Header Ads



பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வைர புதையல் எங்கே..?

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி நாஸி படைகள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள தங்கம், வைரம், கரன்சி புதையலை ரகசிய இடத்தில் பதுக்கிவைத்தனர். அந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக லியோன் கெய்சன் என்பவர் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் நாஸி படைகள் எதிரிகளிடம் இருந்து கொள்ளையடித்த பணம், தங்கம், வைரம் போன்றவை ஜெர்மனியின் பல இடங்களில் ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன. இவை பல கோடி டாலர்கள் மதிப்புள்ளவை. இந்த புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்தான் பல ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்புள்ள புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார் லியோன். ஏற்கனவே சிறு சிறு புதையல்களை கண்டறிந்த லியோன் கையில் இந்த மேப் கிடைத்தது. தனது மியூசிக் நண்பரிடம் மேப்பை கொடுத்து ஆராய்ந்தார். மியூசிக் நோட்ஸில் மேத்யூ என்ற பெயரை வைத்து,  அவர் வாழ்ந்த ஊரான மிட்டர்வால்டு என்ற நகரை கண்டுபிடித்தார். அதன்பிறகு, எம் என்ற எழுத்து அதில் இருந்தது. பெர்லின் ரயில்வே ஸ்டேஷனில் எம் எழுத்தை ஒரு போட்டோவில் பார்த்தார். அதன்பிறகு ரயில்வே ரூட்களை ஆய்வு செய்தார். அமெரிக்க படைகள் ஜெர்மனியில் விமானத் தாக்குதல் நடத்தியபோது, எடுத்த போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தார். மிட்டர்வால்டு நகரில்தான் புதையல் இருக்கும் என்று கணித்தார். இதற்கிடையில் புதையலை எடுக்க பணம் தேவைப்பட்டது. மேப்பை 700 காப்பி எடுத்து, காப்பி 65 டாலர் என விற்று நிதி திரட்டினார். ஒரு காலத்தில் காடாக இருந்த அந்த இடம் இப்போது நகரின் முக்கியப் பகுதி. அங்கு 3 இடத்தில் போர்வெல் மூலம் குழி தோண்ட அனுமதி வாங்கினார். நவீன கருவிகள் மூலம் ஆய்வு நடத்தியதில் பூமிக்குள் வழக்கமாக இருப்பதை விட மாறுபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தங்கம் வைரமும் பெட்டி பெட்டியாக பதுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அந்தப் பகுதியில் கண்ணி வெடிகளும் வைக்கப்பட்டிருக்கும். எனவே அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும்தான் குழி தோண்டப்படும் என தெரிவித்துள்ளார் கெய்சன். ஆனால் 15 ஆண்டுகளாக மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடி வரும் புரோஸ்கே என்பவர் புதையல் இங்கு இருக்க வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கிறார். நானும் இதுவரை 60 இடங்களில் தோண்டிப் பார்த்து விட்டேன். புதையல் இருக்கும் ரகசிய இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிறார் இவர்.

புதையல் வேட்டை

ஆல்ப்ஸ் மலை பகுதியில் ஆஸ்ட்ரியா எல்லையில் அமைந்துள்ளது பவேரியா மலை அடிவாரம். இதுதான் புதையல் வேட்டைக்கு சரியான இடம். எப்போது பார்த்தாலும் ஏகப்பட்ட புதையல்தேடிகளை அங்கு காணலாம். பலர் பொழுதுபோக்காக கையில் ஒரு மேப்புடன் சீரியசாக குழி தோண்டிக் கொண்டிருப்பார்கள். சில இடங்களில் ஒரு குரூப்பே தோண்டிக் கொண்டிருக்கும். பல அதிர்ஷ்டசாலிகளுக்கு புதையல் கிடைத்துள்ளது. இப்படி எடுக்கும் புதையலின் மதிப்பில் 5 சதவீதத்தை எடுப்பவரே வைத்துக் கொள்ளலாம். அந்த புதையலுக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றால் அதில் பாதி எடுப்பவருக்கும் மீதி அரசுக்கும் போய் விடும். பலருக்கு புதையல் கிடைத்துள்ளது. இதனால் பலர் இதையே தொழிலாக வைத்து புதையலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

புதையல் ரகசியம்

தெற்கு ஜெர்மனியில் இருக்கிறது பவேரியா என்ற ஊர். இங்கு காட்டுப் பகுதியில் ஹிட்லரின் தளபதியான ஹெயின்ரிச் ஹிம்லர் இந்த புதையலை பதுக்கியதாக கூறப்படுகிறது. யூதர்களை கண்டுபிடித்து ரகசியமாக தீர்த்துக் கட்டி வந்த எஸ்எஸ் படைப் பிரிவின் தலைவன்தான் ஹிம்லர். இப்படி பதுக்கிய புதையல் குறித்த ரகசிய குறிப்புகளை ஹிட்லரின் செயலாளராக இருந்த மார்ட்டின் போர்மன், யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக மியூசிக்கல் நோட்ஸ் ஆக வைத்திருந்தார். இடையிடையே, புதையல் இடத்தைக் குறிக்கும் குறிப்புகள் ஆங்கில வார்த்தைகளில் சங்கேதமாக குறிப்பிட்டிருக்கும். 2ம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான படைகள் நடத்திய அதிரடி சோதனைகளில் அரசு ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன. அதில் புதையல் மேப்பும் சிக்கியது. ஆனால் இதன் மூலம் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கார்ல் ஹாமெர் என்ற பத்திரிகையாளர் கையில் இது கிடைத்தது. ஆனால் புதையலை கண்டுபிடிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன அவர் இந்த மேப் குறித்த விவரத்தை எல்லோருக்கும் தெரிவித்து விட்டு ஒதுங்கி விட்டார்.

No comments

Powered by Blogger.