சர்வதேச விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்க வசதி
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அழைத்துவரும் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவசியமாயின் அவற்றை இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரித்திருக்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை நேற்று அறிவித்தது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி இந்த உச்சிமாநாட்டின் போது சர்வதேச விமானங்களும் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான வசதிகளும் இருக்கிறது என்று கூறினார்.
உச்சிமாநாட்டின் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நெரிசல் இருந்தால் அதனைத் தளர்த்துவதற்காக சில விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்திலும் தரையிறக்கப்படுவதற்கான சகல பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். இப்போதும் கூட சிறிய ஜெட் விமானங்கள் இரத்மலானை விமானநிலையத்தில் தரையிறக்குவதற்கான வசதிகள் இருக்கின்றன.
எவ்வாறாயினும் சகல வெளிநாட்டுத் தலைவர்களும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தான் இறங்க வேண்டும். அங்கு தான் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படும். அதற்குப் பின்னர் சில வெளிநாட்டுத் தலைவர்கள் பயணித்த தனிப்பட்ட ஜெட் விமானங்கள் பாதுகாப்பாக தரித்திருப்பதற்காக இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பப்படும்.
இரத்மலானை விமான நிலையமே இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்த ஒரே ஒரு விமான நிலையமாகும். இது 1934ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னர் விமானப்படையின் விமான நிலையமாக இருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் 1967ம் ஆண்டில் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம் செய்யப்பட்டது.
Post a Comment