மட்டக்களப்பில் இசைக்கப்படவுள்ள பொட்ஸ்வானா நாட்டு தேசியக் கீதம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
எதிர்வரும் நவம்பர் மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எம்.டீ.வி மற்றும் எம்.பீ.சி நிறுவனங்கள் தேசிய இளைஞர் சேவை மன்றத்துடன் இணைந்து நடாத்தும் வாகன பவனி எதிர்வரும் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பனிமணை உதவிப் பணிப்பாளர் எம்.நைறூஸ் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பனிமணையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டு மாவட்ட ஊடகவியலார்களுடான வருடாந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டு மாவட்ட பணிமனையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியிலுள்ள வட கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று வரும் இந்த வாகன பவனி மாவட்டங்களுக்கு வரும் போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுநலவாய நாடுகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அந்த நாட்டைப் பற்றிய குறிப்பொன்றை மும்மொழிகளிலும் கூறப்பட வேண்டுமென்ற செயற்றிட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்புக்கு எதிர்வரும் 06ம் திகதி வருகை தரவுள்ள குறித்த வாகன பவனிக்கு மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து பொட்ஸ்வானா நாட்டு தேசியக் கீதம் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி மாணவிகளால் இசைக்கப்பட்டு அதே கல்லூரி மாணவிகளால் தமிழ்,ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் அந்த நாட்டைப் பற்றிய குறிப்பொன்றும் கூறப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பனிமணை உதவிப் பணிப்பாளர் எம்.நைறூஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் மற்றும் முக்கிய அதிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளில் அங்கத்துவம் பெற்றுள்ள 54 நாடுகளின் தேசியக் கீதங்கள் இலங்கையில் 54பகுதிகளில் இசைக்கப்பட்டு அவற்றைப் பற்றி சிறுகுறிப்பு மும்மொழிகளிலும் தெரிவிக்கப்படவுள்ளதுடன் குறித்த வாகன பவனி பருத்தித்துரையிலிந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment