Header Ads



முதலமைச்சர் விக்னேஸ்வரன்: மர்மங்களின் மொத்த உருவம்..!

(எஸ். ஹமீத்)

வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கும் வரை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திருவாளர் C.V. விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்தார். பூஜை புனஸ்காரங்கள் என்று ஆன்மீக வழியில் அவரது ஓய்வு காலம் கழிந்து கொண்டிருந்தது. வருடாந்தம் நடக்கும் கம்பன் விழாக்களில் தலைமை தாங்குவதும் உரையாற்றுவதும் அவருக்கு மிகப் பிடித்திருந்தது. தனது பிள்ளைகள், அவர்களின் துணைகள், அவர்களது பிள்ளைகள், தேர்ந்தெடுத்த மிகச் சிறந்த நண்பர்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் அவரது வாழ்க்கை வெகு இயல்பாகக் கழிந்து கொண்டிருந்தது. 

எதிர்காலம் மிகக் குறுகி விட்ட நிலையில் கடந்த காலங்களில் தன்னை அதிகமாக அமிழ்த்தி, ஞாபகங்களை இரை மீட்டுகின்ற வயதில் அவர் இருந்தார். தனது குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், இளமைப் பருவம், கட்டிளமைப் பருவமென அவரது நெஞ்சத் திரையில் அடிக்கடி எண்ணற்ற படங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் உள்ள குறைந்த சுமைகளும் கூடிய சுகங்களும் அவரை ஆகர்ஷித்துக் கொண்டிருக்கும். பல இன்பப் புன்னகைகள், சில ஏக்கப் பெருமூச்சுக்கள் அவரையறியாமலேயே அவரைத் தழுவியிருக்கும்.

ஒரு நீதிபதியாகத் தான் கடமை புரிந்த போது வழங்கிய தீர்ப்புகளின் ஓசைகள் கூட அவரது காதுகளில் திரும்பவும் கேட்டிருக்கும். சரியா..பிழையா என்று அவரது மனசாட்சி இரண்டாகப் பிரிந்து நின்று விவாதம் பண்ணியிருக்கும்.

அந்த ஏகாந்தம் தந்து கொண்டிருந்த சாந்தி-அமைதி-நிம்மதி அனைத்தையும், வட மாகாண சபை வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் இட்ட ஒரு கையொப்பத்தினால் அவர் தொலைத்துவிட நேர்ந்து விட்டது.

நெற்றியில் திருநீறிட்டு, பொட்டு வைத்து, இதயத்தில் பக்தி நிறைத்து, பரவசமாய் வாழ்ந்து கொண்டிருந்தவரின் பயணம் எதிர்பாராத விதமாய் பரபரப்பு மிக்கதும் சூழ்ச்சிகள் நிறைந்ததுமான அரசியற் குகைக்குள் நுழைந்துவிட்டது.

இந்த மாயக் குகைக்குள் அவரது வாழ்வின் கணங்கள் எவ்விதம் நகரப் போகின்றன என்பது திகைப்புக்குரிய கேள்வியாகும். தனது சுயத்துடன் அவர் போராடி வெற்றியடைவாரா அல்லது சுயமிழந்து, தொலைந்து போய்விடுவாரா என்பது காலத்தின் கைகளில் தங்கியிருக்கிறது.

அரசியலில் சாணக்கியம், இராஜ தந்திரம், காய்நகர்த்தல்கள் போன்ற கலைகள் அவசியமென்றும் இவை கைவரப் பெற்றவனே வெற்றிகரமான அரசியல்வாதி என்றும் கொள்ளப்படுவான். கூர்மையாக வியாக்கியானம் செய்தால் இவ்வாறான கலைகள் பொய்மையும் வஞ்சகமும் பொல்லாத சூதும் நிறைந்தவை என்பதுதான் உண்மையாகும். இத்தகு கலைகளை இனிமேல் கற்று, அதனைப் பிரயோகம் செய்தால் தான் நுழைந்து விட்ட அரசியற் குகைக்குள் அவர் தனக்குரிய ஒரு மாளிகையைக் கட்டிவிடலாம்.  அது முடியாமற் போனால், அந்தக் குகையிலிருந்து வெளியேறி மீண்டும் இலகு கதிரையில் கால் நீட்டிப் படுத்துக் கம்பராமாயணம் வாசித்தபடியே தனது கடைசிக் காலத்தைக் கழித்து விடலாம்.

''நாம் முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை!'' என்று மிக அண்மையில் கூறியிருக்கும் விக்னேஸ்வரனின் கூற்று, தமிழ் மக்களுக்கான 30 வருட கால ஆயுத, அரசியற் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளதெனக் குறை சொல்வோரும் இருக்கின்றார்கள்.  

'முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போனதனால்தானே, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிப் போராட ஆரம்பித்தார்கள்...' என்பது தெரியாமலா விக்னேஸ்வரன் அறிக்கை விடுகின்றார் என்று கேட்போரின் கேள்வியிலுள்ள நியாயத்தைப் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது. 

''வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை.'' என்று விக்னேஸ்வரன் சொல்வதன் அர்த்தம் என்னவென்று புரியாமல் இருக்கிறது.

இதுவரை இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஓர வஞ்சனையுடன் நடாத்தின - தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளைத் தர மறுத்தன என்ற அரசியற் காரணங்களுக்காகத்தானே சாத்வீகமான அரசியற் போராட்டங்கள் இரத்தம் வழிந்தோடும் ஆயுதப் போராட்டங்களாக  வடிவமெடுத்தன. அப்படியிருக்க 'வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை.'' என்று விக்னேஸ்வரன் சொல்வது, இதுகால வரையிலான தமிழ் மக்களின் போராட்டங்களைக் கேலியும் கிண்டலும் செய்வது போலல்லவா இருக்கின்றது என்று ஆதங்கப்படுவோரை ஆற்றுப்படுத்த வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 'அரசியற் காரணங்களினால் அரசாங்கத்தை எதிர்க்காமல், வேறு என்ன காரணங்களினால் எதிர்ப்பதாம்..?' என்று பாமரத்தனமாகக் கேள்வி கேட்கும் அப்பாவித் தமிழனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. 

'வட மாகாண தேர்தல் தமிழர்களின் மூன்றாம் கட்டப் போர்' என்றும் 'தமிழன் அவ்வளவு இலகுவாகத் துவண்டுவிட மாட்டான்' என்றும் தேர்தல் மேடைகளிலே சங்காரம் செய்த விக்னேஸ்வரன்-'எமது ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்தில் இணைந்திருப்பவர்களே' என்று கோபாவேசக் குரலெழுப்பிய விக்னேஸ்வரன்- இப்போது சாதுவாக அடங்கியொடுங்கி, அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துமாற்போலப்  பேசுவதன் மர்மம் என்ன..? சாணக்கியமா...? இராஜ தந்திரமா...? காய் நகர்த்தலா...?

அரச சார்பு ஊடகங்கள் கூட 'விக்னேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்' என்று சித்தார்த்தனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் ஆனந்த சங்கரிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் அறிவுரை கூறி ஆசிரியத் தலையங்கம் எழுதுவதன் பின்னணி என்ன...?

இதுகாலவரை இலங்கைத் தமிழ் மக்களின் ஆபத்பாந்தவர்களாகச் செயல்பட்ட புலம் பெயர்ந்த தமிழர்களையும், தமிழ்நாட்டின் வை. கோ, சீமான், ராமதாஸ், பழ.நெடுமாறன் போன்றவர்களையும் துச்சமென மதித்து விக்னேஸ்வரன் தூக்கி வீசியிருப்பதன் மர்மம் என்ன...?  இலங்கை அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தித் தமிழ் மக்களைக் கரை சேர்க்கும் எத்தனமா...? அல்லது வேறு ஏதாவது இராஜ தந்திரமா...?

இன்னும் ஏராளமான மர்மங்கள் விக்னேஸ்வரன் என்னும் வட மாகாண முதலமைச்சர் புகுந்து விட்ட மாய அரசியற் குகைக்குள் நிறைந்திருக்கின்றன. நேரமும் காலமும் கூடிவரும்போது அந்த மர்மங்களின் முடிச்சுகள் அவிழலாம்..அல்லது இன்னும் அதிகமாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்! 

1 comment:

  1. இலங்கை வாழ் தமிழர்கள் நலன்களுடன் எந்த தொடர்பற்ற புலம் பெயர் புலி ஆதரவாளர்களின் நலன்களுக்காக எஸ் ஹமீத் என்பவரால் எழுதபட்டது.

    ReplyDelete

Powered by Blogger.