ஐ. தே.க. யின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் இறுதிக் கூட்டமாக அமைய வேண்டும்..!
(vi) வார இறுதியில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டமானது கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் இறுதிக் கூட்டமாக அமைய வேண்டும். ரணில், சஜித், கரு ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியினை பலப்படுத்த முடியும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என்ற கருத்தினை ஊடகங்கள் சுயமாகவே உருவாக்கியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று ஸ்ரீகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த வாரங்களில் இருந்தே பேச்சுவார்த்தைகளும், கூட்டங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனினும் இதுவரையில் சரியானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இவ்வார இறுதியிலும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அபிவிருத்தி மற்றும் ஏனைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் எத்தனை சந்திப்புக்களையேனும் நடத்தலாம். அதில் எவருக்கும் எவ்விதமான தயக்கமும் இல்லை. ஆனால் தலைமைத்துவம், மறுசீரமைப்பு தொடர்பில் விவாதிப்பதாயின் இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் இறுதிக்கூட்டம் இதுவாகவே அமைய வேண்டும்.
ஏனெனில் இவ்வாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமைத்துவம் தொடர்பில் விவாதிப்பதானது ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத்திற்கே பாதிப்பினை ஏற்படுத்தும். ரணில், சஜித், கரு ஆகியோர் ஒன்றிணைந்து கட்சியினை முன்னெடுத்தால் மட்டுமே இப்போது நடந்து கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக் ஷ குடும்ப அரசியலையும், ஜனாதிபதியின் அராஜக அரசாங்கத்தினையும் கவிழ்த்து மக்களுக்கான சுயாதீன ஆட்சியினை அமைக்க முடியும். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இதனையே விரும்புகின்றனர்.
கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும், தலைமைத்துவ போட்டி இம் மூவரிடமும் காணப்படுவதாகவும் மக்கள் நினைத்தால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை ரணில், கரு, சஜித் ஆகியோர் புரிந்து கொள்ளவும் வேண்டும்.
மேலும் ஐ. தே.க. வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இணைந்து கொள்ளப்போவதாகவும் ஐ. தே. க. வின் தலைவர் பேச்சுவார்த்தைகளை விரும்பாது வெளிநாட்டு பயணத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவை முற்றிலும் பொய்யான விடயங்களாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எவரும் அரசாங்கத்திற்கு விலை போகவில்லை. இன்று எமது கட்சி இருக்கும் நிலையினைத் தெரிந்து அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கின்றனர். இதனை தவறாக இனங்கண்டு சில செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றமை வருந்தத்தக்க விடயமேயாகும்.
அதேபோல், தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுகயீனம் காரணமாகவே தனது வைத்திய தேவைக்காக வெளிநாட்டு பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதில் சுயநலப் போக்கோ தலைமைத்துவ ஆசையோ இருப்பதாக வர்ணிக்கக்கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கூட்டத்தில் இவர்கள் நிச்சயமாக நல்ல தொரு முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. எனவே ஐக்கிய தேசியக் கட்சியினைப் பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படு வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment