ஆதலால் இதனைச் செய்தேன் என்றார்.
இந்த ஆசிரியர் இவ்வாறான செயலைப் பற்றி மாணவர்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் கூறுகின்றபோது அந்த ஆசிரியர்மீது எவ்வளவு அன்பைச் சொரிவார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றபோது இந்த ஆசிரியையை மாணவர்களின் பெற்றோர்களே நேரில் வந்து பாராட்டுவார்கள் அல்லது ஆசிரியைக்கு பரிசுப் பொருள்களை அனுப்பிவைப்பார்கள் அல்லவா! ஆனால் இன்று பாடசாலைகளில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் நோக்கில் கட்டாயத்தின் பேரில் பல ரூபாய்களை மாணவர்களிடமிருந்து அறவிட்டு தங்களை தாங்களே உயர்த்திக் கொள்கின்ற விடங்களும் உண்டு. இது தவிர்க்கப்படுதல் வேண்டும். உண்மையான ஆசிரியத்துவத்தை அந்த மாணவர்கள்மீது செலுத்துகின்றபோது அந்த மாணவர்களும், மாணவர்களின் ஊடாக பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன், விருப்புடன் பரிசுகள் பல வழங்கி கௌரவிக்கின்ற நிலைமை ஏற்படுமல்லவா? இவ்வாறு நடைபெறுகின்ற ஆசிரியர் தினவிழாக்கள்தான் உண்மையான ஆசிரியர்கள் தினவிழாக்கள் என்று கூறலாமல்லவா!
சில பாடசாலைகளில் சில ஆசிரியர்கள் தங்களுடைய நேரத்தை களவாடுகின்றனர். மாணவர்களுக்கு பாடத்தை ஒழுங்குமுறையாக கற்பிக்காமல் மாலையில் அதே மாணவர்களிடமிருந்து பணத்தைக் கறந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களை அந்த மாணவர்கள் பாராட்டி பரிசு வழங்கினாலும் அது உண்மையான பரிசாகக் கொள்ளலாமா? இதுதான் இன்று நடைபெறுகின்றது. இது தவிர்க்கப்படவேண்டும். உண்மையான ஆசிரியர்களாக ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டும். மாணவர்கள்மீது உண்மையான அன்பைக் காண்பித்து, கற்றலின்பால் கவனம் செலுத்தி, அவர்களது அடைவுமட்டத்தினை உயர்த்துவதற்கு ஏணியாகவும், தோணியாகவும் தன்னை புடம்போடவேண்டும். சில ஆசிரியர்கள் தமது பாடநேரத்தில் தேநீர் சாலைகளுக்குள் காலத்தைக் கழிக்கின்றனர். சிலர் தங்களுடைய சொந்த வேலைகளை வகுப்பறையில் செய்து கொள்கின்றனர். சிலர் பாடத்தையே கற்பிக்காது வம்பளகின்றனர். சிலர் கற்பித்தல் உபகரணம் எதுவுமே இன்றி கற்பிப்பதாக பாசாங்கு செய்கின்றனர். இவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த மாணவர்கள் உண்மையான அன்புடன் பரிசுகளை வழங்குவார்களா? அல்லது பாராட்டுத்தான் கூறுவார்களா?
ஒரு ஆசிரியரின் அற்புதமான சேவையைப் பாருங்கள் 'இந்தியாவிலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒவ்வொருநாளும் நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் கற்பித்துக் கொடுக்கின்றார். கழுத்தளவு தண்ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூபைக் கட்டிக் கொண்டு தனது டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் தூக்கிக் கொண்டு தினசரி காலை பள்ளிக்கூடத்திற்கு வருகிறார் இந்த ஆசிரியர். மாலையிலும் இதேபோல பயணம். வயது40. மலிக் என்பது இவரது பெயர். ஏன் இந்த நீர்ப் பயணம்.. எதற்காக இப்படி ஒரு பயணம் என்று அவரிடம் கேட்டால், பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் சுத்தி வரவேண்டும். அதற்குள் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விடும். எனவேதான் நீச்சலடித்து வருகிறேன். இது சுலபமானதும் கூட, சீக்கிரமும் வந்து விடலாம். பாடசாலைக்கு நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி வருகிறேன் என்கிறார். இவர் செய்யும் பணிகளும், காட்டும் அக்கறையும், ஈடுபாடுட்டையும் பார்த்த அப்பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் கடந்த ஆசிரியர் தினத்தில் மலர் கொத்து, இனிப்புகளை வழங்கி அவரை வாழ்த்தினர்.' இந்தியாவில் செப்டெம்பர் 5இல் சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
அதனால்தான் ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது. கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள். இவர்களைத்தான் பாராட்டவேண்டும். இவ்வாறான ஆசிரியர்கள் தங்களுடைய பாடசாலைகளில் எத்தனை வீதமாணவர்களாகக் காணப்படுகின்றனர் என்பதை மாணவர்களிடம் கேட்டால் பதில் கூறுவார்கள். சில பாடசாலைகளில் சில ஆசிரியர்களை வேண்டாம் என்கின்ற அதிபர்களும் உண்டு. அந்த ஆசியரா? வேண்டாம். இந்த ஆசிரியரா? வேண்டாம். அவரைத் தாருங்கள். இந்தப்பாடசாலையில் இருக்கின்ற ஆசிரியர்களைத் தாருங்கள்? என்றுதான் கேட்கின்றார்கள். சில ஆசிரியர்கள், குறிப்பாக இளம் ஆசிரியர்கள்கூட வகுப்பில் கற்பிக்காமல் இருந்து காலத்தைக் கழிக்கின்றனர். இவர்களை எந்தப் பாடசாலையும் ஏற்றுக் கொள்ளாத நிலைமை பல இடங்களிலும் உண்டு. இவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர். இவர்களையும் பாராட்டத்தான் வேண்டுமா?
ஆசிரியர் என்கிறபதத்திற்கு குற்றம் அற்றவன் என்கிற பெயரும் உண்டு. இன்று சில ஆசிரியர்கள் வகுப்பறைகளில் வளர்ந்த பெண்பிள்ளைகள் தொடக்கம் சிறுவயது குழந்தைகளையும் சில்மிஷத்திற்கு வித்திடுகின்றனர். இவர்களை சமூகம் கண்டுபிடித்து தக்க பாடத்தை வழங்கவேண்டும். நாட்டில் பலசம்பங்கள் அண்மையக் காலமாக இடம்பெற்று வருகின்றன. இது அருவருக்கத்தக்க விடயங்களாகும். பத்திரிகை வாயிலாக இவற்றை நாளாந்தம் பார்க்கின்றோம். கேள்விப்படுகின்றோம். ஆண்மையில்கூட நீர்கொழும்புப் பிரதேசத்தில் ஒரு அதிபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன். பெண்பிள்ளைகள் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். சிறுவர்களது உரிமைகளை மதிக்காமல், அவர்களுடைய கல்விக்கே வேட்டுவைக்கின்றனர். சில ஆசிரியர்களும், சில அதிபர்களும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவது அந்த சமூகத்திற்கே கெட்டபெயரை வழங்கிவிடுகின்றது. இதற்குரித்தான சட்டரீதியான தண்டனைகளை விரைவாக வழங்குகின்றபோது மேலும் மேலும் நடவாது தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் அல்லவா?
சில பாடசாலைகளில் சில அதிபர்கள் தாங்கள் நினைப்பதுபோல பாடசாலைகளின் சொத்துக்களை கையாடுகின்றனர். தரமான உள்ளீடுகளுக்கு வருகின்ற பணத்தை திருடுவதிலும்க, அதற்குரிய கணக்கை தவறாக காண்பிப்பதிலும் குறியாக இருக்கின்றனர். மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளில்கூட சரியான அளவுகளில் வழங்காது டிமிக்கி கொடுப்பவர்களும் உண்டு. சில ஆசிரியர்கள் இவ்வாற அதிபர்களுக்குத் துணையாக இருக்கின்றனர். இவர்கள் இவ்வாறான அதிபர்களுக்குள் இருப்பதால் அவர்கள் கற்பிப்பதில்லை. இவைகள் தவிர்க்கப்படுதல் வேண்டும். மாணவர்களின் கற்றலின்பால் ஆசிரியர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும். சில வகுப்பறைகளில் சில மாணவர்கள் தங்களுடைய கற்றலுக்கு உதவுவார் யாருமின்றி மீண்டும் மீண்டும் பின்னடைந்து செல்வதன் காரணமாக அவர்கள் பாடசாலையை விட்டும் விலகுகின்றனர். இது கட்டாயக் கல்விமீது தாக்கத்தை ஏற்படுத்தி இடைவிலகும் பட்டியிலுக்குள் பல மாணவர்கள் செல்கின்றனர். அவர்களிடம் ஏன் விலகினீர்கள் என்று கேட்டால் அவர்களில் அதிகமானோர் கூறும் காரணம் ஆசிரியரது ஒழுங்கீனத்தையே கூறுவர்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பாடசாலையினுள் நுழைகின்ற மாணவர்களாக ஒழுக்கம், நல்லபழக்க வழக்கம், கற்றல் கற்பித்தல் என்கிற அறிவுக் கண்ணை திறக்கவைத்து அவர்களை சாதனையாளர்களாக்குபவர்கள் இந்த ஆசிரியர்களேயாவர். அவர்களை நினைவுறுகின்ற இன்றைய நாளில் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கியும், மலர் கொடுத்து, பரிசுவழங்குகின்றனர். வாழ்த்துகின்றனர். ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
ஆதலால்தான் தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகவாழ்ந்து, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டிய, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தியவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவர் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர். மனித வரலாற்றுடன் என்றுமே பிரிக்க முடியாத, சமுதாயத்திற்கே வெளிச்சமூட்டுகின்ற ஆசிரியர்கள் என்றுமே மதிக்கப்படுதல் வேண்டும் என்பதற்கான 'ஆசிரியர்களைக்' கௌரவப்படுத்தும் நோக்கில் இன்றைய நாள் அமைந்துள்ளது.
ஒக்டோபர் 05 'உலக ஆசிரியர் தினம் ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்பட்டபோதிலும், யுனெஸ்கோ நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, 'ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்' எனும் கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இந்த உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடுமாறும் வேண்டிக்கொண்டதற்கு அமைய இன்றைய ஆசிரியர் தினம் நினைவு கூறப்படுகின்றது.
எனவே, இன்றைய பாடசாலைகளில் ஆசியரின் பணி மிகவும் போற்றத்தக்கதாகும். நிறையவே வேலைப் பளுக்களைக் கொண்ட இன்றைய யுகத்தில் நவீன கற்றல் சாதனங்கள் குவிந்துள்ள வகுப்பறையில், அந்த மாணவர்களையும் நவீன யுகத்திற்கேற்ற சிறந்த சிற்பிகளாக மாற்றியமைக்கக் கூடிய வல்லமைமைய் கொண்டுள்ள ஆசிரியர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்படுகின்ற இந்தப் பிஞ்சு களிமண்ணுக்கு ஒப்பான மாணவச் செல்வங்களை தங்களுடைய கவனத்தையெல்லாம் ஒன்று திரட்டி சரியான முறையில் அவர்களைச் இன்றைய சமூகத்திற்கு ஏற்றவிதமாக உருக்கொடுத்து, ஒரு நல்லாசானாக ஆசிரியர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். பிரம்பும், கரும்பலகையும், வெண்கட்டியும் மறைக்கப்பட்டு மகிழ்ச்சிகரமான கற்றலை மேற்கொள்கின்ற வகுப்பறைகளாக மாற்றக் காணவைக்கின்ற ஆசிரியர்களாக மாறவேண்டும். அப்போது அந்த சமூகம் போற்றும். அந்த போற்றுதல்களே உண்மையான ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற கௌரவமாகும்.
very useful message.
ReplyDelete