மாணவர்களுக்கு திரிபோசா பிஸ்கட்களை வழங்கும் நடைமுறை அறிமுகம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும்பொருட்டு, பாடசாலை மாணவர்களுக்கு திரிபோசா மாவினால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்களை வழங்கும் நடைமுறையை 2014ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் வன்னியநாயக்க குறிப்பிடுகிறார்.
கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பிஸ்கட்கள் வழங்கும் நடைமுறை இருந்தது. இருப்பினும், அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அடுத்தவருடம் மாணவர்களுக்கு திரிபோசா மாவினால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
2004ஆம் ஆண்டு முதல் திரிபோசா மா இலவசமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நிறை குறைந்த சிறுவர்களுக்கும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டு வருகிறது.
சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் லங்கா திரிபோச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் திரபோசா மா உற்பத்தியானது 60 வீதத்திலிருந்து தற்போது 90 வீதமாக அதிகரித்துள்ளது. இதன் உற்பத்தியை 2014ஆம் ஆண்டில் 100 வீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுள்ளன.
உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய இயந்திரங்கள் இந்நிறுவனத்தில் பொறுத்தப்பட்டுள்ளன. இதன்; மூலம் உற்பத்தி செய்யப்படும் திரிபோச மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிஸ்கட்கள் 2014ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
மாணவர்களுக்கு திரிபோசா பிஸ்கட்டுக்களை வழங்குவது தொடர்பில் பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும் இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகவும் பேச்சாளர் சுட்டிக்காட்டுகிறார்.
இதேவேளை, தற்போது பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கல்விச் சேவைகள் அமைச்சினால் மதிய உணவு மற்றும் ஒரு கோப்பை பால் என்பவவை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment