Header Ads



பெற்றோர்களே உஷார்..! (உண்மைச் சம்பவம்)

மூன்று நாட்களுக்கு முன்பு முக நூல் Facebook நண்பர் ஒருவர் என்னை பார்த்து பேச வேண்டும் என மெஸேஜ் அனுப்பி இருந்தார். அவரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, சென்னை புறநகரில் அவரை சந்திக்க சென்றேன்..

அவர் ”சென்னை புறநகரில் உள்ள தனியார் பள்ளியில் என் மகள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள். அண்மையில் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவின் நடன நிகழ்ச்சியில் என் மகள் கலந்து கொண்டாள் அவள் ஒப்பனை அறையில் உடை மாற்றும் பொழுது, சக மாணவன் ஒருவன் என் பெண்ணையும், மற்ற சில மாணவ மாண்விகளையும் தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளான். அந்த புகைப்படத்தை வைத்து கொண்டு கடந்த மாதத்தில் ஒரு நாள் என் பெண்ணிடம் காட்டி நான் உன்னை காதலிக்கிறேன், என்னை நீ காதலிக்க வேண்டும். மறுத்தால் இந்த புகைப்படத்தை FACEBOOK-ல் உனக்கு TAG செய்வேன் என்று பயமுறுத்துகிறான் சார். கடந்த வாரத்தில் ஒரு நாள் என் மகள் தன் தோழியுடனான தொலைபேசி உரையாடலை எதேற்ச்சையாக கேட்க நேர்ந்தது. அதிர்ச்சியடைந்த நான் என் மகளை அழைத்து விசாரித்தேன். அனைத்து விவரத்தையும் கூறினாள். என் மைத்துனன் ஒருவர் காவல் துறையில் பணிப்புரிகிறார். அவர் மூலம் பிரச்சனையை கையாள நினைத்தேன். ஆனால் என் மனைவியோ என் தாயோ அதை விரும்பவில்லை. எனக்கும் என்ன செயவது என்று தெரியவில்லை. அந்த பையனின் பள்ளிப்படிப்பு பாதிக்கபட கூடாது என்பதால் தான் உங்களை தொடர்பு கொண்டேன் என்றார்.

இரண்டு நாட்களில் நல்ல முடிவை எடுப்போம் என்று அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். இரண்டு நாட்களில் அந்த மாணவன் பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் நம் அமைப்பின் நண்பர்கள் விசாரித்து தகவல் சேகரித்து கொடுத்தனர். அந்த மாணவன் வசிக்கும் பகுதியில் அவன் குடும்பத்தை பற்றி ஒருவர் கூட குறை கூறவில்லை. அவர்கள் அந்த பகுதியில் குடியேறி பத்து ஆண்டுகள் ஆகிறது. மிகவும் மரியாதையான குடும்பம் என விசாரித்த அனைவரும் கூறினர். அந்த மாணவன் மிகவும் நல்லவன் என்றும், மிகவும் மரியாதையானவன் என்றும் தான் தகவல் கிடைத்தது. ஆகையால் தவறு அந்த மாணவனின் வயதில் தான் இருக்கிறது; அவன் பெற்றோரை சந்தித்து விவரத்தை கூறி தகுந்த ஆலோசானை கூற முடிவெடுத்து நேற்று (14.10.2013) மாலை சென்றோம்.

அந்த மாணவனின் பெற்றோரிடம் எங்களையும் மாணவியின் தந்தையையும் அறிமுகப்படுத்திக் கொண்டு விவரத்தை கூறினோம். விவரத்தை அறிந்த அந்த மாணவனின் தந்தை, என் மகனுக்கு நான் கைப்பேசி வாங்கி தரவில்லையே அப்படி இருக்க அவன் எப்படி செய்திருக்க முடியும்? இதோ விசாரிக்கிறேன் என்றார். ஆனால் அவன் தாய் கையை பிசைந்து கொண்டு நின்றார். என்ன, உனக்கு ஏதாவது தெரியுமா என்று தன் மனைவியை பார்த்து கேட்டார் அவர். அதறகு அவர்கள், என்னிடம் கேட்டான் எல்லா மாணவர்களும் வைத்திருக்கிறார்கள்; எனக்கு அவமானமாக இருக்கிறது. அப்பா கேட்டால் திட்டுவார், நீ வாங்கி கொடு என்றான். எனக்கு இவரிடம் கேட்கக் தயக்கமாக இருந்தது. அதனால் என் தங்கையிடம் சொல்லி வாங்கி கொடுத்தேன். அப்பாவிடம் இப்பொழுது சொல்ல வேண்டாம் என நான் தான் கூறினேன் என்றார்.

உடனே அவர், அவனை இப்பொழுதே கூப்பிட்டு விசாரிக்கிறேன் என்று புறப்பட்டார். அவரை நாங்கள் சமாதானம் செய்து எங்கள் எதிரில் அவனைக் கண்டித்தால் பயந்து விடுவான் அல்லது கோபத்தில் மேலும் தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த முறை நீங்களே கண்டித்து நல்வழிக் காட்டுங்கள் என அவருக்கு கூறி விட்டு பிரத்தேயகமாக அவன் தாயிடம், ”பாசத்தின் மிகுதியால் நம் பிள்ளைகளின் வாழ்க்கையை நாமே கெடுத்து விடக் கூடாது; தினசரி செய்திகளை அன்றாடம் படியுங்கள். தொலைக்காட்சி செய்தி, நிகழ்வுகளை தினம் பிள்ளைளை வைத்து கொண்டு பாருங்கள். அவர்களிடம் இம்மாதிரியான செய்திகளை ஆரோக்கியமாக விவாதங்கள் செய்யுங்கள் என சில அறிவுரைகளை கூறி கொண்டு விடைபெற்றோம்.

அந்த மாணவனின் பெற்றோர் இருவரும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

குறிப்பு: பெற்றோர்களே! நம் எதிர்க்கால சமுதாயம் காட்டாற்று வெள்ளம் போல தடம் புரண்டு ஓடி கொண்டு இருக்கின்றது. அவர்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க விஞ்ஞான வளர்ச்சி ஒரு புறமும், அந்த விஞ்ஞான வளர்ச்சியின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பெற்றோர் ஒரு புறமும் செயல்படுகின்றனர். செய்தி தாள் வாசிப்பு குறைந்து, இருபத்தினான்கு மணி நேரமும், தொலைக்காட்சி தொடர்களின் கோர பிடியில் சிக்கியுள்ள தாய்மார்களுக்கும், பணம் சம்பாதித்து வீட்டிற்குத் தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்து விட்டால் நம் கடமை முடிந்து விட்டது என நினைக்கும் குடும்ப தலைவர்களுக்கும் தமிழ் நாடு சைபர் குற்ற விழிப்புணர்ச்சி அமைப்பின் சார்பாக ஒரு பணிவான வேண்டுகோள்:

இளைய சமுதாயத்தின் எதிர்க்காலம் குற்றங்களும், வன்மங்கள் நிறைந்த முகம் தெரியாத மனிதர்கள் நிறைந்துள்ளதுமான இணைய வெளியில் சிக்கி உள்ளது. அதை பாதுகாக்கும் தலையாய கடமை நமதாகும். தயவு செய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். நம் கவன குறைவே பிள்ளைகளுக்கு ஆபத்தாக முடிக்கிறது. நினைவில் கொள்ளவும்!

நன்றி Bhakthe Eswaran Rajan Nellai (சம்பத்தப்பட்டவர்களின் ஒப்புதலுக்கு பின்பே எல்லோரும் பயன் பெற இங்கே பதிவு செய்ய்ப்படுகிறது.)

நன்றி : பாலகணேசன் தேவராஜன்

No comments

Powered by Blogger.